Read in : English

Share the Article

சமீப ஆண்டுகளாக தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலங்கள் கவனம் பெறத்தக்கவையாக மாறி வருகின்றன. சென்னையைப் பொறுத்தவரையில், பொது இடங்களில் விநாயகர் சதூர்த்தி தினத்தன்று சிலைகளை வைப்பதும், அதனைத் தொடர்ந்து அவற்றை கடற்கரைகளில் கரைப்பதும் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்த வண்ணமே உள்ளது. பிற இந்து மத விழாக்கள் அல்லது ஊர்வலங்களைப் போல் இல்லாமல், விநாயகர் ஊர்வலங்கள் என்றாலே கலவரங்கள் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு காரணமாக பெரும்பாலான இடங்களில் அமைந்துவிடுகிறது.

பொதுவாகவே, இந்த விநாயகர் சிலைகள் இந்து மக்கள் கட்சி மற்றும் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து  அமைப்புகளாலேயே பொது இடங்களில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன என்றகின்றனர் சென்னை காவல்துறையினர். இவ்வாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விநாயகர் சிலை ஊர்வலங்களின் போது நடைபெறும் வன்முறைகள் ஆர்.எஸ்.எஸின் இணை அமைப்புகளான சங் பரிவார இந்து அமைப்புகளால் திட்டமிட்டு தூண்டப்படுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர். தமிழகத்தில் எண்ணற்ற இந்து மத விழாக்கள் கொண்டாடப்படும் நிலையில், அவற்றில் ஒன்றும் இது போல் கலவரங்களோ, சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளோ ஏற்படுவதில்லை என்பதை சுட்டிக் காட்டும் அவர்கள், அத்தகைய இந்து மத விழாக்களின் போது உள்ளூர் இஸ்லாமியர்கள் மற்றும்  கிறிஸ்தவர்கள், இந்துக்களுக்கு ஒத்துழைப்பதாகவே கூறுகின்றனர்.

விநாயகர் சிலை ஊர்வலங்களின் போது நடைபெறும் வன்முறைகள் ஆர்.எஸ்.எஸின் இணை அமைப்புகளான சங் பரிவார இந்து அமைப்புகளால் திட்டமிட்டு தூண்டப்படுவதாக விமர்சகர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவரான அர்ஜுன் சம்பத் கூறுகையில், “சிலைக் கரைப்பு என்ற ஒரே நோக்கத்திற்காக பெருந்திரளாக இந்துக்கள் திரள்வது போன்று பிற விழாக்களில் திரள்வதில்லை. ஆனால், இவ்வாறு திரள்வது சிறுபான்மை சமூகத்தை சார்ந்தவர்களால் ஜீரணிக்கமுடியவில்லை” என்றார்.

இந்து அமைப்புகள், அதிகளவில் மக்களுக்கு மத ரீதியான ஆர்வத்தையும், இது போன்ற விழாக்களில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்தாலும், அரசியல் ரீதியாக, இந்துத்வா அமைப்புகளுக்கோ அல்லது பாரதீய ஜனதா கட்சிக்கோ ஆதரவான  மனநிலையை அம்மக்களிடமிருந்து இதுவரைப் பெற இயலவில்லை என்றே தெரிகிறது. இதுபற்றி, அர்ஜுன் சம்பத் கூறுகையில், “ விநாயகர் சதூர்த்திக்கு அப்பால், தங்களுடன் இணைந்து செயல்படாவிட்டாலும் கூட, பல அரசியல் கட்சிகளிலிருந்தும் எண்ணற்ற இளைஞர்கள் இந்த விழாவில் பங்கெடுக்கின்றனர்.” எனக் கூறுகிறார்.

