Read in : English

Share the Article

தமிழகத்தில் பாடகி சின்மயினால் பல்வேறு கலைஞர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து மட்டும் விவாதப்பொருளாக மாறியது ஏன்பாலியல் குற்றச்சாட்டுகளைப்பற்றி பேசாமல் திராவிடர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் சமூக வலைதளங்களில் கருத்தியல் வாக்குவாதங்கள்  நடைபெறுவது குறித்து திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி இன்மதி.காம் இணைய இதழிற்கு அளித்த பேட்டி:

இந்தியாவில் நடக்கும்  #MeToo movement பற்றி உங்கள் கருத்து என்ன?

மீ டூ இயக்கம் என்பது பெண்களுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல்களை தைரியமாக, வெளிப்படையாகப் பேசக்கூடிய ஒரு தளம். இந்தியா போன்ற நாடுகளில் யாரையாவது திட்டமிட்டு பழிவாங்கும் அரசியல் நடப்பதால், நாம் சற்று பயப்படவேண்டி இருக்கிறது. ஆனால், சமூகத்தில் `ஜென்டில்மேன்’ வேடம் போடும் மனிதர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை தரும் நடவடிக்கையாக இருக்கும்.

மீ டூ இயக்கம் என்பது நகர்ப்புற பெண்ணியவாதிகளுக்கு மட்டுமானதா ?

பெண்ணியவாதிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பெண்களுக்கும்தான் இந்த இயக்கம். இந்தப் பிரச்சாரம் தொடங்கியதே வெளிநாடுகளில்தான். அதன் தொடர்ச்சியாக, வட இந்தியாவில் தொடங்கி தமிழகத்திலும் இன்று பேசப்படுகிறது. இது வேலைக்கு போகும் படித்த பெண்களின் குரல்கள். இன்னும் கிராமப்புறங்களில் இதுகுறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை. ஆனால் கூடிய விரைவில், இது அனைத்துத் தரப்பு பெண்களின் பேசு பொருளாக மாறும் என நம்புகிறேன்.

தமிழ் ஊடகங்களில் மிகச் சில பெண்கள் மட்டுமே தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளியே சொல்ல முன்வருகிறார்கள். அது ஏன்?

தற்போதைய நிலையில், பெரும்பாலும் வசதிபடைத்த நிலையில் உள்ள பெண்கள் தங்களுக்கு எதிரான அநீதிதிகளை வெளியே சொல்வதற்கு வருகிறார்கள். இதுகுறித்து அவர்களுக்கு விழிப்புணர்ச்சி இருக்கிறது. சட்டம் குறித்தும் உரிமைகள் குறித்தும் அறிந்திருக்கிறார்கள். குடும்பத்திலிருந்தும் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கிறது. அல்லது கருத்துரீதியாக வலுவான சிந்தனை கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள். வேலைக்குப் போகும்(புரபஷனல்) பின்னணியிலிருந்து வருபவர்கள், தொடக்கநிலையில் பொதுவெளிக்கு வருவதில்லை. ஆனால், அவர்களுக்கு குடும்பத்தினரின் ஆதரவு இருந்தால் அவர்களும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை வெளியே சொல்ல முன்வருவார்கள். அவர்களது கணவர்களோ அல்லது பெற்றோர்களோ இதுகுறித்த விழிப்புணர்ச்சி உள்ளவர்களாகவும் பக்குவம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும். பெணகள் அவமானத்துக்கு ஆளாகும் போது, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

பிரபலங்களை மட்டும் குறிவைக்கிறதா மீ டூ இயக்கம்?

பிரபல திரைப்பட தயாரிப்பாளரை அமெரிக்க நடிகை குற்றம்சாட்டினார். சமுதாயத்தில் புகழ் பெற்ற பிரபல மனிதர்கள் குற்றம் செய்தாலும் அது வெளியே தெரிய வராது என்ற நினைப்பில் இருப்பவர்களை இவ்வாறு பொதுவெளியில் தட்டிக்கேட்டால், நாளடைவில் மற்ற சாதாரண நபர்களும் இதுபோன்ற தவறுகளைச் செய்ய பயப்படுவார்கள்.

தமிழ் ஊடகங்களில் ஏன் இந்த மீ டூ இயக்கம் பெரிதாகப் பேசப்படவில்லை?

ஊடங்களில், எதை எவ்வாறு விவாதப் பொருளாக்க வேண்டும் என்று மத்தியில் உள்ள ஆளும் கட்சியும், அதன் சார்பான போக்கும் தான் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு ஊடகமும் ஒரு சார்புடையது, அவர்களுக்கு இதைவிட வேறு ஏதேனும் முக்கிய விவாதப் பொருளாக தெரிந்திருக்கலாம். கொள்கை முடிவாக இருககலாம்.  எதை விவாதிக்க வேண்டுமென்று ஆளும் கட்சியின் நிர்பந்தமாகக்கூட இருக்கலாம்.

