Share the Article

பதினான்கு ஆண்டுகளுக்கு முன் நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பிரபல திரைப்பட படலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி    குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், இந்த விவகராத்தை  வெளியிடுவதில் தமிழக வெகுஜன ஊடகங்களிடம்  உள்ள தயக்கத்துக்குக் காரணம் என்ன  என்று அலசுகிறார்கள்…. 

தன்யா ராஜேந்திரன் (பத்திரிகையாளர், தி நியூஸ் மினிட்):

மீ டூ விவகாரத்தில், வட மாநிலங்களை விட தென்னிந்திய வெகுஜன ஊடகங்கள் முக்கியத்துவம் தர சற்று தயக்கம் காட்டுகின்றனர் என்பதெல்லாம் ஒன்றும் இல்லை, அனைத்து ஊடகங்களிலும் பெண்கள் பாதிப்பிற்கு உள்ளாவதால் ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி குறை சொல்லி நிறுவனத்தின் பெயர் அடிப்படாமல் இருக்கவே இந்த தயக்கம். தங்களது நிறுவனத்தின்  பெயர் வராமல் இருக்கவேண்டும் என்பதால் தான் ஊடகங்கள் அமைதிக்காகின்றன. காவல்துறையின் நடவடிக்கை பற்றி உலகம் நன்கு அறியும், அதனாலேயே பாதிக்கப்பட்டவர்கள் சட்டமுறைப் படி நடவடிக்கை எடுக்க தயங்குகின்றனர். இந்த மீ டூ மூவ்மெண்ட், ஆண்களை தண்டிப்பதற்கானது அல்ல, பல ஆண்டுகாலமாக பணிபுரியும் இடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்கள் இன்று வாயை திறப்பதற்குதான். இதன்மூலம்  அலுவலகங்களில் பணிபுரியும் ஆண்கள், சக பெண்களுடன் எவ்வாறு பழக வேண்டும் என்பதை  உணர்ந்துகொள்ள வேண்டும்.

லக்ஷ்மி சுப்ரமணியம் (பத்திரிகையாளர், தி வீக் வார இதழ்) :

இந்த சமூகம் பெண்களுக்கு மனதளவில் ஒரு பாதுகாப்பை தரக்கூடிய நம்பிக்கையை கொடுக்கவில்லை. இதன் காரணமாகவே தமிழகத்தில் பெண்கள் இந்த மீ டூ மூவ்மெண்ட்டிற்கு ஆதரவு தர தயங்குகிறார்கள். குற்றம்சாட்டும் பெண்கள் அனைவரும் 10 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளை கூறுகின்றனர். இன்றும் கூட, ஒரு பெண் பாதிக்கப்பட்டதை கூறினால், அவளது நடவடிக்கைகளை இந்தச் சமூகம் சந்தேகத்துக்குள்ளாக்குகிறது. இதனாலேயே பெண்கள் அமைதியாக பொறுத்துக் கொண்டு போகும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

 ஊடக துறையில் 20 ஆண்டுகள் பணிபுரிந்ததுள்ளதால், எனக்கு ஒரு பிரச்சனையை எதிர்கொள்ளும் மனதைரியம் இருக்கிறது. ஆனால் வேலைக்கு சேர்ந்த துவக்க காலத்தில், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு மிகுந்த பயத்துடனே பணிபுரிவேன். இனிவரும் காலங்களில் உடனுக்குடனே தவறுகளை தட்டிக்கேட்கும் அளவிற்கு பெண்கள் மனதைரியம் அடைவார்கள் என நம்புகிறேன்.

. வாசுகி (அகில இந்தியத் துணைத்தலைவர், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்):

இந்தியா முழுவதுமே, பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் அதை வெளியே சொல்வதில் இன்னும் தயக்கம் இருந்துவருகிறது. இந்த சமூகம் பாதிக்கப்பட்டவர்களை தான் குறை சொல்லும். அவர்கள் அணிகின்ற உடை, அவளுடைய பழக்க வழக்கம், சுற்றுவட்டாரம், நண்பர்கள், பேசும் விஷயங்கள் ஆகியவற்றை கேள்விக்குறியாக்கி, குற்றச்செயலை செய்தால் கூட அவரின் மீது நடவடிக்கை எடுக்காத சமூகம் நமது சமூகம். இந்த பாலியல் துன்புறுத்தல்களை மான அவமான பிரச்சனை என்பதை தாண்டி அதை குற்றமாக கருதவேண்டும் என்று நிர்பயா வழக்கின் தொடர்ச்சியாக உருவான வர்மா கமிஷன் கூறுகிறது..

“கார்களை எவ்வாறு வீட்டிற்குல்லே நிறுத்தி வைத்தால் விபத்துக்கள் நேரிடாதோ, அதேபோல் பெண்களையும் வீட்டிற்குல்லேயே வைத்திருந்தால் வன்முறைகள் நேரிடாது” என்று ஆந்திர மாநில சபாநாயகர் அநாகரிகமாகக் கருத்துத் தெரிவிக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து தெரிவிப்பதைக் குற்றமாக கருதவேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

பாலியல் வன்கொடுமை என்று குற்றம்சாட்டினால் கூட அதை நிரூபிக்கலாம், ஆனால் பாலியல் ரீதியாக ஒரு உள்ளர்த்தம் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தினால், அந்த பெண் அதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறாள் என்ற கேள்வி எழுகிறது. இதை விசாரிக்க தான் உயர் நீதிமன்றம் ‘விசாகா கமிட்டி’  அமைக்க சொன்னது. ஆனால் அந்த கமிட்டி எவ்வாறு வேலை செய்கிறது, யார் யார் உறுப்பினர்கள், எவ்வாறு செயல்படுகிறது என்று பார்த்தால் 100 நிறுவனங்களில் 50இல் மட்டுமே இந்த கமிட்டி சும்மா பெயருக்கு செயல்படுகிறது.இவ்வாறு கமிட்டி இருக்கிறதா என்றுகூட ஊழியர்கள் விழிப்புணர்வு இல்லாமல் இருந்துவருகின்றனர். இந்தக் கமிட்டி அமைக்கவில்லை என்றால் ரூ.50 ஆயிரம்  அபராதம் செலுத்த வேண்டும் என்று சட்டம் சொல்கிறது, ஆனால் அதை யார் முறையே செயல்படுத்துகின்றனர்?

பெண் சமத்துவ கருத்துக்கள், பாலின சமத்துவ கோட்பாடுகள் அனைவருக்கும் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே கற்றுதரபட வேண்டும். இதற்காக அயராது உழைக்கின்றோம். பல ஆண்டுகாலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களின் எழுச்சியின் வெளிப்பாடாக இருக்கும் இந்த மீ டூ மூவ்மெண்டை வரவேற்க வேண்டும். இது காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. பிரபலங்கள் மீது குற்றம்சாட்டுவதால் இது ஊடகங்களுக்கு முக்கியமாக தெரிகிறது. பாதிக்கப்படும் பெண்களின் பயத்தை போக்கி, அவள் புகார் தெரிவித்தால், அவளுக்கு நியாயம் கிடைக்கும் என்று சமூக அமைப்புகள் அவளுக்கு உதவும் விதமாக செயல்பட்டால் மட்டுமே இதற்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.


Share the Article