தமிழ்

Share the Article

அண்மையில் நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பாலில், 68% கலப்படமானது என தெரிவித்தார். இதைக் கேட்டு தேசம் அதிர்ச்சியுறவில்லை. உண்மையைச் சொல்லப்போனால், நான் கடந்த 30 ஆண்டுகளாக பாலிலும், பாலிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களிலும் கலப்படம் எவ்வாறு பரவலாக உள்ளது என்பதை செய்திகளில் படித்துக்கொண்டுதான் உள்ளேன்.

மனித உடல்நலத்துக்கு ஊறுவிளைவிக்கும் பால் மற்றும் பால்படுபொருட்களை சோதிக்காமல், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI), பாலை செறிவூட்டுவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதாவது, பாலில் விட்டமின் ஏ மற்றும் டி சத்துக்களைச் சேர்த்து, அது ஊட்டம் மிகுந்ததாக மாற்ற முனைகிறது. போலியான பாலை விற்பனை செய்யும்போது, அதில் செறிவூட்டல் எதற்கு? உதாரணமாக பஞ்சாபில், போலியான பால் மற்றும் பால்படு பொருட்களை ஆராய்ந்ததில், 40 சதவீதம் கலப்படமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், 70-80 சதவீதம் கலப்படம் இருந்துள்ளது. கழிவறைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படும் கந்தக அமிலத்தை யூரியா மற்றும் சோப்புத் துகள்கள் தவிர பன்னீர் கட்டி தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், அதனைக் கொண்டே செயற்கைப் பால் தயாரித்து, அதில் ஊட்டச்சத்தினை செறிவூட்டுவதால் என்ன நன்மையை அதனால் கொடுத்து விட முடியும்?

நாடு முழுவதும் தினமும் கலப்படம் செய்யப்பட்ட, வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட பாலை மக்கள் உட்கொண்டால், ‘இயற்கையான பால்’ என தர நிர்ணயம் செய்வதில் கவனம் செலுத்தி என்ன பயன்?

மற்றொரு உதாரணத்தை எடுத்துக்கொள்வோம். உணவுப் பாதுகாப்பு ஆணையம், சந்தைகளில் கிடைக்கும் இயற்கை உணவுப் பொருட்களின் தரத்தை முறைப்படுத்துவதில் ஆரம்பக் கட்ட நிலையிலேயே இருக்கிறது. இத்தகைய சூழலில் நுகர்வோருக்கு சுகாதாரமான உணவுப் பொருட்கள் கிடைக்க செய்வதில், உணவுப் பாதுகாப்பு அமைப்புகளின் தோல்விகள் குறித்து வெளிவந்த ஊடகச் செய்திகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளன. சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறையின் நிலைக்குழு, குடிநீர் உட்பட உணவுப்பாதுகாப்பை உறுதிப்படுத்த இயலாத நிலையில் இருக்கும் பிரச்சினைகளின் மீது தீவிர கவனம் செலுத்தினாலும் கூட,  நாம் உண்ணும் உணவுப் பொருட்களில் உள்ள ஆபத்துகளை அத்தனை எளிதில் புறம் தள்ள முடியாது.

முதன்முதலாக ‘தேசிய ஊட்டச்சத்து கல்வி நிறுவனமானது உணவுப் பொருட்களில் ’ஆர்கனோபாஸ்பேட்’ வேதிப்பொருள் இருக்கிறதா என விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதன் முடிவில், ஹைதாராபாத்திலுள்ள குழந்தைகள் சாப்பிடும் உணவில் 10-40 சதவீதம் அதிகமாக பூச்சிமருந்துகள்  உள்ளது தெரியவந்தது. அது அமெரிக்கா, ஐரோப்பா, கனடா ஆகிய மூன்று நாடுகளில் குழந்தைகள் சாப்பிடும் அளவுக்கு இணையானது என்பது மிகவும் அதிர்ச்சிதரக் கூடிய உண்மை. இந்தியாவின் உணவு பாதுகாப்பு தரத்தை அறிந்துள்ளதால், நாட்டின் மற்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளின்  உணவில் இதே அளவுக்கோ அல்லது அதிகமாகவோ நஞ்சுப் பொருட்கள் இருக்க வாய்ப்புள்ளது.

