English தமிழ்

Share the Article

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகும் ஐய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் செல்ல அனுமதிப்பது குறித்த விஷயம் சர்ச்சைக்குரியதாகி உள்ளநிலையில், பெண் ஒருவர் இந்து மடத்தின் ஆதீனமாகிவிட முடியுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பி வருகிறார்கள். ஆனால், 1983ஆம் ஆண்டிலேயே புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் மடாதிபதியாகியிருக்கிறார் சாயிமாதா சிவ பிருந்தாதேவி (1927 -1998).

இசைப் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த அவர். வீணை வாசிப்பதில் விற்பனரும்கூட. தமிழகத்தின் முதல் பெண் டாக்டராகி சாதனை படைத்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் நெருங்கிய உறவினரான சிவ பிருந்தாதேவி, எந்தவித சர்ச்சைகளுக்கும் இடமில்லாமல் முதல் பெண் மடாதிபதியாகவும் ஆகி இருக்கிறார் என்பது வரலாறு.

கும்பாபிஷேகம் செய்யும் போது

அவர் மடாதிபதியாக பொறுப்பேற்கும் நிகழ்ச்சிக்கு தமிழக ஆதீனகர்தர்கள் பலர் வந்திருந்தனர். காஞ்சி காமகோடிபீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி வாழ்த்துத் தெரிவித்திருதார். “இதுவரை ஆண்பால் துறவிகளின் ஆதீனங்களைக் கண்ட நாட்டிற்கு இப்போது பெண்பால் துறவியின் ஆதீனத்தைக் காணும் வாய்ப்பு நேர்ந்துள்ளது” என்று வடலூர் சன்மார்க்க சங்க ஆராய்ச்சி நிறுவனர் ஊரன் அடிகளார் வாழ்த்துத் தெரிவித்தார்.

`பெண் மடாதிபதியாவது முறையானதா? முரணானதா?’ என்று கல்கி இதழில் (31.7.1983) இதழில் செய்திக் கட்டுரை வெளியான போது, “சக்தியின் ஆட்சி அதுவும் அருளாட்சி சரியானதே! ..இதுவரை செய்யாத காரியம் என்பதால் அது தவறாகாது. செய்து வந்த காரியம் அனைத்துமே சரியானதாகவும் ஆகிவிடாது” என்று சாஹித்தியகர்ததா சிதம்பரம் வி.வி. ஸ்வர்ண வெங்கடேச தீட்சிதர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

இந்தக் காலத்தில்கூட கோவில் குடமுழுக்கை நடத்துவதற்கு பெண்கள் அனுமதிக்கப்படாத நிலையில், 1975இல் புதுக்கோட்டை ஜீவா நகர் விநாயகர் கோவில் குடமுழுக்கை வேத விற்பனர்கள் சூழ முன்னின்று நடத்தினார் அன்னை சாயிமாதா சிவ பிருந்தாதேவி. சந்நியாசம் பெற்ற பிறகு 1977 வாக்கில் அய்யப்பன் கோவிலுக்கும் சென்று வந்திருக்கிறார் அவர்.

தயானந்த சந்திரசேகர சுவாமிகள்

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய சிவராம நட்டுவனாருக்கும் நல்லம்மாளுக்கும் கடைசிக் குழந்தையாக திருக்கோகர்ணத்தில் 1927ஆம் ஆண்டில் பிறந்தவர்  பிருந்தாதேவி. நல்லம்மாளின் நெருங்கிய உறவினர் சந்திரம்மாளின் மகள்தான் முத்துலட்சுமி ரெட்டி. அவரை பெரியம்மா என்று தான் பிருந்தாதேவி அழைப்பார்.

இசைப் பேராசிரியர் சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை வீட்டில் தங்கியிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தத்துவப் படிப்புப் படித்து பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளராக இருந்த சச்சிதானந்தம் பிள்ளையின்  முயற்சியில் தருமபுரம் ஆதீனத்தில் தம்பிரான்களுக்கு நடைபெறும் சைவ சித்தாந்த சாஸ்திரப் பயிற்சியில் சேருவதற்கு பிருந்தாதேவிக்கு இடம் கிடைத்தது. அந்தக் காலத்தில் அந்தப் பயிற்சியில் சேர்ந்து படித்த பெண் இவர் மட்டும்தான். மகாவித்வான் தண்டபாணி தேசிகர் வீட்டில் தங்கியிருந்து பயிற்சிக்குச் சென்று வந்தார்.

“சமூக சேவையில் ஆர்மிக்க அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. காமராஜரின் வேண்டுகோளுக்கிணங்க காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து சிறிதுகாலம் பணி ஆற்றினார். புதுக்கோட்டை நகர் மன்ற உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். 1957இல் ஆதரவற்ற பெண்களுக்காக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகளிர் இல்லத்தைத் தொடங்கி நடத்தினார். 1972இல் இந்த மகளிர் இலலத்தைப் பார்வையிட வந்த பெரியார், பிருந்தா தேவியின் சேவைகளைப் பாராட்டினார். இந்த இல்லத்துக்கு காமராஜர் உள்ளிட்ட பிரபல தலைவர்கள் பலர் வந்திருக்கிறார்கள். மாவட்ட சமூக நலக் குழு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சிவ பிருந்தாதேவி

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் இலங்கையிலும் அவர் ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தார். 1971ஆம் ஆண்டு சிவ பிருந்தாதேவி சந்நியாசம் மேற்கொண்டார். 1978இல் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து சமயச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார் விவேகானந்தருக்குப் பிறகு அமெரிக்காவில் பல்கலைக்கழகங்களில் சமய சொற்பொழிவு நிகழ்த்தியவர் இவர்தான்” என்கிறார் பிருந்தாதேவியின் வளர்ப்பு மகனும் திலகவதியார் திருவருள் ஆதீனகர்த்தருமான  தயானந்த சந்திரசேகர சுவாமிகள்.

“1983ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் தேதி திலகவதியார் திருவருள் ஆதீனத்தின் முதல் பெண் ஆதீனமாகப் பொறுப்பேற்றார். அதன் பிறகு, உலக இந்து சமய மகளிர் முதல் மாநாட்டை கோவையில் நடத்தினார். 1985இல் அமெரிக்காவில் நியூஜெர்ஸியில் உலக சமய மாநாட்டை அவர் தொடங்கி வைத்தார். உலக அமைதிக்காக 1986இல் மேற்கு ஜெர்மனியில் பேட்நாகிம் நகரில் நடைபெற்ற மாநாட்டில் அவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். புதுக்கோட்டையில் உலக இந்து மகளிர் பல்கலைக்கழகம் கொண்டு வர வேண்டும் என்பது அவரது விருப்பம். அதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். ஆனால், அது முழுமையடையவில்லை” என்கிறார் அவர்.

“அவருக்குப் பிறகு, இந்த ஆதீனத்தை நடத்துவதற்கு ஒரு பெண்தான் தலைமை ஏற்க வேண்டும் என்பதற்காக கடலூர், பழனி, பொன்னமராவதி போன்ற ஊர்களிலிருந்து சில பெண்களை சாயி மாதா சிவ பிருந்தாதேவி தேர்வு செய்தார். ஆனால் அது சாத்தியமாகவில்லை.  எனக்குப் பிறகு, இந்த ஆதீனத்தை ஒரு பெண்தான் பொறுப்பேற்று நடத்துவார். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார் தயானந்த சந்திரசேகர சுவாமிகள்.


Share the Article