Read in : English

Share the Article

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் கனமழை, கடல்சீற்றம், சூறைக்காற்று, புயல், சுனாமி, போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களும், கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மீனவக்குடும்பத்தினர்களும் தான் என்பது நிதர்ச்சனமான உண்மையாகும். புயல் மற்றும் மழையை உருவாக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடலில் உருவாகி முதலில் கடற்கரையையும், பின்னர் உள்பகுதிகளையும் தாக்குவதால் முதன்மையான பெரும் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் மீனவர்கள் என்பதால் அவர்களுடைய கூரை வீடுகள், மீன்பிடி படகுகள், கட்டுமரங்கள், வலைகள், உபகரணங்கள் பெரும் சேதத்துக்குள்ளாவது வாடிக்கையாகிவிட்டது.

கடற்கரை அருகே பெரும்பாலும் அரசு புறம்போக்கிலும், வம்பா மணல் மேடுகளிலும், வீடுகட்டிக்கொண்டு வாழ்வதால் பட்டா போன்ற ஆவணங்கள் இல்லாததால் உரிய அரசு அனுமதி மற்றும் ஒப்புதல் பெற்று வீடு கட்ட அவர்களால் இயலாது. உரிய ஒப்புதல் இன்றி வீடுகள் கட்டப்படுவதால் வங்கிக்கடன் பெற முடியாது. இதனால் பெரும்பாலும் கூரை வேய்ந்த வீடுகள், ஓடுபோட்ட வீடுகள் போன்ற தற்காலிக குடியிருப்புகளில்தான் நாடு முழுவதும் பெரும்பாலான மீனவர்கள் வாழ்கிறார்கள்.

மீனவர்களின் வாழ்வாதாரங்கள் எதுவுமே நிரந்தரமானவை அல்ல என்பதுடன் லட்சக்கணக்கான ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்படும் விசைப்படகுகள் நொடியில் இயற்கை பேரிடரில் அழிவுக்கு ஆளாகக்கூடியவை.

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, மேற்கு வங்காளம் கர்நாடக, கோவா, மகாராஷ்ட்ரா, குஜராத் , டையூ – டாமன் , அந்தமான் – நிக்கோபார் , லட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட 13 கடற்கரை மாநிலங்களிலும் வாழும் மீனவர்களின் நிலை பரிதாபத்துக்குரியது . அதிலும் ஆந்திரா, ஒரிசா , மேற்கு வங்கம் ஆகிய மாநில மீனவர்களின் குடியிருப்புகளும் அவர்களின் வாழ்வாதார சூழலும் மிகவும் பரிதாபத்துக்குரியது. அனைத்து கடற்கரை மாநிலங்களிலும் குறிப்பாக சில வளைகுடா பகுதிகள் ஒவ்வொரு ஆண்டும் புயலால், சூறாவளி , மழை வெள்ளம், ஆகியவற்றால் பெரும் சேதம் அடைவதை நேரில் காணும் எவரும் கண்ணீர் விட்டு அழ வேண்டியிருக்கும்.

மீனவர்களின் வாழ்வாதாரங்கள் எதுவுமே நிரந்தரமானவை அல்ல என்பதுடன் லட்சக்கணக்கான ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்படும் விசைப்படகுகள் நொடியில் இயற்கை பேரிடரில் அழிவுக்கு ஆளாகக்கூடியவை. இந்த நிலையில் கடற்கரையில் அவர்கள் வாழும் குடியிருப்புகளும் அதே போல் ஆண்டுதோறும் பெருஞ்சேதாரம் அடைந்து சில நேரங்களில் முழுமையாக அழிந்து விடவும் கூடியவை. கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்வி குறி தான்? டீசல், ஐஸ், சமையல் பொருட்களுக்கு லட்சக்கணக்கில் கடன் வாங்கி கொள்முதல் செய்து கடலுக்கு சென்றால் செலவு செய்த முன்முதலீட்டை திரும்ப பெற முடியுமா என்பது பல நேரங்களில் சந்தேகத்துக்கிடமானதே.

மீனவர்கள் உயிரோடு திரும்ப முடியுமா என்பதும் சந்தேகமே உயிரிழந்தால் பிணமாவது கரைக்கு திரும்புமா என்பதும் கேள்விக்குரியதே? பிணம் கிடைத்து உரிய பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர் குடலில் ஆல்கஹால் இருந்தால் அரசு தரும் சொற்ப நிவாரணமும் கிடைக்காது. பிணம் கரைக்கு கொண்டு வரப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டால் தான் அந்த மீனவர் இறந்துவிட்டதாக சான்றிதழ் பெறப்பட்டு அவருடைய குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்கும்.

கடலில் மூழ்கி பிரேதம் கிடைக்காவிட்டால் 7 ஆண்டுகள் வரை அவர் இறந்து விட்டதாக அறிவிக்க இயலாது என்று இந்திய குற்றவியல் சட்டம் கூறுவதால் அந்த மீனவனின் மனைவி மற்றும் குழந்தைகளில் நிலை அதோ கதிதான். வாழ்வாதாரம் பறிபோய், வருவாய் இழந்து, கல்வி தொடர முடியாமல் அவர்கள் குடும்பம் படும் பாடு சொல்லி மாளாது. கடற்கரையை ஒட்டி வாழ்வதால் பிற சமுதாய மக்கள் தொடர்பு இல்லாமல் வேறு எந்த தொழிலிலும் அனுபவமும் இல்லாததால் அந்த மீனவரின் வருவாயை மட்டுமே நம்பிய குடும்பத்தினர் நிலை மிகவும் பரிதாபகரமானது.

