English தமிழ்

Share the Article

சிங்கப்பூரைச் சேர்ந்த சார்டட் ஷிப் ப்ரோகரும் கணக்காளருமான எஸ்.விஜயகுமார் தமிழகத்தின்  மிகப் பழமையான கோயில்களிலிருந்து களவாடப்பட்ட சிலைகளைத் தேடி கண்டுபிடித்துள்ளார். இதுசார்ந்த தனது அனுபவங்களை ‘சிலை திருடர்’ எனும் புத்தகமாக எழுதியுள்ளார். விரைவில் வெளிவரவுள்ள அப்புத்தகத்தில், சிலை திருட்டில் கைதாகி புழல் சிறையிலுள்ள மான்ஹாட்டனைச் சேர்ந்த கலை ஆர்வலர் சுபாஷ் கபூரை மையமாக வைத்து இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. விஜயகுமாரிடம் நமது இன்மதி.காம்-காக கண்ட நேர்காணலிலிருந்து…

‘சிலை திருடர்’ புத்தகம் எதைப் பற்றியது?

கடந்த பல ஆண்டுகளாகவும் தற்போதும் நடைபெற்று வரும் பழமைவாய்ந்த இந்திய கலைச் செல்வங்கள் திருடு போவது குறித்து இங்கு அதிக விழிப்புணர்வு இல்லை. பெரும்பாலான மக்கள் இதனை சிறிய வகை திருட்டில் ஈடுபடுகிறவர்கள் தான் செய்கிறார்கள் என நினைத்துக்கொண்டு உள்ளார்கள். ஆனால், ஒரு பெரிய கூட்டணியாக இணைந்த குழுக்கள்,   மிகப் பெரிய தொழில் அளவில் கோயில் சிலைகளை திட்டமிட்டு திருடி வருகிறார்கள். இதனைத் தடுக்கவேண்டிய  காவல்துறை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் இதற்கு உடந்தையாக உள்ளனர்.  இம்மாதிரியான கலை பொருட்களை  நம்பிக்கையின் பெயரில்  வாங்குவதற்கென்றே மியூசியங்கள், டீலர்கள், ஏல விற்பனையகங்கள் உள்ளன. அவர்களும் இந்த வியாபாரத்தில் உள்ள கருப்பு பக்கங்கள் குறித்த விழிப்புணர்வு உடையவர்களாகவே உள்ளனர். நான் இம்மாதிரியான நச்சு வலைபின்னல்கொண்ட தந்திரதாரிகளையும் இந்த கும்பலை இயக்குபவர்களையும் வெளியுலகுக்கு தெரியப்படுத்த விரும்பினேன். அவர்கள் இந்திய கலைப் பொருட்களில் மிகச் சிறந்ததை திருடி, அவற்றை திறந்த  ஏலத்தில் விற்கின்றனர். ஆனால் இந்தியா இந்தக் கும்பல்களின் பின்னால் பெரிய அளவில் செல்லவில்லை. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்பினேன். அதன் மூலம் அவர்கள் திருடுபோன பொக்கிஷங்களை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என நம்புகிறேன்.

1970களின் ஐநாவின் சிலை பாதுகாப்பு மற்றும் கலாச்சார சொத்து குறித்த கோட்பாடுகளை ஏற்படுத்தவதில் இந்தியா முக்கிய பங்கு வகித்ததே?

ஆமாம். அப்போது இந்தியாவும் இத்தாலியும் இதில் சாதனையை நிகழ்த்தியவர்கள். இந்த இருநாடுகளிலும் தான் கலைச்செல்வங்கள் அதிக அளவில் இந்த கும்பல்களிடம் திருடு போனது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவும் இத்தாலியும் பாரம்பரியங்களை காக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தின. அதில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குழுவில் வழக்கறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்பட 3,000 அதிகாரிகள் இருந்தனர். இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் சிலை பாதுகாப்புக்கென்று தனி  குழு அமைக்கப்பட்டது. இந்தக்  குழுவில் 100 பேர் இருந்தனர். தற்போது அதில் வெறும் 8 பேர் மட்டுமே உள்ளனர்.

