Read in : English

Share the Article

தற்போது, காவிரியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால், டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல பெருகியது. கொஞ்ச காலத்துக்கு முன்னால் மாநிலம் வறட்சியின் பிடியில் சிக்கி இருந்தது. அண்மைக் காலத்தில், குறிப்பாக கடந்த ஆறு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பருவமழை காலம் தவறி பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீரின் அளவு குறைந்து விட்டது. தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தின் குன்னாண்டார் கோவில் ஒன்றியத்தில் பல விவசாய திட்டங்களை செயல்படுத்தி வரும் ‘குடும்பம்’ எனும் அரசு சாரா தொண்டு நிறுவனம், அந்தப் பகுதியில் கிடைக்கும் தண்ணீரின் அளவிற்கேற்ப  நிலத்தை பண்படுத்தி மாற்று பயிர் சாகுபடி முறையில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. உயிரி கிராம மாநாடுகள், விதைத் திருவிழாக்கள், வேளாண் பயிற்சிகள் போன்ற பயிற்சித் திட்டங்கள் மூலம் விழிப்புணர்வுவை ஏற்படுத்தி வரும் இந்தத் தொண்டு நிறுவனம், அதிகமாக தண்ணீர் தேவைப்படும் பயிர் சாகுபடியிலிருந்து குறைந்த தண்ணீரில் சாகுபடி செய்வதை ஊக்குவித்து வருகிறது.

இயற்கைச் சூழலுக்கு ஏற்ற வகையில் தானியங்களை பயிரிட்டு அதனால் நல்ல பலனடைந்து வரும் உடையாளிப்பட்டியை சேர்ந்த விவசாயி ராமலிங்கம், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் விவசாயிகள் செயல்பட வேண்டியது குறித்து தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்:

“எனக்குச் சொந்தமாக 13 ஏக்கர் நிலம் உள்ளது. பாசனத்தின் மூலமும் மழையின் மூலமும் நிலத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைத்து வந்தது. அந்த நிலத்தில் வேறு வகையிலான  நீர்ப்பாசன வசதிகள் கிடையாது. முன்பெல்லாம் பத்து ஏக்கர் நிலத்தில் நான் நெல் போன்ற அதிகத் தண்ணீர் தேவைப்படும் பயிர்களை மட்டுமே சாகுபடி செய்வேன். ஆனால் மழை பொய்த்து, வறட்சி ஏற்பட்டதால் நிலத்துக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனதால் நெல் பயிரிடுவதை  நிறுத்தி விட்டேன். நான் தற்போது இரண்டு ஏக்கர் நிலத்தை மட்டுமே விவசாயத்திற்கு பயன்படுத்துகிறேன். வறட்சியினால்,  கிணறும் வரண்டு விட்டது. எனவே, 340 அடி  ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு தோண்ட முடிவு செய்தேன்.”

இந்த ஆண்டுதான் முதன் முறையாக நெல்லுக்குப் பதிலாக தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் தானியங்களைப் பயிரிட்டார் அவர். “கடந்த ஆண்டு குடும்பம் தொண்டு நிறுவனத்திடமிருந்து தினை விதைகளை, விதைப் பெருக்கம் செய்வதற்காக வாங்கினேன். கொளுஞ்சியில் உள்ள பண்ணையிலிருந்து 2 கிலோ விதை கொடுத்தார்கள். பயிர் செய்ததில் 50 கிலோ கிடைத்தது. பறவைகளால் பிரச்சினை. இல்லாவிட்டால், சாகுபடி இன்னமும் நன்றாக இருந்திருக்கும்” என்கிறார் அவர்.

‘குடும்பம்’ தொண்டு நிறுவனம் ஆறு வகைகளிலான தானியங்களைப் பயிர் செய்வதற்காக விவசாயிகளுக்கு வழங்கி உள்ளது. தினையும் வறட்சியிலும் சாகுபடி செய்யக்கூடிய உள்ளூர் ரகமான மாப்பிள்ளை சம்பாவும் ராமலிங்கத்துக்குக் கொடுக்கப்பட்டன.

அதன்பின் மீண்டும் அவருக்கு கொளுஞ்சிப் பண்ணையில் இருந்து  அதே விதைகள் 5 கிலோ கொடுக்கப்பட, அதை ஒரு ஏக்கர் விளை நிலத்தில் பயிரிட்டார். அப்போது 400 கிலோ அறுவடை செய்தார். “முன்பு நான் குறுகிய கால விளைச்சல் தரும் மேம்படுத்தப்பட்ட ரகங்களைப் பயன்படுத்தினேன். அதற்கு அதிக சூரிய வெளிச்சமும் உரமும் தேவைப்பட்டன. பயிர்களை பூச்சிகள் எளிதாகத் தாக்கின. மாப்பிளைச் சம்பா சாகுபடிக்கு எந்த பூச்சிக் கொல்லி மருந்தும் தேவையில்லை. உள்ளூர் ரகம் என்பதால் சுவையாக இருக்கும். அறுவடைக்குப்பின், வைக்கோலை மாடுகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தலாம்” என்கிறார் அவர்

தானியங்களை மாற்றி பயிரிடுவதில் சில பலன்களும் உள்ளன.துவரை போன்ற சில தானியங்களைப் பயிரிடுபோது, நிலம் ஊட்டம் பெறுகிறது.

