Share the Article

கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தண்ணீர் சிக்கல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டேன். தண்ணீர் சேமிப்பில் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு  என்ன என்பது குறித்து ஒரு பெரிய நிறுவனத்தின் உயர் நிர்வாக அதிகாரியான, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களின் உரிமையாளர் விவரித்தார். குர்காவனில் வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாத்திரங்களை சிக்கனமாகத் தண்ணீரை பயன்படுத்தி சேமிப்பது குறித்து கற்பிப்பதற்கு ஒரு திட்டம் தொடங்கப்பட்டது.

வீட்டு வேலை செய்பவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வை உருவாக்குவதற்கு அந்த நிறுவனம் முயற்சி செய்தது. ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு கப் அளவு தண்ணீரை சேமித்தால், குர்காவனில் மட்டும் அது எத்தனை லிட்டர் தண்ணீரை சேமிக்க உதவும் என்பதை நினைத்துப் பாருங்கள் என்றார்கள். அதற்கு பலத்த கைதட்டல்.

என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டபோது, வீடுகளில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து கூறியமைக்காக அந்த உயர் அதிகாரிக்கு நன்றி தெரிவித்தேன். அதேநேரத்தில், ஒருவருக்குத் தேவைப்படும் தண்ணீரின் அளவு, அபாயகரமாகக் குறைந்து வரும்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள குளியல் தொட்டிகளை (பாத் டப்) ஏன் அகற்றிவிடக் கூடாது என்று கேட்டேன். தண்ணீர் சேமிப்பு முக்கியமானது என்றால் குளியல் தொட்டிகளை பாத் டப்புகளையும் எடுக்க வேண்டும் என்பதை  பணக்காரர்களிடமும் அதிகாரம்மிக்கவர்களிடமும் ஏன் கூறுவதில்லை? ஒரு பணிப்பெண்ணிடம் ஒரு கப் தண்ணீரை சேமிக்கச் சொல்வதால் என்ன பயன்? குளியல் தொட்டி மூலம் நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீரை  வீணாக்குகிறார்கள். ஏனெனில் அதற்கு கட்டணம் செலுத்தும் வசதி சிலருக்கு இருக்கிறது என்பதால்தானே!

30 அங்குலம் அகலமும் 60 அங்குல நீளமும் உள்ள ஒரு குளியல் தொட்டி, 300 லிட்டர் தண்ணீர கொள்ளளவு கொண்டது. ஒரு சொகுசு ஹோட்டலில் 100 அறைகள் இருந்தால், குளிப்பதற்காகவே 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தினமும் வீணாக்கப்படுகிறது. இது நியாயமானது அல்ல. ஒரு பணக்காரர் மிக சொகுசாகக் குளிக்க அனுமதித்துவிட்டு, தியாகம் செய்யும்படி ஏழைகளை நாம் கட்டாயப்படுத்த முடியாது.

ஒரு சொகுசு ஹோட்டலில் 100 அறைகள் இருந்தால், குளிப்பதற்காகவே 30 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தினமும் வீணாக்கப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, கஜகஸ்தானிலுள்ள அல்மடி  என்னும் ஊரில் நடைபெற்ற ஐரோப்பிய ஆசிய கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது இதுபோன்று ஒரு கேள்வியை எழுப்பினேன். ஒவ்வொரு முறையும் சர்வதேச அல்லது தேசிய அளவில் நடைபெறும் மாநாடுகளில் விவாதங்களில் கலந்துகொள்ளும்போது,  விவசாயத்துக்கு எவ்வாறு அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கூறக் கேட்டிருக்கிறேன். கிட்டத்தட்ட 70 சதவீத தண்ணீர் விவசாயத்துக்காகச் செலவிடப்படுகிறது. அதனால்தான், விவசாயத்தில் தண்ணீரின் பயன்பாட்டைக் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.