பொன். மாணிக்கவேல் பல்வேறு வேலைகளை சிறப்பாக செய்து முடித்துள்ளார். இருப்பினும், போதிய ஆதரவின்மையால் சில வழக்குகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

1970லிருந்து தற்போது வரை இத்தாலி 3.8 லட்சம்  கலை  பொருட்களை அவர்களின் கார்பனெர்ரி ஆர்ட் ஸ்குவாட் மூலம் மீட்டது. அதே காலகட்டத்தில் 1972-2000 ஆம் ஆண்டு வரை இந்தியா 17 கலை பொக்கிஷங்களை மட்டுமே அயல்நாடுகளிலிருந்து மீட்டது. அதன்பிறகு 2000-2012 காலகட்டத்தில் இந்தியா ஒரு கலைப் பொருளையோ அல்லது சிலையையோ மீட்கவில்லை. இது இந்திய தலைமை கணக்காளர்  அறிக்கை 2013-ல் உள்ளது. அதன்பிறகு  எங்களது முயற்சிகள் கைகொடுத்தது. அதன் மூலம் சிலைகளை ஒப்படைக்கும் பணி பெரிய அளவில் நடைபெற்றது. இதற்கு முழுமையான ஒத்துழைப்பு இருந்திருந்தால், இன்னும் அதிகமாக செய்திருப்போம்.

இந்த  சிலை திருட்டு விவகாரத்தில் மிகப் பெரிய கடத்தல் கும்பல்கள் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தீர்கள். அவர்களின் பெயர்கள் இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா?

ஆமாம், உள்ளது. 2012-ல் கைதாகி புழல் சிறையில் இருக்கும் சுபாஷ் கபூர் இந்த சர்வதேச கலை பொருட்கள் திருட்டு வலைப்பின்னலில் மிகவும் முக்கியமானவர். அவர் திருடிய பொருட்களை வெளிநாட்டு மியூசியங்களில்  விற்பனை செய்வதற்கு சிலை கலை நிபுணர்கள்  வழிவகுத்தனர். அவர்களோடு உண்டு உறவாடிய அவர், அவர்களின் பயணத்துக்கும் செலவு செய்தார். கபூரின் மொத்த உலகையும் நாங்கள் கண்டுபிடித்தோம். இந்தியாவில் தற்போது இந்த சிலை திருட்டில் ஈடுபட்டுள்ளவர்களை குறிப்பிட்டுள்ளோம்.

இந்த  வழக்குகளில்  போலீசாரின் செயல்பாடு சரியாக இருந்ததா?

இல்லை. உதாரணமாக  ஒரு  வழக்கில்  நடராஜர் சிலையில் தங்கம் இருக்கிறதா என்பதை அறிய கடத்தல் கும்பல் கைகளை வெட்டிவிட்டனர். சோழர்களின் வெண்கலத்தில் மிகச் சிறிய அளவிலேயே தங்கம் கலக்கப்பட்டிருக்கும். அதில் தங்கம் இல்லை என அவர்கள் தெரிந்துகொண்டார்கள். இதுகுறித்த விவாதத்தில் இக்காரணமாக  நகை வியாபாரியை வெட்டிவிட்டார்கள் எனக் கூறினர். இந்த திருட்டை செய்ய சொல்லி உத்தரவிட்டது தீனதயாளன். இந்த வழக்கு 2005 ஆம் ஆண்டு பதியப்பட்டது. அவர் ஜாமினில் வெளிவந்து பாங்காங்க் சென்று விட்டார்.அதன்பிறகு சில சமரசங்கள் பேசப்பட்டு முடிவுக்கு வந்தது. அந்த சிலை ஹாங்காங்குக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கிருந்து லண்டனில் இருக்கும் கலை பொருட்களை மீட்கும் ஒருவருக்கு அனுப்பப்பட்டது. அவரந்த சிலைக்கு புதிய கைகளை செய்தார். இந்த சிலை சுபாஷ் கபூருக்கு சென்றடைந்தது;அவர் தன் ‘கேட்லாக்’ புத்தகத்தில் முதன்மை படமாக இச்சிலையை பிரசுரித்திருந்தார். 2011-ல் கபூர் கைது செய்யப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு, அந்த நடராஜா சிலை இந்தியாவிற்கு மர்மமான முறையில் திரும்பி வந்தது. மேலும் சிலை மீட்புப் படை வெப்சைட்டில் மீட்கப்பட்ட  சிலை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனக்குத் தெரியும், தீனதயாளன் இந்த சிலையை கொடுத்து தனக்கு எதிராக இருந்த வழக்குகளை பின்வாங்க வைத்தார். அதனால் 2016 வரை இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதில் நடந்த பல நாடகங்களை இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். சுபாஷ் கபூருக்கு சிலைகளை விநியோகம் செய்தவர் சஞ்சீவி அசோகன். அவரை சிலை வழக்கு பிரிவில் உள்ள  ஒரு ஐபிஎஸ் அதிகாரி  பலமுறை  கைது செய்ய முற்பட்டார். ஆனால் சிலை வழக்கு குழுவில் உள்ள ஒருவர் அவருக்கு எச்சரிக்கை கொடுத்தார். இப்படி உடந்தையாக இருந்தவர்கள் குறித்தும் இப்புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