கடந்த “ஒக்கி” புயல் சமயத்தில் கன்னியாகுமரி மீனவர்களின் கதறல்களையும் துயரங்களையும் அறிந்து கொண்ட நாட்டின் பிற பகுதி மக்கள் மீனவர்களின் வலியை அப்போது தான் முதல் முறையாக உணர நேர்ந்தது. உலகம் அறிந்த ஒட்டு மொத்த பேரிடர் என்பதால் மத்திய மாநில அரசுகளின் கணிசமான நிதி உதவியும், அரசு வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கிடைத்தது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் இயற்கை பேரிடரின் போதோ அவ்வப்போது நிகழும் கடல் விபத்துகளின் போதோ உயிரிழக்கும் வாழ்வாதாரம் இழக்கும் மீனவர்கள் குடும்பத்துக்கு அத்தகைய அரசு நிதி உதவியோ, வேலை வாய்ப்பு உதவியோ வழங்கப்படுவதில்லை.

அனைத்து கடற்கரை மாநில அரசுகளாலும் தலா ரூ. 2 லட்சம் அல்லது ரூ 3 லட்சம் மட்டுமே நிவாரண நிதி உதவியாக மீனவ குடும்பத்துக்கு அளிக்கப்படுகிறது. பிற மாநிலங்களுக்கு சட்ட விரோத காரியங்களுக்காக சென்று சிக்கலில் மாட்டி உயிரிழக்கும் பிற தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கருணையுடன் வழங்கப்படும் நிதியும், வேலை வாய்ப்பும்,  வாழ்வாதாரத்துக்காக சென்று விபத்தில் உயிரிழக்கும் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. பிற கடலோர மாநில மீனவர்களின் நிலையும் அது தான்.

இந்த கருவியின் மூலம், படகு பயணிக்கும் இடம், கரையில் இருந்து கடலில் 200 நாட்டிகல் மைலாக இருந்தாலும் கரையில் இருந்து ஆண்ட்ராய்ட் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் வகையிலும், படகு இருப்பிடத்தை கரையில் உள்ள அலைபேசி மூலம் துல்லியமாக நேரலையில் காணக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுதுதான் மீனவ சமுதாயத்தில் இருந்து அமைச்சராகி இருக்கும் புதுச்சேரி மாநில மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் புதிய திட்டம் ஒன்றை நடப்பு ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளார். இனிமேல் கடலில் மீன்பிடிக்கும் போது உயிரிழக்கும் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். மீனவர்கள் பிற விபத்துகளில் உயிரிழந்தால் ரூ. 5 லட்சம் வழங்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. (இந்தியாவிலேயே புதுச்சேரி மாநிலத்தில் மட்டும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை என்ற பெயரில் செயல்படுகிறது) . இந்தியா முழுவதும் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு மிக முக்கியமான பிரச்சினை புயல் காலங்களில் அவர்களுக்கு அது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உயிரோடு கரை திரும்பச் செய்வது தான்.

இதற்கு ஒரே வழி அவர்கள் கடலில் பயணித்துக்கொண்டோ தங்கி மீன் பிடித்துக் கொண்டோ இருக்கும்போது திடீரென ஏற்படும் புயல், சூறைக்காற்று மற்றும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்கள் குறித்த தகவல் மீனவர்களை சென்றடைய வாய்ப்பு ஏற்படுத்தித்தர வேண்டியது அரசின் கடமை. “சேட்டிலைட்” தொடர்புடன் கூடிய அலைபேசி வழங்கப்பட வேண்டும் உரிய அனுமதியுடன் மானிய விலையில் அவை வழங்கப்பட்டால் மீனவர்களின் உயிர்களை காப்பாற்ற இயலும். அத்தகைய தொலை தொடர்பு சாதனங்களை வழங்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது.

“இஸ்ரோ” வானவெளி, ஆய்வு நிலை இயக்குனர் திரு சிவன் அவர்களும் அதற்கான செயலிகளை அறிமுகப்படுத்த முயற்சி எடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். சில மீனவ அமைப்புகளும் அத்தகைய செயலிகளை உருவாக்கி மீனவர்களிடம் கொண்டு சேர்க்க முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எங்கள் தேசிய மீனவர் பேரவையின் சார்பில் விமானத்தின் கருப்பு பெட்டி போன்று மீன்பிடி விசைப்படகுகளுக்கான கருவி ஒன்றை வடிவமைக்க தென் கொரிய நிறுவனம் ஒன்றுடன் பேசியிருந்தோம். அதனடிப்படையில் அத்தகைய கருவி தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கருவி ஆழ்கடலில் விசைப்படகுகள் மூலம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த கருவியின் மூலம், படகு பயணிக்கும் இடம், கரையில் இருந்து கடலில் 200 நாட்டிகல் மைலாக இருந்தாலும் கரையில் இருந்து ஆண்ட்ராய்ட் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசும் வகையிலும், படகு இருப்பிடத்தை கரையில் உள்ள அலைபேசி மூலம் துல்லியமாக நேரலையில் காணக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடலின் ஆழத்தில் உள்ள மீன்கள் உள்ளிட்ட அனைத்து ஆழ்கடல் நடமாட்டங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய ஜிபிஎஸ் கருவியாகவும் இந்த கருவி செயல்படும்.

மேலும் மீனவர்கள் தொலைக்காட்சி, ரேடியோ, போன்ற பொழுதுபோக்கு சாதனங்களாகவும் இதை பயன்படுத்திக்கொள்ளக் கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் மீனவர்களின் பயன்பாட்டுக்கு வர உள்ள இந்த “டேப்லட்” வடிவிலான கருவி அரசின் மான்ய உதவியோடு மீனவர்களுக்கு கிடைத்தால் அவர்கள் உயிர் காப்பாற்றப்படுவது உறுதியாகும்.

(கட்டுரையாளர், தேசிய மீனவர் பேரவைத் தலைவர்)


Share the Article

Read in : English