திட்டமிடுதலும் ஒருங்கிணைப்பும்

கோயம்புத்தூரைச் சேர்ந்தவரான அர்ஜுன் சம்பத், விநாயகர் சதூர்த்தியின் போது சென்னைக்கு 2 முதல் 3 மாதங்களுக்கு முன்னரே வந்து முகாமிட்டு விடுகிறார்.சென்னையின் ஒவ்வொரு பகுதிகளாக சென்று, விநாயகர் சிலை அமைக்க குழுக்களை உருவாக்குகிறார். அந்த குழுக்களுக்கு பயிற்சியும் அளிக்கிறார். இக்குழுக்களில் இளைஞர்களே பெரும்பாலும் இருக்கின்றனர். அவர்களுக்கு, விநாயகர் சிலை வைக்கும் இடத்தை தேர்வு செய்வது முதல், காவல் துறை அனுமதி பெற்றுத் தருவது வரை எல்லா ஏற்பாடுகளையும் முன்னின்று கவனிக்கிறார்.

அதோடு நின்று விடாமல், தான் ஏற்பாடு செய்திருக்கும் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருக்கிறதா என அன்றைய தினம் ஒவ்வொரு இடமாக சென்று உறுதி செய்து கொள்வதுடன், அவை கரைக்கப்படும் நாள்கள் வரை அங்கு சென்று கண்காணிக்கவும் செய்கிறார்.

மேலும், கடந்த ஆண்டு சென்னையில்  700 இடங்களிலும், இந்தாண்டு 2500 இடங்களிலும் விநாயர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன என்றும் அர்ஜூன் சம்பத் கூறினார். சிலைகள் வைத்து வழிபாடு என்பது அதிகரித்து இருப்பதற்கு ஆன்மீகம் அதிகரித்து உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும் அதுதான் உண்மை என்று சொல்கிறார் அவர்.

முன்பெல்லாம் சிலைகளை வீட்டில் வைத்து வழிபட்டு வந்தார்கள். சென்னையில் இப்போது மதமாற்றங்கள் அதிகரிப்பு, இந்து சமயத்தை அவமதிப்பது போல, இந்து கடவுள்களை கேவலமாக திராவிடர் கழகம் சித்தரிப்பது, மண்ணடி, திருவல்லிக்கேணி போன்ற பகுதிகளில் முஸ்லீம் மக்கள் தொகை அதிகரிப்பு போன்ற காரணங்கள் முக்கியமாக விளங்குகிறது’ என்றார் அர்ஜூன் சம்பத்.

“அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்த இளைஞர்கள் பலரும் , இந்த விநாயகர் சதூர்த்தி காலங்களில் மட்டும் இந்து அமைப்புகளோடு இணைந்து செயல்படுகிறார்கள்” – அர்ஜுன் சம்பத்.

தொடர்ந்து பேசியபடி சிலைகளை பார்வையிட்ட அர்ஜூன் சம்பத், “இந்து மெஜாரிட்டியாக இருந்த பல பகுதிகள் இன்றைக்கு இந்து மைனாரிட்டியாக மாறிவிட்டது. ஏராளமான கிருத்தவர்கள் கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்துகொண்டே இருக்கிறார்கள். இதைப் பார்த்துக்கொண்டு இருக்கிற சாதாரண இந்து பக்தன் கூட ஏன் நாம் நமது விழாவைப் பெரிய அளவில் கொண்டாடக் கூடாது, வீடுகளிலேயே ஏன் முடித்துக்கொள்ள வேண்டும்.  ஏன் வீதிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் சென்னையில் அதிகமாக வந்ததன் விளைவுதான் இந்த எழுச்சி” என்றார்.

மேலும் அவர் நம்மிடம் சொல்லும்போது, “கடந்த காலங்களில் திராவிடர் இயக்கம் இந்த விழாவை கிண்டல் செய்தார்கள். விநாயகர் விழாவை நடத்த கூடாது என்று இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் மனு கொடுத்தார்கள். அப்போது சாதாரணமாக  இருக்கக் கூடியவர்களும் கூட கிறிஸ்தவ விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது கிடையாது, முஸ்லீம் விழாக்களை எதிர்ப்பது கிடையாது அப்படி இருக்கும் போது, நம்மை மட்டும் அவர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்ற உணர்வு மேலோங்கியதன் விளைவுதான் இது. வீட்டில் இருந்த இந்துகளை வீதிக்கு கொண்டு வந்த பங்கு இந்து மத எதிர்ப்பாளர்களுக்கு உண்டு” என்றார் அவர்.