பாலியல் குற்றச்சாட்டைக் கடந்து, ஆண்டாள் குறித்த கருத்து காரணமாக வேண்டுமென்றே வைரமுத்துவை குறிவைக்கிறார்களா?

யாரும் வைரமுத்தைக் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. திராவிட கட்சிகளின் பிரதிநிதியாக வைரமுத்துவைச் சுட்டிக்காட்டி, இதுதான் திராவிட கட்சிகளின் யோக்கியதை என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் குற்றம்சாட்ட தொடங்கினார்கள். தனிநபர் மீது குற்றம்சாட்டினால் அதற்கு அவர் பதிலளிக்கலாம், ஆனால் ஒரு கொள்கையையே விமர்சிக்கும்போது, தற்காப்பிற்காக திராவிட சிந்தனையாளர்களும் குற்றம் சாட்டப்பட்டுள்ள கர்நாடக இசை பிரபலங்களை விமர்சிக்கத் தொடங்கினர். ஆண்டாளை விமர்சித்ததால் அவருக்கான தண்டனை என்றெல்லாம் கருத்துகளைக் கூறும்போது, சின்மயி கூறுகின்ற குற்றச்சாட்டுகளில் முரண்பாடாக தெரியும் செய்திகள் குறித்தும் சிலர் கேள்வியெழுப்புகின்றனர். இதனால் இருதரப்பினரிடையே கருத்துரீதியாக வாக்குவாதம் ஏற்படுகிறது.

எனது முகநூல் பக்கத்தில், சின்மயி கர்நாடக இசை கலைஞர்களையும் தான் குற்றம்சாட்டியுள்ளார், அவர்களை நீங்கள் யாரேனும் கண்டித்திருக்கிறீர்களா? சின்மயிக்கு முன்பாகவே அனுராதா ரமணன் இதேபோல குற்றம்சாட்டினார். அப்போது எல்லாம் எங்கு இருந்தீர்கள் என்று பதிவிட்டுள்ளேன்.

நான் திராவிட அமைப்பின் பின்னணியில் வளர்ந்தாலும், எனது தந்தைக்கு கர்நாடக இசையில் அதிக ஈடுபாடு உண்டு. நான் சிறுவயதில் இருக்கும் பொழுது மதுரை சோமு, யு.ஆர். ஜீவரத்தினம் ஆகியோரை அழைத்து சேலத்தில் கச்சேரி நடத்தியவர் என்து தந்தை. அன்று ஏற்பட்ட தொடர்பினால், எனக்கும் இதில் ஒரு ரசனை உண்டு. சேஷகோபாலன், பப்பு வர்மா போன்ற வித்வான்களை எல்லாம் குற்றம்சாட்டும்போது எனக்கே ஓர் அதிர்ச்சி ஏற்படுகிறது. குற்றம்சாட்டு எழும்போது, குற்றம் சாட்டட்டப்பட்டவர்கள் தவறு நிகழவில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாமாகவே ஒரு முடிவெடுக்க கூடாது.

இந்த மீ டூ என்பது பெண்ணுக்கு நீதி கிடைக்க பெண்கள் கையாண்டுள்ள போராட்டம். இதில் சில அரசியல்வாதிகள் ஆதாயம் தேட முயற்சிப்பது வருத்தமளிக்கிறது. .

பிரபலங்களைப் பற்றி பேசுவதை விட, சைலண்ட் கில்லர்ஸ் ஆக யாருக்கும் தெரியாமல் அத்துமீறுபவர்கள் ஆபத்தானவர்கள். பிராமணர், சூத்திரர் என்றெல்லாம் பார்க்காமல் குழந்தைகளின் பாதுகாப்பை கருதி இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.

பெயர் சொல்ல விரும்பாத நபர்களின் குற்றச்சாட்டுகளை எவ்வாறு நம்புவது?

“எப்பொருள் யார்யார்வாய் கேட்டபினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு ”

என்று வள்ளுவன் சொன்னது போல், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்ப கூடாது. நம் நாட்டில் பிரபலங்கள் மீது, பழி வாங்குவதற்காக பொய் குற்றச்சாட்டுகளை சொல்வது இயல்பாகி வருகிறது. இந்தச் சூழலில் பயத்தினால் பெயரில்லாமல் எழும் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மையை அறிய அதளைச் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

 

 


Share the Article

Read in : English