ஒரு கப்பல் கம்பெனியில் கணக்காளரான நீங்கள் எப்படி இதில் ஈடுபட்டீர்கள்?

அமரர் கல்கி எழுதிய ‘பொன்னியின்  செல்வன்’ நாவலை படித்த  பிறகு வரலாற்றில் ஆர்வமுடையவன்  ஆனேன். சோழர்கள், சோழர் கால சிலைகள் மீது என்னை நானே ஈடுபடுத்திக்கொண்டேன். நான் கோயில்கள் குறித்து கற்களில் வடித்த கவிதைகள் என்ற பெயரில் ஒரு ப்ளாக்கின் மூலம் பதிவுகள் செய்தேன். அது மக்களிடையே பிரபலமாகியது. மக்கள் அதில் தங்களது பங்களிப்பையும் செய்ய, ஒரு தொடர் வலைப்பின்னல் உருவானது. அதுமட்டுமில்லாமல் முகநூலில் இதற்கென்று அர்ப்பணிப்போடு ஒரு குழு ஆரம்பித்தோம். சர்வதேச அளவிலான நிபுணர்கள், ஆய்வாளார்கள், கல்வியாளார்கள் எங்களிடம் இது சம்பந்தமான புகைப்படங்களையும் வேறு ஆவணங்களையும் கேட்க எங்கள் பக்கத்துக்கு வருகை புரிந்தனர். இதனை வேலையாக செய்த நாங்கள் இதற்காக எந்தக் கட்டணமும் வசூலிக்கவில்லை. எழுத்துப்பூர்வமாக உள்ள ஆவணங்களை சேகரிக்க ஆரம்பித்தோம். வருடத்துக்கு இருமுறை இதற்கென்று  பயணங்கள் மேற்கொண்டோம். நாங்கள் அப்படி சென்றபோது நாங்கள் ஆவணப்படுத்திய சில சிலைகள் கூட காணாமல் போனது குறித்து உணர்ந்தோம். நிறைய சிலைகள் வெளிநாட்டில் ஏலத்தில் வருவதைக் கண்டோம்.  அந்த சிலைகள் புதிதாகத் திருடப்பட்ட சிலைகள் என்பதும் அது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்பதற்கான வரலாறு இல்லாததுமாக இருந்தது. நாங்கள் வெவ்வேறு இணையத்தை சேர்ந்தவர்களிடம்  வெளிநாட்டில் ஏலத்துக்கு வரும்  சிலைகளை புகைப்படம் எடுத்து அனுப்பக் கோரினோம். அப்போதுதான் நாங்கள் பல பழைய வழக்குகளினுள் சென்றோம்.

இந்த முயற்சியில் எது திருப்பத்தை ஏற்படுத்தியது? 