தொடர்ந்து பேசிய அர்ஜூன் சம்பத், “சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் இளைஞர்கள் அனைவருமே, இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களா என்றால் இல்லை” என்று சொல்லும் அவர், “அவர்கள் குறிப்பாக அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த விநாயகர் சதூர்த்தி காலங்களில் மட்டும் இந்து அமைப்புகளோடு இணைந்து செயல்படுகிறார்கள். இந்த பணியை செய்வதால் அவர்கள் எங்கள் அமைப்புகளோடு சேர்வது கிடையாது” என்றார்.

இந்த நிலையில், அரும்பாக்கத்தில் வைக்கப்பட்டுள்ள  விநாயகர் சிலையை பார்வையிட்ட அர்ஜூன் சம்பத், அங்கிருந்த ஒருவரைப் பார்த்து செந்தில் குமார் பூஜை எல்லாம் எப்படி நடக்கிறது என்று கேட்டார். அவரும் சிறப்பாக நடக்கிறது என்றார். அங்கு இருந்த இளைஞர்களும் அவருக்கு உரிய மரியாதை கொடுத்து அவர் சொல்லும் பணியை சிறப்பாகச் செய்கிறார்கள். இதை பார்க்கும் போது மற்ற இயக்கத்தை சேர்ந்தவர்களையும் தன் இயக்கத்தை சேர்ந்தவர்களாக அவர் பேசிவதை பார்க்க முடிந்தது.

கோயம்பேட்டில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலையை பார்வையிட்ட அர்ஜூன் சம்பத், அந்த சிலையை முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதை கண்டதும் உடனடியாக கோபமடைந்தார். பின்னர் அப்பகுதி இளைஞர் முருகன் என்பவரை  அழைத்து, அவரது கையில் தொகை கொடுத்து, சிறப்பாக பூஜை செய்யும்படி அறிவுறுத்தினார்.

கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு காவல்துறை பாதுகாப்பு இல்லை என்றதும், அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு நேராக சென்ற அர்ஜூன் சம்பத், உடனடியாக சிலைக்கு பாதுகாப்பு போடுங்கள் என்றார். அப்போது காவல்துறையினரும் அந்த சிலைக்கு பாதுகாப்பு தருவதாக உறுதி அளித்தனர்.

தனது வீட்டிற்கு வரும் இயக்க நண்பர்கள், சிவா, ரமேஷ் என பெயர் சொல்லி அழைத்து, திருவல்லிகேணியில், அசோக்நகர், கே.கே.நகர், சிம்மையா நகர், அண்ணா நகர், திருமங்கலம் ஆகிய இடத்தின் பெயரைக் குறிப்பிட்டு அந்த இடத்தில் உள்ள சிலை எப்படி இருக்கிறது என்பதை கேட்டறிகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடுவதில், “அரசியல் பிண்ணனி என்று எதுவும் கிடையாது. நாங்கள் எல்லோரும் இந்து அமைப்புகள். அதேநேரத்தில் ஆன்மிக அரசியலை விரும்புகிறோம். அதனை பிஜேபி முன்னெடுப்பதால் அதனை ஆதரிக்கிறோம்” என்றார்

இறுதியாக பேசிய, அர்ஜூன் சம்பத், விநாயகர் தமிழ் கடவுள்தான். ஆனால் சிலர் விநாயகர் வடநாட்டு கடவுள் என்று வேண்டுமென்றே சொல்கிறார்கள். அவ்வை பாட்டியை விநாயகர் தமிழ் கடவுள்தான் என்பதை எடுத்து சொல்லி இருக்கிறார். இது மக்கள் விழாவாகத் தான் இன்றைக்கு நடக்கிறது. இதற்கு மதச்சாயம் பூசுகிறார்கள். அரசியல் சாயம் பூசுகிறார்கள்” என்றார்.

