கடந்த ஏப்ரல் மாதம் பஞ்சாப் மாநிலம், பத்திண்டா மாவட்டம் நந்கார் கிராமத்தைச் சேர்ந்த கரம்ஜித் சிங் என்ற விவசாயி வங்கியில் வாங்கிய கடனுக்காகக் கொடுத்த 4.34 லட்சம் ரூபாய் காசோலை வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாமல் திரும்பி வந்த (பவுன்ஸ்) காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த விவசாயி இன்னமும் சிறையில்தான் இருக்கிறார். இவரைப் போல நூற்றுக்கணக்கான விவசாயிகள், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காகக் கொடுத்த காசோலை வங்கியில் போதிய பணமில்லாமல் திரும்பி வந்ததால் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள்.
கடன் வழங்கும் கொள்கைக்கு இரண்டு முகங்கள். பணக்காரர்களுக்கு ஒருமுகம். ஏழைக்களுக்கு மற்றொரு முகம். விவசாயிகளுக்கான கடன் கொள்கையை எடுத்துக் கொள்வோம். 12,625 விவசாயிகளுக்கு பஞ்சாப் வேளாண் மேம்பாட்டு வங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நிலுவையில் இருக்கும் 229.80 லட்சம் ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகளின் கடன்களை வசூலிப்பதற்காக அவர்களது நிலங்கள் விற்கப்படும் என்று அச்சுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத அதுனிக் மெட்டாலிக்ஸ் நிறுவனத்துக்கு அவர்கள் வாங்கிய கடனில் 92 சதவீதம் தள்ளுபடி செய்ய தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் கொல்கத்தா அமர்வு அனுமதி அளித்துள்ளது. விவசாயிகளின் செக் பவுன்ஸ் ஆனால் அவர்களை கைது செய்கிறார்கள். இதே போல் கடனை திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு இதே நடைமுறைகளை ஏன் பின்பற்றவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது,
ஹரியானாவில் ஒரு விவசாயி, தனது வயலில் குழாய் பதிப்பதற்காக 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை அவர் திருப்பி செலுத்தாத காரணத்தால் அவருக்கு ரூ.9.83 லட்சம் அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.
மற்றொரு உதாரணம். இரு மாதங்களுக்கு முன்பு மொன்னெட் இஸ்பத் அண்ட் எனர்ஜி என்கிற நிறுவனத்துக்கு 78 சதவீதக் கடனைத் தள்ளுபடி செய்தார்கள். அந்த நிறுவனத்தின் வாராக் கடன் ரூ.11,014 கோடி. திவாலான நிறுவனங்களுக்கு அளிக்கும் விதிமுறைப்படி, கடன் கொடுத்த வங்கிக்கு 2,457 கோடி ரூபாய் மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள ரூ.8,557 கோடிக் கடன் தள்ளுபடி செய்யப்படும். இம்மாதிரியான சலுகை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறதா? பஞ்சாபில் மானஸா பகுதியைச் சேர்ந்த சுக்பால் சிங் என்கிற 34 வயதான விவசாயி, கூட்டுறவு வங்கியில் வாங்கிய ஒரு லட்ச ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டார். வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் அவமானப்படுத்தப்படும் சிறு, குறு விவசாயிகள் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்கிறார்கள். ஆனால், கடனை திருப்பி செலுத்த முடியாத கம்பெனி முதலாளிகள் எந்தப் பிரச்சினைக்கும் ஆளாவதில்லை. உண்மையில் பார்த்தால், நிதி சுமையிலிருந்து விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு புது வாழ்வு அளிக்கப்படுகிறது.
