தமிழ்

Share the Article

காந்தி ஜெயந்தியன்று, பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் டுவிட்டரில் இப்படி எழுதினார். “ஒருமுறை பெங்களூருவில் இருக்கும் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு காந்தி வந்தபோது, பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திடச் சொன்னார்கள். அப்போது தொழில் என்ற இடத்தில் ‘விவசாயி’ என்று காந்தி எழுதினார். ஆனால், அதற்கு முரணாக, காந்தியின் பிறந்த நாளன்று ஹரித்துவாரில் பத்து நாட்கள் அமைதியாக பேரணி நடத்திய விவசாயிகள் தில்லிக்குள் நுழைய முற்பட்டபோது அவர்கள் மீது போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தண்ணீரை பீய்ச்சி அடித்துள்ளனர்”

அதேநாளில், ஹரியானாவைச்  சேர்ந்த 65 வயது விவசாயி ரன்பீர் சிங் பிவானி சிறையில் போலீஸ் காவலில் இருந்த போது மரணம் அடைந்துள்ளார். கடனுக்காகத் திருப்பிச் செலுத்துவதற்காக அனுப்பிய அவருடைய காசோலை திரும்பி வந்த காரணத்தால் 10 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அவர் ரூ.9.83 லட்சம் ரூபாய் விவசாயக் கடனை திரும்ப செலுத்தாத காரணத்தால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். இரண்டு நாட்களுக்கு முன்பு அவரை பார்க்க வந்த உறவினர்கள் அவரது வயலில் பயிர் மழையினால் நாசமடைந்ததாகக் கூறியிருக்கிறார்கள். அந்த அதிர்ச்சியில் அவர் மரணமடைந்துள்ளதாக வெளிவந்த செய்திகள் தெரிவிக்கின்றன. வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத காரணத்தால் சிறைக்கு அனுப்பப்பட்டவர் அவர் மட்டுமல்ல. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இதே காரணத்துகாக சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த செய்தி, வங்கிகளில் கடன் வாங்கிய 169 தொழில் நிறுவனங்களின் மொத்த வாரா கடன் 90,000 கோடி ரூபாயைத்  தாண்டி விட்டது என்று அரசு அறிவித்த செய்தி வெளியானது. ஆனால், இதுவரை அந்த நிறுவனங்களின் எந்த உயர் அதிகாரியும் கைது செய்யப்படவில்லை.

மகாத்மா  காந்தியின்  பிறந்த நாளன்று நடந்த இந்த இரண்டு சம்பவங்களும், விவசாயத்தில் என்ன தவறுகள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.  விவசாயிகள் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதை கூறி வருகின்றனர். கிராமப்புற பகுதிகளை அரசு அலட்சியப்படுத்துவதால், தங்கள் வெறுப்பை போராட்டங்கள் மூலம் காட்டுகின்றனர். கடந்த ஆறு மாதங்களில் நாசிக்கிலிருந்து மும்பை வரை நீண்ட அமைதியான போராட்டத்தையும் அதனையடுத்து ஜூன் மாதத்தில் 10 நாட்கள் தொடர் போராட்டத்தையும் நடத்தினார்கள். அடுத்து அனைத்து இந்திய விவசாயிகள் சங்கம் மூலம், தில்லி வரை ஒரு நீண்ட பயணப் போராட்டத்தை நடத்தினர்.    இதற்கிடையே, நாட்டில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற பல போராட்டங்கள் கவனத்துக்கு வராமலேயே போனது.

2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 3.16 லட்சம் கோடி ரூபாய் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது

இன்னும் சில நீண்ட பயணப் போராட்டங்கள் நடைபெற இருக்கின்றன. குவாலியரில் ஆதிவாசிகளும் நிலமற்றவர்களும் சில தினங்களுக்கு முன் பிரமாண்டமான போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். விவசாயிகளின்  கோபமான போரட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேசிய குற்ற ஆவண அமைப்பின் அறிக்கையின் படி, கடந்த 2014இல் 687 போராட்டங்களும் 2015இல் 2,683 போராட்டங்களும் நடந்துள்ளன. அந்த எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து 2016இல் 4,837 போராட்டங்கள் நடந்துள்ளன. அதாவது கடந்த மூன்று ஆண்டுகளில் போராட்டங்களின் எண்ணிக்கை 7 மடங்கு அதிகரித்துள்ளது. இது விவசாயிகளின் கோபம் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. இதற்கான காரணங்கள் பல இருக்கின்றன. இருந்தபோதிலும், விவசாயம் மிகக் கடுமையான துன்பத்துக்குள்ளாகியுள்ளது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.