சிறுபான்மையினர் பார்வையில்…

இந்துகளின் பல்வேறு ஆன்மீக விழாக்களை பார்த்த இஸ்லாமியர்கள் , விநாயகர் சதூர்த்தி விழாவை மட்டும் சற்று மாறுபட்ட கோணத்தில் பார்க்கிறார்கள்.

அதற்கு பல்வேறு நிகழ்வுகள் சான்றாக உள்ளன. குறிப்பாக, விநாயகர் சிலை ஊர்வலத்தின் சென்னை திருவல்லிக்கேணியில் ஏற்பட்ட பல்வேறு நிகழ்வுகளைத் தான் காரணமாக முன்வைக்கிறார்கள்.

அப்படிப்பட்ட திருவல்லிக்கேணியில் வசிக்கும் இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்த எஸ்.டி.பி.ஐ. இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல் ஹரீம்மை சந்தித்தோம். அவர் எப்படி இந்த விநாயகர் சதூர்த்தி விழாவை பார்க்கிறார் என்று கேட்டபோது, “நாங்கள் பல ஆண்டுகளாக இந்த பகுதியில் வசிக்கிறோம். இந்த பகுதியில் வசிக்கும் இந்து மதம், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் எல்லாரும் அண்ணன், தம்பி போன்றுதான் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகிறோம்” என்றார் அப்துல் ஹரீம்.

நாங்கள் எங்கள் மத ரீதியான விழாக்களை ஒற்றுமையாகத் தான் கொண்டாடி வருகிறோம் என்று சொல்லும் அவர், “விழாக்களில் எங்கள் வீட்டு உணவை, அவர்களுக்கு தருவோம், அவர்கள் உணவை எங்களுக்கு தருவார்கள். எங்களுக்குள் எந்தவித பாகுப்பாடும் கிடையாது” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அப்துல் ஹரீம், “இந்தியாவில் வாழ்கின்ற இஸ்லாமியர்கள் அனைவரும் மதச்சார்பின்மை இன்றி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் கிருத்தவர்கள் இந்துக்கள் அனைவருமே மதச்சார்பின்மையாக இன்றி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவரவர் மதத்தை அவர்கள் பின்பற்றுகிறார்கள். இதையே தான் இந்தியா முழுவதும் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம், இதற்கு உட்பட்டவர்கள்தான் இஸ்லாமியர்கள்” என்றார்.

இப்படி ஹரீம் சொல்லிக் கொண்டு இருக்கும்போது மற்றொரு இஸ்லாமியர் சலீம் அங்கு வந்தார். அவர், “எதைப் பற்றி பேசிகொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்க ஹரீம் அவரிடம் விநாயகர் சதூர்த்தி விழாவை பற்றித் தான் சொல்கிறேன்” என்றார்.

உடனே அவர் “அதைபத்தி பேசுகிறீர்களா…? நாங்கள் இந்த விழாவை நல்லாதான் பார்க்கிறோம். ஆனா,  சிலர்தான் திருவல்லிக்கேணின்னா விநாயகர் சதூர்த்தி ஊர்வலம்மா…  அப்ப பிரச்சினை வரக்கூடிய இடம்ன்னு ஆக்கிட்டாங்க. இதுவும் கடந்த 7 ஆண்டாகதான் இருக்கு” என்று சொன்னார் சலீம்.

தொடர்ந்து பேசிய அப்துல் ஹரீம், “இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை மையமாக வைத்து, இந்து மதவெறியர்கள், கலவரத்தை உண்டாக்குவதற்கு விநாயக சதுர்த்தி விழாவை பயன்படுத்துகின்றனர்” என்றார்.