மற்றொரு ஆய்வில், அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் என்ற புதுடெல்லியிலிருந்து இயங்கும் அமைப்பு  சந்தையில் கிடைக்கும் 65 வகையான  பதப்படுத்தப்பட்ட  உணவுகளில், 21 வகையான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அந்த உணவுகளில், காலை உணவாக வழங்கப்படும் தானியங்கள், ரெடிமேட் உணவுகள், புரதச் சத்து உணவுகள், மற்றும்  பச்சிளம் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படும் உணவுகளும் அடக்கம். இதில் இன்னும் மோசமான அம்சம் என்னவென்றால், 74% இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளிலும் 96 சதவீதம் உள்நாட்டு உணவுப் பொருட்களிலும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உட்பொருட்கள் இருப்பதை அதன் மேலட்டையில் குறிப்பிடுவதில்லை. இதுகுறித்து பொதுச் சமுகம் தொடர்ந்து பல வருடங்களாக எச்சரிக்கை செய்யப்பட்டு வந்தாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உட்பொருட்கள் இருக்கின்றன. அதை தடுத்து பொதுமக்களின் நலனைக் காப்பதில் உணவுப் பாதுகாப்பு அமைப்பானது எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களில் பூச்சிக்கொல்லி மருந்தின் மீதமோ அல்லது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பொருட்களின் உட்பொருட்களோ உள்ளதா என்பதை அளவீடு செய்ய தகுந்த, தேவையான தர நிர்ணய உள்கட்டமைப்பு வசதிகள் இந்தியாவில் இல்லை. சந்தைகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களில், அது இயற்கையாக விளைவித்த அல்லது செய்யப்பட்ட பொருள் என்று குறிப்பிட வேண்டும். அல்லது “வேதி உரம் அல்லது மருந்து போட்டு செய்யப்பட்ட உணவு’’ என்று குறிப்பிட வேண்டும். இவ்வாறு,  நுகர்வோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டால் எதை வாங்குவது என அவர்களால் முடிவு செய்யும் வாய்ப்பு கிடைக்கும். இப்படி செய்யப்பட்டால், பெற்றோர்கள் நிச்சயம் இருமடங்கு எச்சரிக்கையாக இருப்பார்கள். அதுவும் வழக்கமாகக் கிடைக்கக் கூடிய உணவுப் பொருட்களில் நுகர்வோருக்கு அவர்கள் எந்த மாதிரி உணவைச் சாப்பிடுகிறார்கள், உணவில் தீமை பயக்கும் வேதிப்பொருட்கள் இருக்கின்றனவா இல்லையா என்பதை தெரியப்படுத்த உணவுப் பாதுகாப்பு ஆணையம் தன் நேரத்தையும் பலத்தையும் செலவழிக்க வேண்டியது கட்டாயம். நுகர்வோர் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வேதி உணவுப் பொருட்களை உண்டாலும், என்ன சாப்பிடுகிறோம் என்பதைத்  தெரிந்துகொள்வதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது.

நாடு முழுவதும் தினமும் கலப்படம் செய்யப்பட்ட, வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட பாலை மக்கள் உட்கொண்டால், ‘இயற்கையான பால்’ என தர நிர்ணயம் செய்வதில் கவனம் செலுத்தி என்ன பயன்? உணவுக் களஞ்சியம் என்றழைக்கப்படும் பஞ்சாபில், ஒரே ஒரு உணவு பரிசோதனைக் கூடம் 31 அலுவலர்களைக் கொண்டு இயங்குகிறது. சுத்தமான பால் தான் நுகர்வோருக்கு வழங்கப்படுகிறதா என்பதுதான் அவர்கள் முன்னுள்ள சவால்.

சிகரெட் குடிப்பது உடல்நலத்துக்கு கேடு என்று எச்சரிக்கை செய்யப்படுவது போல, உணவு பொருளிலும் வேதிப் பொருட்கள்  இருக்கிறது என்று எச்சரிப்பது அவசியம்.

இயற்கை விளைபொருட்களில் (organic produce) வேதிப் பொருட்களைக் கண்டறிதல் முக்கியமான கூறு அல்ல. ஜூலை 1, 2018-ல் அமலுக்கு வந்த உணவுப் பாதுகாப்பு (இயற்கை உணவுப் பொருட்கள்)  மற்றும் தர நிர்ணய சட்டம் 2017- இன் படி இயற்கை விளைபொருட்களில் வேதிப் பொருட்கள் இருக்கின்றனவா என்பதை கண்டறிவது அதன் வளர்ச்சிக்கு உதவும். இது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. காரணம் 2013-15 ஆம் ஆண்டுகளில் இயற்கை விளைபொருள் என்று சான்றளிப்பது 38% வளர்ச்சியடைந்துள்ளது. தற்போது, 1.49 மில்லியன் ஹெக்டேர் நிலம் இயற்கை வேளாண்மையின் கீழ் உள்ளது. அதில், கிட்டத்தட்ட 8.35 லட்சம் விவசாயிகள் விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வேதி உரங்களை பயன்படுத்தி வரும் விவசாயிகளுக்கு எந்த சான்றிதழும் தேவைப்படுவதில்லை. ஆனால் இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளைச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளச் சொல்வது அவர்களுக்கு கூடுதல் பணச் சுமையைத் தருவதாக அமையும். நுகர்வோரிடம் நேரடியாக விற்பனை செய்யும் சிறு விவசாயிகளுக்கு சான்றிதழ் தேவைப்படுவதில்லை. ஆனால் தற்போது அவர்களுக்கும் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நிலையான வளர்ச்சியை பெற்று வரும் இயற்கை வேளாண்மையின் மீது, இது வளர்ச்சியைத் தடுக்கும் விதத்தில் உள்ளது. என்னைப் பொறுத்தவரை, சந்தைகளில் கிடைக்கும் வழக்கமான பொருட்களுக்கு, இதில் வேதிப்பொருள் இருக்கிறது என்று சான்றிதழ் அளிப்பது அவசியம் என்றே கருதுகிறேன்.

சிகரெட் குடிப்பது உடல்நலத்துக்கு கேடு என்று எச்சரிக்கை செய்யப்படுவது போல, உணவு பொருளிலும் வேதிப் பொருட்கள்  இருக்கிறது என்று எச்சரிப்பது அவசியம். அப்படி எச்சரிக்கை செய்யப்பட்டால் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு என்ன வாங்கித் தர வேண்டும் என்பதில் இருமடங்கு எச்சரிக்கையாக இருப்பார்கள். உணவு விஷயத்தில் இப்படியான புரட்சி காலத்தின் தேவை.

இக்கட்டுரையின் ஆங்கில வடிவத்தை படிக்க கிளிக் செய்யவும்


Share the Article