ராமலிங்கத்திடம் நான்கு பசுமாடுகள், ஒன்பது ஆடுகள்  மற்றும் ஐந்து கோழிகள் இருந்தன. அவற்றின் சாணம் மற்றும் கழிவுப் பொருட்கள் வயலுக்கு நல்ல உரமாக அமைந்தது. மாப்பிளைச் சம்பா விதை நெல்லைப் பெறுவதற்கு 5 விவசாயிகள் அவரிடம் முன்னதாகவே சொல்லி வைத்திருந்தனர். அதனால் அவரால் கூடுதல் வருமானம் கிடைததது.

உள்ளூர் ரக விதைகளை விற்கலாம். வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். அது ஊட்டச் சத்து மிகுந்தது. வைக்கோலை கால்நடைகளுக்குப் பயன்படுத்தலாம். பூச்சிக் கொல்லிகளையும் ரசாயன உரங்களையும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனவே, மண் மேலும் வளமாக இருக்கும். மாப்பிளைச் சம்பாவை அறுவடை செய்த பிறகு, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் மிளகாய் பயிரிட்டார். ஒரு ஏக்கரில் ஒரு டன் மிளகாய் பெற முடிந்தது.

மிளகாய், கத்தரிக்காய்களைப் பூச்சிகள் நாசப்படுத்துவதை தடுக்க, பூச்சிகள் ஒட்டிக் கொள்ளும் தன்மையிலான மஞ்சள் நிற அட்டைகளை அவர் பயன்படுத்தினார். இது மிளகாய், கத்திரிக்காய் வளர்ப்பவர்களிடையே இது வழக்கம். இரவு நேரத்தில் பூச்சிகளைப் பிடிக்க அவர் விளக்குகளைப் பயன்படுத்தினார்.

“தண்ணீர் பற்றாக்கறை காரணமாக, அரசிடமிருந்து மானிய உதவி பெற்று சொட்டு நீர் பாசனக் கருவிகளைப் பொருத்தினேன். ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் உள்ளவர்களுக்கு மட்டுமே 100 சதவீத மானியம் கிடைக்கும். எனக்கு 13 ஏக்கர் நிலமிருந்ததால், 75 சதவீத மானியம் கிடைத்தது. சொட்டு நீர் பாசனக் கருவிகளைப் பொருத்திய பிறகு, விவசாயத்திற்கு குறைந்த அளவு தண்ணீரே தேவைப்பட்டது. மூன்று நாட்களுக்கு ஒருமுறைதான், அதுவும் ஒரே மணி நேரம் மட்டுமே வயலுக்கு தணணீர் பாய்ச்சுகிறேன்.  சொட்டு நீர் பாசன வசதியை நிறுவும் முன் என் வயலில் இருந்த  வாய்க்கால் வழியே வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதுடன் ஒப்பிட்டால், தண்ணீர் எல்லா இடங்களுக்கும் பாயும். ஆனால், சொட்டு நீர் பாசனம் தண்ணீர் உபயோகத்தைக் குறைத்து தண்ணீரை சேமிக்க உதவியது” என்றார்.

ராமலிங்கம்

சாகுபடி செய்த பொருட்களை விற்பனை செய்வதில் பிரச்சினை. எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு டிசம்பரில் ஒரு கிலோ மிளாகாய்க்கு ரூ.40க்கு விற்பனையானது. இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஒரு கிலோ மிளகாய் விலை ரூ.8 ஆகிவிட்டது. அந்த சீசனில் அனைத்து விவசாயிகளும் மிளகாய் பயிரிட்டதால், சந்தையில் மிளகாய் குவிந்தது. தற்போது சந்தையில் அதிக கிராக்கியுள்ள மற்ற பயிர்களை அவர் பயிரிட வேண்டியுள்ளது.

தானியங்களை மாற்றி பயிரிடுவதில் சில பலன்களும் உள்ளன. துவரை போன்ற சில தானியங்களைப் பயிரிடுபோது, நிலம் ஊட்டம் பெறுகிறது. ஒரு பயிரை மட்டுமே நம்பியிருக்காமல் இருந்தால், சந்தை ஏற்ற தாழ்வுகள் பற்றி பயப்பட வேண்டியதிருக்காது. மிளகாய் சீசனுக்கு முன்னதாக, பாகற்காய், தக்காளி, வெள்ளரிக்காய் போன்றவற்றை பயிரிடுவது வழக்கம். ஜனவரியிலிருந்து மார்ச் வரை, அவர் எள் பயிரிடுகிறார். ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் அவ்வளவாக மழை இருககாது. அது குளிர் காலம்.

“குறைந்த தண்ணீரைப் பயன்படுத்தி பயிர்களை சாகுபடி செய்யும் விவசாய முறைக்கு நான் மாறியதால், நான் திருப்திகரமாக இருக்கிறேன். எனது வருமானம் அதிகரித்துள்ளது. எனது குடும்பத்தில் குழந்தைகள், மனைவி, இரண்டு சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பங்கள் என அனைவரையும் காப்பாற்ற முடிகிறது. என்னால் முடிந்த அளவிற்கு  விவசாயம் செய்வதைத் தொடர்வேன்” என்று கூறிவிட்டு விடை பெற்றார்

இது குறித்து அதிக விளக்கம் பெற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:-

எம். ராமலிங்கம்,  உடையாளிப்பட்டி கிராமம், குண்டாண்டார்கோவில் ஒன்றியம், குளத்தூர் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்-622 502. தொலைபேசி எண்  : 9786604097


Share the Article

Read in : English