“ஆண்டு முழுவதும் பிள்ளையாரை வழிபட்டு கொண்டுதான் இருக்கிறோம்.  அதே தெருக்களில்தான்  தான் இந்துக்கள், முஸ்லிம்கள்  கிறிஸ்துவர்கள் அனைவரும்  ஒன்றாக வாழ்கிறோம்.   எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது” – அப்துல் ஹரீம்

தொடர்ந்து பேசிய அவர், “பொதுவாக தமிழகத்தில் எத்தனையோ கோயில் திருவிழாக்கள் நடக்கிறது,  கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது,  எங்காவது அவர்கள் சாமி திட்டினார்கள் இவர்கள் சாமி திட்டினார்கள் இஸ்லாமியர்களால் கலவரம் நடந்தது என்று எதாவது நிகழ்வை கூற முடியுமா” என்று கேட்கும் அவர், ஆண்டு முழுவதும் பிள்ளையாரை வழிபட்டு கொண்டுதான் இருக்கிறோம்.  அதே தெருக்களில்தான்  தான் இந்துக்கள், முஸ்லிம்கள்  கிறிஸ்துவர்கள் அனைவரும்  ஒன்றாக வாழ்கிறோம்.   எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது” என்று சொல்லும் அப்துல் ஹரீம்,  விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் செல்லும்போது மட்டும் ஒரு பதட்டத்தை உருவாக்கி  முஸ்லிம்களுக்கு எதிராக கோஷத்தை உருவாக்கிக்கொண்டு  இந்த இந்து மதவெறியர்கள் ஊர்வலம் நடத்துகிறார்கள்’ என்கிறார்.

அரசாங்கம், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக  சில சாலைகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலத்தை நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்திய பின்னரும் கூட, அந்த வழியாகத் தான் ஊர்வலம் நடத்துவோம் என்று ஒரு பதட்டமான சூழ்நிலையை ஆண்டாண்டு காலமாக ஏற்படுத்துகிறார்கள்”  என்கிறார் அப்துல் ஹரீம்.

இன்னும் சொல்லப் போனால், இந்து கோயில் விழாக்களில் கூட  இஸ்லாமியர்கள் பங்கு பெற்று அந்த விழாக்களை  முன்நின்று நடத்துவதும் உண்டு.  அதுமட்டுமல்லாமல் இந்து மதத் தலைவர்கள், இஸ்லாமிய ஜமாத்  தலைவர்களை அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தி அழைத்து இருவரும் ஒன்றாக இணைந்து விழாக்களை நடத்துவதும் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும்தான் நடக்கிறது’ என்கிறார் அபதுல் ஹரீம்.

இதற்கு அப்பாற்பட்டு விநாயகர் சதுர்த்தி மட்டும்  விவாதத்துக்குரியதாக மாறக் காரணம் என்னவென்றால் இந்த விநாயகர் சதுர்த்தி பெரும்பாலும் வட இந்தியாவில் கொண்டாடப்படும் ஒரு விழாவாக இருக்கிறது, தமிழகத்தில் இந்த நடைமுறை கிடையாது” என்றார் அப்துல் ஹரீம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்துக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் வைத்து விழாவை போல சிறப்பாக கொண்டாடுவர். வட மாநிலங்களின் தழுவல் ஆகவே தற்போது தமிழகத்தில் பொது இடத்தில் சிலை வைத்து வழிபடும் பழக்கம் 1990 ஆண்டு முதல்  உருவெடுத்துள்ளது . ஆயினும் இச்சிலை வழிபாட்டை அப்பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒன்று கூடி கொண்டாடுகின்றனர் ’ என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “சிலை ஊர்வலத்தின் போது திடீரென்று இந்து முன்னணியினர்  கொடி தென்படுகிறது அதற்கான காரணத்தை அலசும் போது இது மாதிரி கொடி வைத்து செல்லும் போது காவல் துறையினரின்  அத்துமீறல்கள் தவிர்க்கப்படுகிறது என்று கூறுகின்றனர்” என்கிறார் அப்துல் ஹரீம்.