கவலையளிக்கும் வகையில் அதிக அளவில் பனிப்பாறைகள் உருகுவதும், ஆறுகள் வற்றிப் போவதும், நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதும் நீர்நிலைகள் வறண்டு போவதும் என தண்ணீர் இடர்பாடு மோசமடைந்து வருவது மனிதர்களுக்குள்ளேயும் நாட்டுக்குள்ளேயும் இரு நாடுகளுக்கிடையேயும் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறது.

இந்தியாவுக்குள் உணவு வழங்கும் பஞ்சாப், சண்டீகர் மாநிலங்கள்  15 ஆண்டுகளில் வறண்டு விடும். 2025ஆம் ஆண்டில் பாசனத்துக்குக் கிடைக்கும் நிலத்தடி நீர் எந்த அளவுக்கு குறையும் என்று மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் 2007ஆம் ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே பஞ்சாபில் ஒவ்வொரு ஆண்டும் இயற்கையாக சேமிக்கப்படும் நீரைவிட நிலத்தடி நீர் 45 சதவீதம் கூடுதலாகச் சுரண்டப்படுகிறது.

கிரேஸ் என்ற இரட்டைச் செயற்கைகோள்கள் தந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் சமீபத்திய நாசா வெளியிட்ட அறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. அந்த அறிக்கையின்படி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் 109 கன கி.மீ அளவுள்ள தண்ணீரை ஆறு மாதங்களில் பயன்படுத்தியுள்ளது. 38,061 சதுர கிலோ .மீட்டரில் நெல் பயிரிடுவதால், நாட்டின் வடமேற்கு பகுதியில் நிலத்தடி நீரின் அளவு ஆண்டுக்கு ஓரடி வீதம் குறைந்து வருகிறது. இந்திய -கங்கை சமவெளியில் நடத்தப்பட்ட ஆய்வில், 1990களை விட இந்த பத்தாண்டுகளில் நிலத்தடி நீர் பயன்பாடு 70 சதவீதம் அதிகரித்துள்ளது என்று நாசா கண்டறிந்துள்ளது. பல ஆண்டுகளில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது.

2014, 2015 ஆகிய இரண்டு ஆண்டுகளில் மோசமான பருவமழை இந்தச் சிக்கலை அதிகப்படுத்தியது. தற்போது நிலவும் வறட்சிக்கு,  பருவமழை பெய்யாதது 30 சதவீதம் காரணமென்றால், மீதி 70 சதவீதக் காரணம் மனிதர்களால் உண்டானதுதான் என்று நான் எப்போதும் சொல்வதுண்டு. நாம் தான் வறட்சி நிலைக்கு முதன்மையான காரணம். பல ஆண்டுகளாக நிலத்தடி நீரை மிக அதிக அளவில் பயன்படுத்தியுள்ளோம். ஆனால் நாம் ஏதேனும் பாடங்களைக் கற்றுக்கொண்டோமா? நாம் அதனை சரிப்படுத்த சரியான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோமா? இல்லை என்பதே பதிலாக இருக்கும்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கொடுக்கப்பட்ட பதில் என்று ஒரு  செய்தியைப்  படித்தபோது அது மிகுந்த நம்பிக்கையளிப்பதாக இருந்தது. பயிர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வெவ்வேறு பயிரிடும் முறைகளை மேம்படுத்துவதை வலியுறுத்தி வருவதாக நாடளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதிக்கான வேளாண் பருவநிலை, நிலம், நீர், சந்தை சக்திகள், விவசாயிகளின் சமூக பொருளாதர நிலை போன்றவற்றைப் பொறுத்தே பயிரிடும் முறை இருக்கும். தண்ணீர் சேமிப்பு வழிகளான சொட்டுநீர் பாசனம், தெளிப்பான்கள் மற்றும் மழை நீர் தெளிப்பான் பயன்படுத்துதல் போன்ற தண்ணீர் சேமிப்புக் கருவிகளைப் பயன்படுத்துவதற்குச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன் அரசின் வலியுறுத்தல் முடிந்து விடுகிறது.

