தமிழ்

Share the Article

வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடவுளின் தேசமான கேரளத்திடமிருந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் மழை வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு உள்ளான சென்னை கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதுதான், பாதிக்கப்பட்டவர்களும் மீட்புக் குழுவினரும் பயன்படுத்துவதற்கு உரிய பிளஸ் குறியீடு (பிளஸ் கோடு) என்ற புதிய தகவல் தொழில்நுட்பம். இணைய சேவை முடங்கினாலும்கூட அதைப் பயன்படுத்தி, நமது இருப்பிடத்தைத் மீட்புக் குழுவினரிடம் தகவல் தெரிவித்து உதவி பெறலாம்.

கூகுள் ப்ளஸ் கோடு செயலி மூலம் பலரின் இருப்பிடங்களை கண்டுபிடிக்க முடிந்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் வசித்த மக்களைக் கலங்க வைத்த வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளின் வடுக்கள் மக்களின் மனதில் இன்னமும்  மறைந்து விடவில்லை. பெருமழை வரும் போதெல்லாமல், சென்னை வெள்ளம் தான் நினைவுக்கு வருகிறது. அந்த வெள்ளத்தின்போது  பல இடங்களில் தொலைபேசி டவர்கள் இயங்கவில்லை. அதனால் மொபைல் போன் மூலம் தொடர்பு கொள்ள இயலவில்லை. இணைய சேவைகள் முடங்கின. மின்சாரம் இல்லாததால் மொபைல் போன்களை சார்ஜ் செய்ய முடியவில்லை. இதனால் பரஸ்பர தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டது. வெள்ளப் பகுதியில் இருந்தவர்கள் நிலை என்ன என்பதை அறிய முடியாமல் பலர் தவித்தனர். வெள்ளப் பாதிப்பில் உதவி கேட்க நினைத்தவர்களும் வெளியுலகுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் தனித்த இடங்களில் இருந்தவர்களுடன் தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது.

வெள்ளத்தில் சிக்கிக் கொண்டு விட்டேன். மின்சார வசதி இல்லை. இணைய சேவை முடங்கி விட்டது. எப்படி தகவல் சொல்லி, இருக்கும் இடத்திலிருந்து தப்பித்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது? அல்லது அந்த இக்கட்டான நேரங்களில் உணவு அல்லது மருத்துவ உதவி பெறுவதற்கு தொடர்பு கொள்வது எப்படி?

இதற்குக் கை கொடுக்க முன்வந்துள்ளது, இந்த ஆண்டில் பிப்ரவரியில் கூகுள் மேப்ஸ் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்ட பிளஸ் குறியீடு (பிளஸ் கோடு) என்கிற தொழில்நுட்பம். இதன்மூலம், இணைய சேவை இல்லாதபோதும்கூட, ஸ்மார்ட் போனிலும் டேபிலெட்டிலும் உள்ள கூகுள் மேப்ஸ் செயலியை இயக்கி நாம் இருக்கும் இடம் குறித்த தகவல்களை மீட்புக் குழுவின் கவனத்துக்குக் கொண்டு சென்று விரைவாக உரிய உதவிகளைப் பெற முடியும்.

உங்களிடம் ஸ்மார்ட் போன் அல்லது டேபிலெட் இருந்தால் போதும். இணைய தள சேவை இல்லையே என்ற கவலை வேண்டாம். இணைய சேவை இல்லாவிட்டாலும்கூட நாம் தகவல் அனுப்ப முடியும். சென்னை போன்ற நகரங்களில் உபெர், ஓலா போன்ற வாடகை கார்களில் பயணம் செய்யும் போது டிரைவர் முன்னே இருக்கும் கருவி எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பதை வழிகாட்டும். இதற்கும் இணைய இணைப்பு வசதி தேவைப்படுவதில்லை. அதைப்போலதான் பிளஸ் குறியீடு தொழில்நுட்பமும் இணைய சேவை இல்லாமல் இயங்கக் கூடியது.

கூகுள் மேப்ஸ் இணைய செயலி பக்கத்தைத் திறந்து நாம் இருக்கும் இடத்தை கிளிக் செய்து பிளஸ் குறியீட்டை (நமது தெரு முகவரி போன்ற குறியீடுதான்) அழுத்திப் பதிவு செய்ய வேண்டும். இதனை காப்பி செய்து, அந்த செயலி பக்கத்தில் கீழ் பகுதியில் உள்ள கூகுள் தேடல் பகுதியில் அதைப் பதிவிட வேண்டும். அப்போது நமது இருப்பிடத்துக்கான முகவரியாக 6 அல்லது 7 எழுத்து எண்களும் நகரத்தின் பெயரும் இருக்கும்.

பிளஸ் கோடு என்கிற குறியீட்டை போன் அழைப்பு (வாய்ஸ் கால்) மூலமாகவோ குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலமாகவோ பகிர்ந்து கொள்ளலாம். அதன் மூலம், மீட்புக் குழுவினர் நாம் இருக்கும் இடத்தை எளிதாகக் கண்டுபிடித்து வந்து நம்மை மீட்க முடியும். தேவையான உதவிகளையும் செய்ய முடியும்.

கேரளத்தில் கை கொடுத்த இந்தத் தொழில்நுட்பத்தை மீண்டும் சென்னையில் பயன்படுத்தி விடும் சூழ்நிலை வந்து விடக்கூடாது. அதாவது, சென்னைக்கு வேண்டாம் மீண்டும் பெரு வெள்ளம்.


Share the Article