இதன் மூலம், இந்து முன்னணியினர் எப்படி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார்கள் என்றால் இன்று தமிழகத்தில் மதம் சார்ந்த கட்சிகள் கிடையாது. அனைத்து கட்சிகளும் அனைத்து மதத்தினரும் இருக்கிறார்கள் இந்து  முன்னணிக்கு ஆதரவளிக்கும் மக்களின் எண்ணிக்கை,  தமிழக மக்கள் தொகையில் ஒரு சதவீதம் அளவிலேயே இருக்கின்றனர்” என்கிறார்.

மேலும் அப்துல் ஹரீம், “இது போன்று மத உணர்வுகளை தூண்டும் போது அவர்களின் கட்சிக்கு ஆதரவு பெருகும் என்ற நோக்கத்தோடு இத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்” என்கிறார்.

“இத்தகைய செயல்பாடுகளுக்கு பின்னணியில் பிஜேபி கட்சியினர் இருக்கிறார்கள் என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவர்களால் இந்து மக்களே பெரும்பாலும் துன்பத்திற்கு ஆளாகின்றனர். இத்தகைய செயலை செய்தேனும் தமிழகத்தில் தங்களின் ஓட்டு வங்கியை  வளர்க்க வேண்டும் என்று  அவர்கள் விரும்புகின்றனர்” என்கிறார் அப்துல் ராஹீம்.

“ஆனால், தமிழகம் பெரியார் அண்ணா போன்றவர்களால் பக்குவப்பட்ட பூமி இப்பூமியில் இதுபோன்ற மதவாதிகளால் பெரிதாக காலூன்ற முடியாது என்பதே எங்களை போன்ற இஸ்லாமியர்களின் கருத்து” என்கிறார் அப்துல் ஹரீம்.

சென்னை மீனவர்கள் என்ன சொல்லுகிறார்கள்?

விநாயகர் சதூர்த்தி விழா, சென்னை மீனவர் பகுதி மக்களின் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உருவெடுத்துள்ளது.

குறிப்பாக சென்னையில், எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு பகுதியில், கடற்கரை கிராமங்கள் உள்ளன. பட்டினத்தார் குப்பம், நல்ல தண்ணீர் ஓடை குப்பம், திருச்சினாங்குப்பம், திருவொற்றியூர் குப்பம், காசிமேடு குப்பம் என பல கிராமங்கள் உள்ளன.  இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும், மீனவர்கள் தான்,  தலைமுறை தலைமுறையாக, மீன் பிடித் தொழிலை தான் நம்பி உள்ளனர்.

சென்னையில் பல மீனவ கிராமங்களையொட்டித் தான், பிரசித்திப் பெற்ற பல்வேறு கோவில்கள் உள்ளன. அரசராக இருந்து, ஆண்டியாக மாறி, நடந்தே வந்து, திருவொற்றியூர் கடற்கரையில், ஜீவ சாமதி அடைந்த பட்டினத்தாருக்கும், இங்கு தான் கோயில் உள்ளது.

இப்படிப்பட்ட மீனவ சமுதாய மக்கள் வசிக்கும் காசிமேடு பகுதிக்கு நாம் சென்றோம். அங்கு எப்படி விநாயகர் சதூர்த்தி விழா கொண்டாடப்படுகிறது என்று பார்த்தோம். அந்த கிராம பகுதிகளிலும் பெரிய விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்துகிறார்கள்.

“மீனவர்கள் சாமி கும்பிடமாட்டார்கள் என்றும், அவர்கள் கடல் தொழிலுக்கு போகும் போது, கடல் மாதாவைக் கும்பிடுவார்கள் என்றும் பலரும் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு” என்கிறார் மீனவ சமூதாய தலைவர் தயாளன்.

“சென்னை காசிமேட்டு மீனவர்கள் விநாயகர் சதூர்த்தி விழா சிறப்பாக கொண்டாடுகின்றனர். இவர்கள், இந்து அமைப்புடன்  இணைந்து செயல்படாமல், தனியாகவே சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள்” – தயாளன்.

