Read in : English

Share the Article

ஒரு காலத்தில் குழந்தைத் தொழிலாளியாக இருந்த ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த முத்துராஜ் (24), தர்மபுரி மாவட்டத்தில் வேளாண் கருவிகள் சேவை மையத்தைத் தொடங்கி இன்று தொழில் முனைவோராக முன்னேறி இருக்கிறார்.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் நெருப்பூரைச் சேர்ந்த முத்துராஜின் தந்தை சின்னமுத்து முன்பு தொழிலாளி. தற்போது லாரி டிரைவர். அம்மா வளர்மதி விவசாயி. அந்த ஊரில் உள்ள அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு வரைப் படித்தார் முத்துராஜ். ஏழ்மைச் சூழ்நிலை காரணமாக அவரது குடும்பம் கரூருக்கும், காங்கேயத்துக்கும் குடும்பம் குடிபெயர்ந்ததால் ஏழாம் வகுப்பில் படித்து வந்த முத்துராஜின் படிப்பு அரைகுறையாக முடிந்தது. அந்தக் காலத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார் முத்துராஜ்.

பின்னர் அவரது குடும்பம் மீண்டும் நெருப்பூர் வந்த போது, அங்கு குழந்தைத் தொழிலாளர் மீட்புப் பள்ளியில் மீண்டும் ஏழாம் வகுப்பில் சேர்ந்து அந்தப் பள்ளியில் இரண்டாண்டுகள் படித்தார். பின்னர் அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து படித்து ஒன்பதாம் வகுப்பையும் பத்தாம் வகுப்பையும் படித்தார். பத்தாம் வகுப்புத் தேர்வில் இரண்டாவது முறையாகத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதும்,  ஐடிஐயில் சேர்ந்து ஏசி மெக்கானிக் படிப்பைப் படித்தார். இதற்கிடையில் டிராக்டர் ஓட்டவும் கற்றுக் கொண்டார். கிராமத்தில் இருப்பதால், விவசாயம் சார்ந்த தொழில் செய்வதற்கு ஆர்வத்துடன் இருந்தார்.  மதுரையில் நடைபெற்ற தொழில் முனைவோர் பயிற்சி முகாமில் பங்கேற்று பயிற்சி பெற்றார்.

இதையடுத்து, தர்மபுரி மாவட்ட தேசியக் குழந்தைத் தொழிலாளர் திட்ட அதிகாரி சரவணன் முயற்சியினால், மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்பேரில் அவருக்கு இந்தியன் வங்கியில் ரூ.25 லட்சம் கடன் கிடைத்தது. இதில் ரூ.10 லட்சம் அரசு மானியம். ஆனால் கடன் வாங்குபவர்கள் ரூ.5 லட்சம் முன்பணம் கட்ட வேண்டும். குடும்பத்தினர் உதவியுடன் அதற்கான பணத்தைக் கடன் வாங்கி ஐந்து லட்ச ருபாய்  முன்பணத்தைக் கட்டினார் முத்துராஜ். இதைக் கொண்டு இரண்டு டிராக்டர்களும் வேளாண் கருவிகளும் வாங்கி, பெண்ணாகரம் வட்டத்தில் விவசாயிகள் நுகர்வோர் வாடகை மையத்தைத் தொடங்கினார்.

“கடந்த ஓன்றரை ஆண்டுகளாக இந்த மையத்தை நடத்தி வருகிறேன். பெரும்பாலும் நானே டிராக்டர்களை ஓட்டிச் செல்வேன். இரவு பகல் என்று எதுவும் கிடையாது. எப்போது கூப்பிட்டாலும் செல்வேன். தேவைப்பட்டாமல் மட்டுமே வெளியிலிருந்து யாரையாவது வேலைக்கு அமர்த்திக் கொள்வேன். உழுதல், அறுவடை என்று பல்வேறு பணிகளைச் செய்வோம். அதனால், எங்கள் பகுதியில் வேளாண் பணி ஏதாவது என்றால் எங்களைக் கூப்பிடுவார்கள். வறட்சியான பகுதி என்பதால் சில நேரங்களில் நிறைய வேலை இருக்கும். சில நேரங்களில் அவ்வளவாக இருக்காது. எப்படியும் எல்லாச் செலவுகளும் போக மாதம் ரூ.50 ஆயிரம் அளவுக்கு வருமானம் கிடைத்து விடும். அதில் மாதம் ரூ.19 ஆயிரம் வங்கிக் கடனுக்குச் செலுத்தி விடுவேன். கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தத் தவறி விடக்கூடாது என்பதால் ஒரு இஎம்ஐயை கூடுதலாகவே கட்டி வைத்துக் கொண்டு வருகிறேன்” என்கிறார் முத்துராஜ்.

“எங்களது பகுதியில் என்னையும் சேர்த்து ஆறு பேருக்கு வங்கி இந்தக் கடனுதவியை வழங்கியது. என்னைத்தவிர மற்றவர்கள் எல்லாம் வசதி படைத்தவர்கள். ஆனால், அவர்களால் இந்தத் தொழிலை சரிவர நடத்த முடியாமல் விட்டு விட்டார்கள். நான் தொடர்ந்து செய்து வருகிறேன். தமிழக அரசின் உழவர் செயலியில் கூட எனது தொலைபேசி எண் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால், எனது சேவை தேவைப்படுபவர்கள் அதன் மூலமும் என்னை அழைக்கலாம்” என்று பெருமிதத்துடன் கூறுகிறார் அவர்.

தற்போது இவரது குடும்பத்தினர், அவர்கள் வாங்கியுள்ள நிலத்தில் பட்டுப்புழு வளர்ப்பையும் மேற்கொண்டு வருகின்றனர். அவரது உழவு இயந்திரங்களின் பணிகள் குறித்து யூ டியூபிலும் காணொளிக் காட்சிகளைப் பதிவு செய்துள்ளார் அவர்.

ஸ்டார்ட் அப் தொழில் நடத்துவதற்கு பெருநகரத்தில் பொறியாளராகவோ, மேனேஜ்மெண்ட் படிப்பு படித்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. கிராமத்தில் பள்ளிப் படிப்பை முடித்த ஒரு சாமானிய இளைஞர் கூட தனது உழைப்பால் முன்னேறி சாதித்துக் காட்ட முடியும் என்பதற்கு நிகழ்கால எடுத்துக்காட்டு முத்துராஜ்.

 

 

 


Share the Article

Read in : English