சுபாஷ் கபூரைப் பற்றிய சில ரகசியங்கள் போலீஸாருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார். ஆனால், அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. 2013ஆம் ஆண்டு வாமன் கியா என்பவர் சிலை திருட்டு வழக்கில் இந்திய தொல்லியல் துறை மற்றும் ராஜஸ்தான் காவல்துறையால் விசாரிக்கப்படுகிறார். சிலை திருட்டில் முக்கிய நபரான வாமனை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் விடுதலை செய்கிறது. இதில் நாங்கள் ஏதாவது செய்ய விரும்பினோம். கபூரின் சிலை திருட்டுக்கள் குறித்து புலனாய்வு செய்த அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜேசன் ஃபெல்ச், கபூர் திருடிய பல சிலைகளை ஆஸ்திரேலியாவில் விற்றுள்ளார் என்று கண்டறிந்தார். அதில் ஒன்று அதிர்ச்சியளிக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் சிலையாக இருந்தது. இந்த சிலையை விருத்தாசலம் கோயிலில் நான்  நேரில் பார்த்து அதை என் பிளாக்கிலும் எழுதி உள்ளேன். சமூக வலைதளத்தின் மூலமாக ஒருவரைக் கண்டறிந்து இந்த சிலை இருக்குமிடத்துக்குச் சென்று, போட்டோ எடுத்து பார்த்த பொழுதுதான், திருடர்கள் அந்த சிலையை திருடிவிட்டு அதே இடத்தில் ஒரு போலி சிலையை வைத்துள்ளனர் என்று தெரிய வந்தது. அதேபோல் ஆஸ்திரேலியாவின் தேசிய கலை களஞ்சியத்தில் இருந்த நடராஜர் ஸ்ரீபுரந்தான்  கோயிலில் இருந்த சிலைதான் என்று புகைப்படங்கள் மூலம் நிரூபித்தோம்.

தமிழகத்தில் சிலை கடத்தல் தொடர்பான செய்திகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வழக்குகள் உயர் நீதிமன்றத்தின் நேரடி பார்வையில் உள்ளது.

சிலை கடத்தல் வழக்கில் நீதிமன்றத்தின் பங்கு மிக முக்கியமானது. இந்து சமய அறநிலையத்துறை கீழ் செயல்பட்டு வரும் கோவில்களில் இருந்து கடந்த 1992ம் ஆண்டிலிருந்து 1,320 சிலைகள் திருடு போனதாக அந்தத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. பொதுவாக சிலைத் திருட்டுகளில் மிகக் குறைந்த சதவீதம்தான் வெளியில் தெரிய வரும். எனவே எத்தனை சிலைகள் திருடப்பட்டு இருக்கும் என்று நீங்களே யோசித்து பாருங்கள். இந்து அறநிலையத்துறையின் செயலற்ற தன்மையே இதுபோன்று சிலைகள் திருடு போக காரணம்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் திறமையற்றவர்களா அல்லது உடந்தையா? 

அவர்கள் உடந்தையாக இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஏனெனில் இவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இத்தகையை மிகப்பெரிய திருட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை.

சிலை கடத்தல் தொடர்பான பல்வேறு வழக்குகளை கையாண்டு இருக்கிறீர்கள்? பொன். மாணிக்கவேல் குறித்து என்ன நினைக்கிறீர்கள்.?


பொன். மாணிக்கவேல் பல்வேறு வேலைகளை சிறப்பாக செய்து முடித்துள்ளார். இருப்பினும், போதிய ஆதரவின்மையால் சில வழக்குகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, நீதிமன்றம் மாநில அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. இங்கு குவிக்கப்பட்டு இருக்கும் பணம் பற்றி நாம் பேசுகிறோம். இதன் கெடுதல் மிக அதிகமானது. மாணிக்கவேலின் பிரிவில் பணி புரியும் ஒருவரே  சிலை திருட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த வழக்குகளை அரசாங்கம், மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ.)க்கு மாற்ற என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்.?

மத்திய புலனாய்வு குழு (சி.பி.ஐ) வசம் இந்த வழக்கு செல்லும்பட்சத்தில் ஒரு நபர் இதனை விசாரிப்பார். 1960ம் ஆண்டு முதல் 1985ம் ஆண்டு வரையிலான காலகட்டத்திலும் தொடர்ச்சியாக தமிழக கோவில்களில் சிலை திருட்டுகள் நடப்பதாக சி.பி.ஐ. அளித்த அறிக்கையை நாம் மறந்து விட்டோம்.

அதன்பின்னர் மாநில அரசு, இந்த வழக்குகளை விசாரிக்க பிரத்யேக குழு ஒன்றை அமைக்க முடிவு செய்தது. இந்த நிலையில் நாம் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறோம் என்ற வருத்தம் உள்ளது. இப்போது சி.பி.ஐ. வசம் பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளை விசாரிக்க அவர்களிடம் போதிய மனிதவளம் இல்லை. ஆகவே இந்த வழக்குகளை சி.பி.ஐ. வசம் நகர்த்துவது, சமாதி கட்டுவது போன்று உள்ளது.


Share the Article