English தமிழ்

கடந்த 2017ஆம் ஆண்டு, சபாநாயகர் தனபால், தினகரனை ஆதரிக்கும் 18 சட்டமன்ற உறுப்பினர்களை  தகுதி நீக்கம் செய்த வழக்கில்  அந்த உறுப்பினர்கள் வெற்றிபெற்றால், எடப்பாடி பழனிச்சாமி அரசு கவிழும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால்  முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்  உருவாக்கிய  சூத்திரத்தை  பின்பற்றி அதிமுக அரசு கொஞ்ச காலத்துக்காகவது ஆட்சியில் நீடிக்க  வழி இருக்கிறது.

இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதி எம். சத்யநாராயணன் இன்னும் ஓரிரு நாட்களில் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்புக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், மூன்றாவது நீதிபதி  வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும், அதுவே சென்னை உயர்நீதிமன்றம் பொறுத்தவரை இறுதி தீர்ப்பாக அமையும். இதற்கிடையில், உச்சநீதிமன்றம்   நீதிபதி எம்.சத்தியநாராயணனை மூன்றாவது நீதிபதியாக நியமித்தது குறிப்பிடத்தக்கது.

சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கில் மூன்றாவது நீதிபதி  தகுதி நீக்கத்தை ரத்து செய்தால்,  18    பேரும் சட்டசபையில் உறுப்பினர்களாகத் தொடர்வார்கள். இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தவிர, அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள், கள்ளக்குறிச்சி தொகுதி உறுப்பினர் ஏ.பிரபு, விருதாச்சலம் றுதொகுதி உறுப்பினர் விடி.கலைச்செல்வன், அறந்தாங்கி தொகுதி உறுப்பினர்  இ.ரத்தினசபாபதி ஆகியோர் தினகரனை ஆதரிக்கிறார்கள்.  இவர்களோடு, அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ர்று, அதிமுக உறுப்பினர்களாகத் தொடரும்  கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோரும் ஆதரிப்பார்கள். இவர்களோடு அமுமுக தலைவர் டிடிவி தினகரனையும் சேர்த்துக்கொண்டால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக 25 பேர் வாக்களிக்கக்கூடும்.

இந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணியைச் சேர்ந்த 97 சட்டமன்ற உறுப்பினர்கள் (திமுக-88, காங்கிரஸ்-8, முஸ்லீம் லீக் -1) என மொத்தம் 122 பேரும் அதிமுக அரசிற்கு எதிராக வாக்களித்து அரசை தோற்கடிக்கலாம்.   தற்போது சட்டசபையில் மொத்தம் 232 பேர் உள்ளனர். (மொத்தம் 234 இடங்களில் திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிறகள் காலியாக உள்ளன)   இந்த எண்ணிக்கைக்கு எதிராக, அதிமுகவில் மொத்தம் 109 சட்டமன்ற உறுப்பினர்கள் தான் உள்ளனர். (சபாநாயகர் தனபால் வாக்களிக்க முடியாது) ஆகையால், அதிமுக அரசுக்கு ஆதரவாக 109 வாக்குகள் உள்ள  நிலையில், எதிராக வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை 122ஆக இருக்க வாய்ப்புள்ளது. இந்த கணக்குகளை விட கள நிலவரம் வேறாக உள்ளது.

ஒருவேளை தகுதி நீக்க வழக்கில் 18 பேரும் வெற்றி பெற்றுவிட்டால், அதிமுக அரசு  இவர்களை ஏதாவது காரணம் கூறி மீண்டும் தகுதி நீக்கம் செய்ய  முயலும். ஒருவேளை, கட்சியின் கொறடா கட்டுப்பாட்டுக்கு இணங்கி, அதிமுக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பின் போதோ அல்லது நிதி  மசோதாவின்போதே வாக்களிக்காவிட்டால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அவர்கள் மீது   சதி அல்லது அரசை கவிழ்க்க முயற்சி எனக் கூறி தகுதி நீக்க  நடவடிக்கை எடுத்து, அரசைக் காப்பாற்ற முடியும்.

இதில், எப்படி  பி.ஹெச் பாண்டியன் சூத்திரம் வேலை செய்யும்? பாண்டியன், 1987-ல் டிசம்பர் மாதம் வரை பிளவுபடாத அதிமுக  ஆட்சி செய்யும் பொழுது சபாநாயகராக  இருந்தார். முதல்வர் எம்ஜியார் மறைவிற்கு பிறகு  அப்போது நடைபெற்ற அதிகாரச் சண்டையில் அதிமுக, வி.என்.ஜானகி  அணி ஜெயலலிதா அணி  மற்றும் வி.ஆர்.நெடுஞ்செழியன் அணி என பல பிரிவுகளாக உடைந்திருந்தது.