இப்படித்தான் வங்கிகள் இயங்குகின்றன. நிறுவனங்கள் என்று வருகின்ற போது எந்த அளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு அவர்களது கடனை ரத்து செய்ய எல்லா முயற்சிகளையும் வாய்ப்புகளையும் வங்கிகள் பயன்படுத்துகின்றன. அதுனிக் மெட்டாலிக்ஸ் லிமிடெட் ரூ.5,370 கோடியை திருப்பி செலுத்த தவறியபோது, பிரிட்டனைச் சேர்ந்த லிபர்டி ஹவுஸ் குழுமத்துடன் 410 கோடி ரூபாய்க்கு பேசி முடித்ததும் அந்த நிறுவனம் கடனிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்த நிறுவனத்துக்கு 4,960 கோடி ரூபாய் தள்ளுபடி என்ற பெயரில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இது நியாயமல்ல. இந்த இழப்பு ஒரு வங்கியை மொட்டையடிப்பதற்குச் சமம்.
இதனை ஒப்பிட்டு பார்க்கும்போது, பஞ்சாப் வேளாண் மேம்பாட்டு வங்கி நிலுவையில் உள்ள ரூ.229.80 கோடி வாரா கடனை 12,625 விவசாயிகளிடமிருந்து வசூலிக்க முயற்சிக்கிறது. கடன் தள்ளுபடி சலுகை பெற்ற நிறுவனங்களின் வாராக் கடன்களுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய தொகையே! திவாலாகும் நிறுவனங்களுக்கு செட்டில்மெண்ட் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது. ஆனால், கடன் தள்ளுபடி என்பதை உண்மையிலேயே மறைக்கும் முயற்சி. இந்தத் தள்ளுபடி செய்யும் கடன் தொகைகளெல்லாம் வரி செலுத்துபவர்கள் மீதுதான் சுமத்தப்படுகிறது. இதைத்தான் நோம் சோம்ஸ்கி, ‘கடினமான அன்பு’ என்கிறார். ஏழைகளுக்கு கடினமான கஷ்டத்தையும், பணக்காரர்களுக்கு அன்பையும் வழங்குகிறது
முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கார்ப்பரேட் கம்பெனிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலும் என்றார். இது உண்மை என்றால், விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்வது பொருளாதார வளர்ச்சிக்கு உதவாதா? அவரது வாதம் எனக்குப் புரியவில்லை. இத்தனைக்கும் பெரிய கம்பெனிகளும் விவசாயிகளும் ஒரே வங்கியில் இருந்துதானே கடன் பெறுகிறார்கள்? அப்படியிருக்கும்போது, கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கப்படும் கடன் தள்ளுபடி நாட்டின் வளர்ச்சிக்கு எப்படி உதவும், விவசாயிகளின் கடன் மட்டும் எப்படி தார்மீக தீமையாகும்? கடன் தள்ளுபடி கோருவதால் விவசாயிகளை மட்டும் வெறுப்பது எப்படி நியாயமாகும்?
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா, கடனைத் திருப்பி செலுத்த முடியாமல் தள்ளுபடி கோரும் விவசாயிகள் ‘கடன் திருப்பிச் செலுத்துவதில் ஒழுங்கின்மை’யை ஏற்படுத்துபவர்கள் என்று குறை கூறினார். விவசாயக் கடன் தள்ளுபடி என்பது தேசிய வரவு செலவை பாதிக்கும் தார்மீக தீமை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கூறினார்.
12,625 விவசாயிகளின் நிலங்களை பொது ஏலம் விட வேண்டும் என்பது உண்மையான நோக்கம் இல்லை என்றும் அவர்களை எச்சரிக்கை செய்வதற்காக மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பஞ்சாப் வேளாண் மேம்பாட்டு வங்கி விளக்கம் கூறியுள்ளது. அங்கு 71,432 விவசாயிகள் மொத்தம் 1,363.87 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த வேண்டும். இந்த விவசாயிகள் தங்களது கடனைத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில், அவர்களுக்கு சட்டரீதியான நோட்டீஸ் அனுப்பப்படும். ஏற்கெனவே, பல விவசாயிகள் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
ஹரியானாவில் ஒரு விவசாயி, தனது வயலில் குழாய் பதிப்பதற்காக 6 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதனை அவர் திருப்பி செலுத்தாத காரணத்தால் அவருக்கு ரூ.9.83 லட்சம் அபராதமும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளது மாவட்ட நீதிமன்றம்.
