வரும் ஆண்டிலிருந்து ஜேஇஇ மெயின் (JEE Main தேர்வை மத்திய செகண்டரி கல்வி போர்டுக்கு (சிபிஎஸ்இ) பதிலாக நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி (National Testing Agency ) நடத்த உள்ள சூழ்நிலையில் இத்தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம், இந்தியுடன் பிராந்திய மொழியான குஜராத்திக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டைப் போல தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட இதர பிராந்திய மொழிகளுக்கு தற்போதும் கேள்வித்தாளில் இடம் இல்லை.
நீட் தேர்வில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு இடம் அளித்து விட்டு, ஜேஇஇ மெயின் தேர்வில் பிராந்திய மொழிகளில் குஜராத்திக்கு மட்டும் ஏன் இந்த தனி உரிமை என்பதற்கான காரணம் தெரியவில்லை.
ஐஐடிக்களில் சேருவதற்காக நடத்தப்பட்டு வந்த ஐஐடி அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வுக்கும் என்ஐடி, ஐஐஐடி போன்ற மத்திய அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காகவும் நடத்தப்படும் ஜேஇஇ நுழைவுத் தேர்வை இதுவரை சிபிஎஸ்இ நடத்தி வந்தது. தற்போது, அகில இந்தியஅளவில் ஜேஇஇ மெயின் (JEE Main), நீட் (NEET), சிமேட் (CMAT), ஜிபேட் (GPAT) , யுஜிசி நெட் (UGC NET) ஆகிய தேர்வுகளை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை புதிதாக அமைத்துள்ள நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்த உள்ளது.
“சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு வழங்கியுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நடக்கும் ஒரு நுழைவுத் தேர்வில் குஜராத்தி மொழிக்கு மட்டும் இடம் அளித்து விட்டு தமிழ் உள்ளிட்ட பிற பிராந்திய மொழிகளைப் புறக்கணிப்பது சரியல்ல.” – பிரின்ஸ் கஜேந்திர பாபு
ஐஐடிகள் நடத்தும் ஜேஇஇ அட்வான்ஸ்ட் நுழைவுத் தேர்வில் கேள்வித்தாள்கள் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே கொடுக்கப்பட்டு வருகின்றன. கேள்வித்தாளில் இந்திக்கு இடம் அளிக்கப்பட்டாலும்கூட தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு இடம் அளிக்கப்படவில்லை.
“சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற உரிமையை அரசியலமைப்புச் சட்டத்தின் 14வது பிரிவு வழங்கியுள்ளது. இந்த நிலையில், நாடு முழுவதும் நடக்கும் ஒரு நுழைவுத் தேர்வில் குஜராத்தி மொழிக்கு மட்டும் இடம் அளித்து விட்டு தமிழ் உள்ளிட்ட பிற பிராந்திய மொழிகளைப் புறக்கணிப்பது சரியல்ல. இதனால், இந்தி, குஜராத்தி மொழியைத் தாய் மொழியாகக் மாணவர்களுக்கு இத்தேர்வு சாதகமாக இருக்கும். இத்தேர்வில் தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளுக்கும் இடம் தர வேண்டும்” என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
“மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் படிக்க இடம் அளித்து விட்டு, நுழைவுத் தேர்வை ஆங்கிலம், இந்தி, குஜராத்தியில் ஏதாவது ஒன்றில் எழுது என்றால் அது எப்படி தமிழ் மீடியம் மாணவர்களுக்கு சாத்தியமாகும்” என்று கேள்வி எழுப்பும் சில கல்வியாளர்கள், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொறியியல் கல்வி நிறுவனங்களில் இடமே இல்லாமல் போய்விடுவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
நீட் தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என்று அறிவித்து விட்டு வரும் ஆண்டில் ஒரு முறைதான் நடத்தப்படும் என்று மத்திய அரசு மீண்டும் பின்வாங்கியது. ஆனால், இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வு வரும் ஆண்டு முதல் ஓராண்டில் இரண்டு முறை நடைபெறும் என்று இத்தேர்வை நடத்தும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி அறிவித்துள்ளது.
முதல் தேர்வு வரும் ஜனவரி 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அத்தேர்வு முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி நடைபெறும். இரண்டாம் முறை நடத்தப்படும் தேர்வு ஏப்ரல் 6ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி நடைபெறும். அத்தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறும்.
“இரு முறை தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் மதிப்பெண்களை உயர்த்திக் கொள்வதற்கு இது மேலும் ஒரு வாய்ப்பு. முதல் முறை தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக உள்ள மாணவர்கள் ஓராண்டை வீணாக்காமல் அதே ஆண்டில் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கிறது. அதனால்தான் இந்த மாற்றம்” என்று நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது. இரண்டு தேர்வுகளில் எதில் ஒரு மாணவர் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாரோ, அந்த மதிப்பெண்களே ரேங்க் பட்டியல் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஓரே ஆண்டில் இரண்டு முறை தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. ஆனால், முதல் தேர்வை நன்றாக எழுதிய மாணவர்கள் கூட, மீண்டும் தேர்வு எழுதுவார்கள். இதனால், தேர்வு நடத்தும் அமைப்புக்குத் தேர்வுக் கட்டணம் மூலம் நல்ல வருமானம் கிடைககும். அத்துடன், கோச்சிங் மையங்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க வழி ஏற்படும் என்பதைத்தவிர வேறு என்ன நன்மை இருக்கிறது? அத்துடன், பிளஸ் டு தேர்வுக்கு முன்பும் அதன் பிறகும் இரு முறை மெயின் தேர்வுக்குத் தயாராவதிலேயே மாணவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதிருக்கும். அதனால் பிளஸ் டூ பாடங்களைப் படிப்பதில் மாணவர்களால் போதிய கவனம் செலுத்த முடியாது” என்கிறார் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவின் முன்னாள் செயலாளர் பி.வி. நவநீதகிருஷ்ணன்.
பொதுவாக, பிப்ரவரி மாதத் தொடங்கத்தில் செய்முறை தேர்வுகள் நடைபெறும் என்பதால், ஜனவரி மாதத்தில் நடைபெறும் ஜேஇஇ மெயின் நுழைவுத் தேர்வு காரணமாக மாணவர்களின் கவனம் சிதறக்கூடும் என்பதையும் சில ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஜேஇஇ மெயின் முதல் தாளை எழுத்துத் தேர்வாக எழுதலாம். அல்லது கம்ப்யூட்டர் மூலமும் எழுதலாம். வரும் ஆண்டிலிருந்து இத்தேர்வு கம்ப்யூட்டர் மூலம் (Computer Based Test ) மட்டுமே எழுத முடியும் என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி தெரிவித்துள்ளது. பி.ஆர்க்., பி.பிளானிங் படிப்புகளுக்கான இரண்டாம் தாள் முழுவதும் முன்பு எழுத்துத் தேர்வாக மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. தற்போது, இரண்டாம தாளின் முதல் பகுதி கம்ப்யூட்டர் அடிப்படையிலான தேர்வாக மட்டுமே நடத்தப்படும். அதன் இரண்டாம் பகுதியான டிராயிங் டெஸ்ட் மட்டுமே, எழுத்துத் தேர்வாக (pen and paper test) இருக்கும் என்றும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.
Forums › ஐஐடி- ஜெஇஇ மெயின் தேர்வில் குஜராத்திக்கு இடம்; தமிழுக்கு இடமில்லை!