தண்ணீர் கிடைக்கும் அளவைப் பொறுத்தும் அதனை பயன்படுத்தும் அளவைப் பொறுத்தும் பயிர் சாகுபடி முறையை மறுவரைவுக்குட்படுத்த வேண்டும். அதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த வேளாண் பருவநிலை வரைபடம் மறு உருவாக்கம் செய்யப்பட வேண்டும்.  பயிர் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். பயிர் சாகுபடி முறையில் மாற்றம் குறித்து நான் எழுதிய கட்டுரையில், (டெக்கன் ஹெரால்டு, ஜூன் 2, 2005) கூறியிருப்பதாவது: வறண்ட நிலத்தில் தண்ணீர் அதிகம் செலவாகும் பயிர்களை வளர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அரைகுறையாக வறண்ட ராஜஸ்தானில் தண்ணீர் அதிகம் செலவாகும் கரும்பை வளர்ப்பதில் எந்த நியாயமும் இல்லை. பண்டில்காண்ட் நிலப்பகுதியில்  புதினா வளர்ப்பு மூலம் ஒரு கிலோ எண்ணெய் எடுப்பதற்கு 1.25 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஒரு விஷயத்தை சொன்னால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். வறண்ட நிலத்தில் கலப்பினப் பயிர்களாக-அரிசி, சோளம், மக்காச்சோளம், பருத்தி மற்றும் காய்கறிகளை வளர்க்கும்போது அது அதிக விளைச்சலைக் கொண்ட பயிர்களுக்கு பயன்படுத்துவதை விட ஒன்றரையிலிருந்து  இரண்டு மடங்கு வரை அதிகமாகத் தண்ணீரைப் பயன்படுத்த நேரிடுகிறது.

இதையெல்லாம் விட மேலாக, அரசு இப்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை முன்னிறுத்துவதில் தீவிரமாக உள்ளது. . முதலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை (இப்போதும்) பயிர்செய்ய ஊக்கமளித்து வருகிறது. இதற்கு பத்து முதல் இருபது சதவீதம் அதிகமான தண்ணீர் தேவைப்படும். தற்போது, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு வணிகரீதியாக பயிரிடுவதற்கு ஜெனிட்டிக் என்ஜினீயரிங் மதிப்பீட்டுக் குழு இசைவளிக்கக் காத்திருக்கிறது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு எவ்வளவு தண்ணீர் தேவைப்படும் என்பது தெரியவில்லை. ஆனால் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியின் அனுபவத்தில் கடுகுக்கும்  ஒப்புதல் அளிக்கப்பட்டால்,  அதற்கு 20 சதவீதம் அதிக நீர்தேவைப்படலாம். இப்படியான வழிமுறைகளிலா நாம் நிலத்தடி நீரைச் சுரண்ட வேண்டும்? அரசு, தான் முன்னிறுத்திய யோசனைகளை அமல்படுத்துவதில் தலையிட முடியாவிட்டால், சந்தை சக்திகளின் மேல் அது தனது குற்றச்சாட்டை திருப்பக் கூடாது.

கொஞ்சகாலமாகவே அபாயமணி ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. விவசாயிகளை மட்டும் தியாகம் செய்யுங்கள் என கேட்டுக்கொள்வதை விட, பணக்காரர்களும் தங்கள் செயல்பாட்டின் மூலம் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ வேண்டும். சொகுசு ஹோட்டல்கள் உள்ளிட்ட ஹோட்டல்களில் குளியல் தொட்டிகளைப் பயன்படுத்துவதை தடை செய்வது இந்த விஷயத்தில் ஒரு தொடக்கமாக இருக்கும். இது விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நகரவாசிகளையும் தாங்கள் வீணாகப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவைக் குறைக்க வைக்கும்.

இக்கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

தேவிந்தர் சர்மா

கட்டுரையாளர்: இந்திய விவசாயத்துறையில் ஒரு நிபுணர்.


Share the Article