மற்றொருபுறம் அதுனிக் மெட்டாலிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கிய கடனை வசூலிக்க முடியாத காரணத்தால் அதன் கடன் நிலுவையை வங்கி தள்ளுபடி செய்துள்ளது. ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி பெரிய நிறுவனங்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜோதி ஸ்ட்ரக்சர்ஸ் நிறுவனத்துக்கு 85 சதவீதமும் அலோக் இண்டஸ்ட்ரீஸுக்கு 83 சதவீதமும் அம்டெக் ஆட்டோவுக்கு 72 சதவீதமும் எலக்ட்ரோ ஸ்டீல்ஸ்க்கு 60 சதவீதமும் பூஷன் ஸ்டீல்ஸ்க்கு 37 சதவீதமும் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் பல நிறுவனங்கள் கடன் தள்ளுபடி சலுகைகளைப் பெற்றுள்ளன. சினர்ஜிஸ் டோரே ஆட்டோமோட்டிவ் நிறுவனத்துக்கு 94.27 சதவீத கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனம் வங்கிக்குச் செலுத்த வேண்டிய ரூ972.15 கோடி நிலுவையில் ரூ.54 கோடிதான் வங்கிகளுக்குத் திரும்பக் கிடைக்கும்.
அண்மையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் எழுபது எண்பது நிறுவனங்களின் வாராக்கடன் சுமார் ரூ.3 லட்சம் கோடி. இது இழப்பு என்று கூறி தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
அண்மையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் எழுபது எண்பது நிறுவனங்களின் வாராக்கடன் சுமார் ரூ.3 லட்சம் கோடி. இது இழப்பு என்று கூறி தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இந்த கடன், கடந்த 180 நாட்களாக திருப்பி செலுத்தப்படாத கடன். அதில் 1.74 லட்சம் கோடி ரூபாய் 34 மின் உற்பத்தி நிறுவனங்களின் கடன் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அரசின் உயர்நிலைக் குழுவின் அறிக்கையின்படி டாடா, அதானி மற்றும் எஸ்ஸார் குழுமங்களுக்கு எரிபொருள் உற்பத்தித் திட்டங்களுக்காக வழங்கப்பட்ட 22,000 கோடி ரூபாய் கடனில் 10,000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட உள்ளது. இதில் சுவாரஸியமான விஷயம் என்னவெனில், இம்மாதிரியான மிகப் பெரிய நிறுவனங்களை அரசும் வங்கிகளும் இணைந்தே காப்பாற்றுகின்றன. அதேவேளையில் சிறு தொகையை செலுத்த முடியாத விவசாயிகளுக்கு எந்த மன்னிப்பும் இன்றி சிறை தண்டனை உள்ளிட்ட தண்டனைகளை வழங்க காத்திருக்கின்றன வங்கிகள். இதுவரை கடனை செலுத்தாத எந்த கார்ப்பரேட் முதலாளிக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டதில்லை.
எனது கேள்வி என்னவென்றால் கடனை செலுத்தாத, தவறிழைக்கும் நிறுவனங்கள் ஏன் தண்டனைக்குள்ளாவதில்லை? அவர்களை காப்பாற்ற ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்? அதேவேளையில் இந்த கடன் கொடுக்காத நிறுவனங்களின் முதலாளிகளை, கடன் திருப்பிக் கொடுக்காத விவசாயிகளை நடத்துவது போல் ஏன் நடத்துவதில்லை? முதலில், இந்த விஷயத்தில் கடன்களைத் திரும்ப செலுத்தாத நிறுவனக்களின் பெயர்களை ரிசர்வ் வங்கி அறிவிக்கலாமே? பல ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் சிறை தண்டனை ஏன் வழங்கக்கூடாது?
இக்கட்டுரையினை ஆங்கில வடிவில் படிக்க கிளிக் செய்யவும்
Forums › கடன் தள்ளுபடி: விவசாயிகளுக்கு ஒரு நீதி? கார்பரேட் முதலாளிகளுக்கு இன்னொரு நீதியா?