தொடர்ந்து அவர் நம்மிடம் பேசும்போது, “ஒரு காலத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து,  இந்து அமைப்பினர் மட்டுமே வழிபட்டு வந்தனர். விநாயகர் சதுர்த்தி விழா, மீனவர்கள் கொண்டாடுவார்களா என்ற கேள்வி நிறைய பேருக்கு உள்ளது. தற்போது மீனவர்களும் கூட கொண்டாட்த் துவங்கியுள்ளனர்” என்று பேசியபடியே அவரது வீட்டுத் தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்க, அவரைப் பின் தொடர்ந்தோம்.

அப்போது, பெரும்பாலான வீடுகளில் விநாயகர் படம் வைக்கப்பட்டுள்ளதை காணமுடிந்தது. தயாளனும் தனது வீட்டுக்குச் சென்று விநாயகரை வழிப்பட்டார்.

தொடந்து பேசிய அவர், “சென்னையிலும், மீனவர்கள் சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தியையொட்டி, அவர்களும், சிலைகளை பிரதிஷ்டை செய்து, வழிபாடு செய்கின்றனர். சென்னை காசிமேட்டு மீனவர்கள் விநாயகர் சதூர்த்தி விழா சிறப்பாக கொண்டாடுகின்றனர். இவர்கள், இந்து அமைப்புடன்  இணைந்து செயல்படாமல், தனியாகவே சிலைகளை வைத்து வழிபடுகிறார்கள் என்றார் தயாளன்.

“எங்கள் பகுதிக்கு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வரமாட்டார்கள். அதேபோன்று அவர்களால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சொல்லும் தயாளன், விநாயகர் சிலை கரைக்கும்போது இந்து அமைப்புகளுக்கு நாங்கள் உதவியாக இருப்போம்” என்றார்.

“மீனவர்களின் தெய்வ பக்தியை யாரும் மிஞ்ச முடியாது. எங்களது பகுதியில், பிரசித்தி பெற்ற கோவில்கள் சில, நாங்கள் கட்டி இருந்தாலும், கடற்கரை கிராமங்களிலும், அதிகளவில் அம்மன் கோயில்கள் தான் இருக்கும். ஆனாலும் மதவேறுபாடின்றி, வணங்கும் ஒரே கடவுள்  விநாயகர் தான். மீனவர்கள் பலர் கிறிஸ்தவர்களாக மதம் மாறியிருந்தாலும் கூட விநாயகரை கும்பிடாமல் இருக்க மாட்டார்கள்” என்றார் தயாளன்.

மேலும் அவர், விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, கிரேன் மூலம் , கடலில் கரைக்கப்படுகிறது. அப்போது  சில சிலைகளை, நடுக்கடலுக்கு கொண்டு சென்று, கரைக்க சொல்வார்கள்,  அப்போது, தன் உயிரையும் பொருட்படுத்தாமல், நடுக்கடலுக்குச் சென்று,  சிலைகளைக் கரைப்பதில், மீனவர்களுக்கு நிகர் மீனவர்கள் தான்” என்றார்.

தொடர்ந்து காசிமேடு கடற்கரையோரமாகவே நடந்து சென்றே பேசிய தயாளன், அதிகளவில், இயக்குனர் பாரதி ராஜா படத்தில், மீனவர்கள், கிறிஸ்தவர்களாகவே காண்பித்து இருப்பார். கடற்கரை ஓரம் தேவாலயம், மீனவர்கள் கழுத்தில் சிலுவை டாலர் என சினிமாவில் பார்த்து, மீனவர்கள் என்றாலே, கிறிஸ்துவர்கள் என்றாகி விட்டது.  மீனவர்கள், கிறிஸ்துவர்களாக இருக்கின்றார்கள், நாங்கள் இல்லை என்று சொல்ல வில்லை” என்றார்.

ஆனாலும், பெரும்பாலும் மீனவர்கள், இந்து கடவுளை வழிபடுகிறார்கள். நாங்களும் பொங்கல், தீபாவளி,  விநாயகர் சதுர்த்தி என அனைத்து இந்து மத பண்டிகைகளை கொண்டாடுவோம்” என்றார் இந்திய மீனவ சங்க தலைவரான தயாளன்.


Share the Article

Read in : English