 அப்போது 90 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மேல்  எம்ஜியாரின் மனைவி ஜானகி அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனையடுத்து அவர் முதல்வராகவும் பதவியேற்றார். அப்போது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஜெயலலிதாவை ஆதரிக்கும் 33 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த காரணத்தால், அவர்கள் ஜானகி அரசிற்கு எதிராக வாக்களித்தால், ஜானகி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி பெறுவது நிச்சயம்.   அதனால், ஜெயலலிதா அணி உறுப்பினர்களை  வாக்களிக்கும் முன்பே அவர்கள்  அனைவரையும்  தகுதி நீக்கம் செய்ய பாண்டியன் திட்டம் வகுத்தார்.

 பொதுவாக தீர்மானத்தை ஆதரிப்பவர்கள்  அனைவரும்  முதலில் எழுந்து ஆதரவை தெரிவிப்பார்கள். அதற்கு பிறகு எதிர்த்து வாக்களிப்பவர்கள் எழுந்து நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கலாம். அதற்கு பிறகு நடு நிலைமை வகுப்போர் எழுந்து நின்று அவர்கள் நிலையை தெரிவிக்கலாம். இப்படியாக வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்தியாவின் சட்டசபை வரலாற்றை பார்த்தால், தீர்மானம் தோல்விபெற்ற பிறகு தகுதி நீக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதை எதிர்த்து பலர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த அணுகுமுறையை மாற்றி சபாநாயகர் பாண்டியன்  அப்போது சட்டசபையில்  ஒவ்வொரு பகுதியாக அமர்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் முறையை கொண்டுவந்தார்.  ஒவ்வொரு பகுதியிலிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க  இருந்தால் எழுந்து நிற்க கேட்டுக்கொள்ளப்படுவார்கள்.

 அந்த பகுதியில் இரண்டு ஜெயலலிதா அணி  உறுப்பினர்கள் இருந்தால், ஆவர்கள் அடுத்து அரசிற்கு எதிராக வாக்களிக்க அந்த பகுதிக்கு சபாநாயகர் வாய்ப்பை அளிப்பார், அப்பொழுது நாம் எழுந்து நின்று  நம் எதிர்ப்பை தெரிவித்து, தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்கலாம் என்று நினைத்திருக்கும்பொழுது, அந்த கட்டம் வரும் முன்னரே, கட்சி கொறடா இந்த இரண்டு உறுப்பினர்கள் எழுந்து நின்று வாக்களிக்கவில்லை, கொறடாவின் ஆணையை மீறியதால், அவர்கள் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தார்.   சபாநாயகரும், அந்த கோரிக்கையை உடனே ஏற்று, அந்த இரண்டு உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ததாக அறிவித்து, அவர்கள் அவையிலிருந்து வெளியேற்றுப்படுகிறார்கள். இப்படியாக, ஜெயலலிதா அணியின் உறுப்பினர்கள் வாக்களிக்க முன்னரே தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

 வாக்களிக்க முன்னரே, பகுதி வாரியாக, தினகரன் அணியை சார்ந்த 24 உறுப்பினர்களும்  தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதன் மூலம், அரசுக்கு ஆதரவான அதிமுக வாக்குக்கள் மட்டும் எண்ணப்பட்டு, தினகரன் அணியின் வாக்குகள் எண்ணப்படாமல், அரசு தப்பித்துக்கொள்ள ஒரு ஏற்பாடு தான் இந்த பாண்டியன் மந்திரம்.   முடிவில், 109 வாக்குகள் எடப்பாடி அரசிற்கு  ஆதரவாகவும், 98 வாக்குகள் (திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக், தினகரன்), எதிராகவும் பதிவுசெய்யப்பட்டுது என்று சபாநாயகர் தெரிவித்து, எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்றதாக  அறிவிக்கப்படலாம்.

 பி.ஹெச்.பாண்டியன் தற்போது கட்சியின் சட்ட அணி பொறுப்பாளராக இருப்பதால், அவர் பின்பற்றிய அதே வழி மீண்டும் பின்பற்றப்படலாம். இதன் மூலம் அரசு கவிழ்க்கப்படுவதிலிருந்து 6 மாதங்கள் தடுக்கப்படலாம். அதற்கிடையில் எடப்பாடி அரசைக் காப்பாற்ற பல வழிகளைக் கண்டுபிடிக்கலாம். மற்றொரு விஷயம், 1988, ஜனவரி 30-ல் ஜானகி  அரசு சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவில்லை, நம்பிக்கை தீர்மானம் சட்டப்படி நடைபெறவில்லை, அரசியல் சாசனம் படி அரசு நடந்துகொள்ளவில்லை என்று அப்பொழுதுள்ள ஆளுநர் மத்திய அரசிற்கு அறிக்கை அனுப்பினார். அதன் படி, ஜானகி அரசு கலைக்கப்பட்டது.

தற்போதைய ஆளுநர் அப்படிப்பட்ட நடவடிக்கையை எடுப்பாரா என்பது சந்தேகம் தான். தினகரன் அணியின் உறுப்பினர்கள் அவசரம் காட்டி மீண்டும் தகுதியை இழப்பார்களா அல்லது சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து திடீர் தாக்குதல் நடத்தி அரசை கவிழ்ப்பார்களா?  (நாளை இரண்டாம் பாகம்)

Pin It on Pinterest

Share This