ஹரித்துவாரில் பாரதிய கிஸான் யூனியன் நடத்திய நெடிய போராட்டம், இதனை உறுதி செய்கிறது. அவர்களின் 15 முக்கிய கோரிக்கைகளில் அரை டஜன் கோரிக்கைகள் அழிந்து வரும் விவசாய பொருளாதாரம் குறித்தவை. சில உள்ளூர் சார்ந்த கோரிக்கைகள், அதாவது 10 ஆண்டுகள் ஆன டிராக்டர்களை பயன்படுத்துவது மீதான தடையை நீக்குதல், விவசாயக் கருவிகள் மீது விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை 5 சதவீதம் குறைத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளும் அதில் அடங்கும். அதை நிறைவேற்றுவதற்கு சாதகமான உறுதிமொழிகள் கிடைத்துள்ளன. பல பொருளாதார பிரச்சினைகள் பேசப்படாமலேயே உள்ளன. உண்மையில் முந்தைய பல போராட்டங்களில் விவசாயிகள் எந்த பலனையும் அரசிடமிருந்து பெறாமல் வெறுங்கையுடனேயே திரும்பினர். அதற்கு அரசு சொல்லும் காரணம், விவசாயிகளின் கோரிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற போதுமான நிதி ஆதாரங்கள் இல்லை என்பதே.

நாடு முழுவதும் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் இரண்டு கோரிக்கைகள் தவறாமல் இடம் பெறுகின்றன. சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி, விவசாயிகளுக்கு வழங்கிய வங்கி கடனை ரத்து செய்வது, அரசு அளித்த வாக்குறுதியின்படி குறைந்தபட்ச ஆதார விலையுடன் 50 சதவீதம் லாபம் கொடுப்பது போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. பயிர் உற்பத்தி செலவுகளைக் கணக்கிடுவதில் அரசு குளறுபடி செய்துள்ளது. உதாரணத்துக்கு, அரசு விவசாயிகளிடமிருந்து நெல்லை ஒரு குவிண்டாலுக்கு 1,750 ரூபாய்க்கு வாங்குகிறது. ஆனால் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையில் கூறப்பட்டுள்ள கணக்குப்படி அதற்கு 2,340 ரூபாய் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். இதனால் விவசாயிகளுக்கு ரூ.590 நஷ்டம். அதேபோல் மக்காச்சோளத்துக்கான விலை நிர்ணயத்திலும் விவசாயிகளுக்கு ஒரு குவிண்டலுக்கு ரூ.540 நஷ்டம் ஏற்படுகிறது.

அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால் நவ தாராளவாத பொருளாதாரம், விவசாயத்தை ஒரு பொருளாதார நடவடிக்கையாக கருதவில்லை என்பதுதான்.

அரசு அறிவித்தபடி, 23 பயிர்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள ஆதார விலையில் கொள்முதல் செய்ய அரசிடம் நிதி வசதி இல்லை என்று சொல்வது நிச்சயமாக சரியில்லை; உண்மையுமில்லை. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ஒரு லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்பதை கணக்கீடுகள் காட்டுகின்றன. இதற்கு பணம் எங்கிருந்து வரும்? என்பதே கேள்வி. தொழில் துறைக்கு ஆண்டுதோறும் 1.86 லட்சம் கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக  கொடுப்பதை நிறுத்தலாமே. கடந்த 2008 09லிருந்து பத்தாண்டுகளாக எந்த கேள்வியும் இன்றி அந்தத் தொகை தொழில் நிறுவனங்களுக்குத் தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கிறது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக பணவீக்கம் காரணமாக விவசாயிகளின் வருமானம் அப்படியே ஸ்தம்பித்துள்ளது; கடந்த 40 ஆண்டுகளாக விவசாயிகள் தங்களுக்கு உரிய வருமானத்தை பெற முடியாமல் அவர்களின் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. விவசாயத்தில் முன்னணியிலுள்ள பஞ்சாபில் கூட 98 சதவீத விவசாயிகள் கடனில் மூழ்கியிருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட அறிக்கையின்படி, மொத்த விவசாயக் கடன் ரூ.12.60 லட்சம் கோடி. இதனை வங்கிகளின் வாராக் கடன் 10.3 லட்சம் கோடி ரூபாயுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 3.16 லட்சம் கோடி ரூபாய் கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் விவசாயிகளின் கடனை ரத்து செய்யக் கோரினால், இது பணவீக்கத்துக்கு வழி வகுக்கும் என்று  கொள்கை வடிவமைப்பாளர்கள், பொருளாதார நிபுணர்கள் திட்டி எழுதத் தொடங்கி விடுகின்றனர். ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை ரத்து செய்யும் போது இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்புவதில்லை. இப்படித்தான் நமது பொருளாதாரம் மிக புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில் அடிப்படைப் பிரச்சினை என்னவென்றால் நவ தாராளவாத பொருளாதாரம், விவசாயத்தை ஒரு பொருளாதார நடவடிக்கையாக கருதவில்லை என்பதுதான். அதனால்தான், நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகள், சுமையாக கருதப்படுகிறார்கள். மிகப் பெரிய அளவில் தொழிலாளர்களையும் உற்பத்தியாளர்களையும் கொண்டுள்ள வேளாண்மை தான் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும். அதைத்தான் மகாத்மா காந்தி வலியுறுத்தினார். நாம் அதனை அலட்சியப்படுத்துகிறோம். எப்போது நம் சிந்தனையை மாற்றப் போகிறோம்?


Share the Article