திமுகவின் செயல் தலைவரும் தனது சகோதரருமான மு.க.ஸ்டாலினுக்கு கடுமையான செய்தியை சொல்லும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கருணாநிதியின் சமாதிக்கு சென்று, திமுக ஸ்டாலின்மயமாகி வருதவதற்கு எதிராக தன் கோபத்தையும் ஆதங்கத்தையும் ஒ.பன்னீர் செல்வம் ஸ்டைலில் பதிவுச் செய்து வந்துள்ளார். இதன் மூலம் திமுக குடும்பத்துக்கு தான் சொல்ல வரும் செய்திகள் வெளிப்படையானது என காட்டும் நோக்கில், கருணாநிதிக்கு அடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான புது அணியில், அவருடைய குடும்பத்துக்கு கட்சியில் உரிய மரியாதை கிடைக்காவிட்டால் அவர் வேறு மாற்று முடிவுகளை எடுக்க நேரிடும் என்பதை வெளிப்படையாக கூறியுள்ளார்.
ஒ.பன்னீர்செல்வம், விகே சசிகலா தன்னை முதலமைச்சர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் தூக்கி எறிந்த போது தன்னுடைய எதிர்ப்பைக் காட்ட ஜெயலலிதா சமாதியைத் தேர்ந்தெடுத்து தன் எதிர்ப்பை தெரிவித்தார். அதே ஓபிஎஸ் ஸ்டைலில், அழகிரி,’அனைத்து நம்பகமான திமுக தொண்டர்களும் தன்னுடன் இருப்பதாகவும் ”அந்த நேரம் வந்தால்’’ எதிர்காலம் குறித்து அறிவிப்பதாகவும் தேவைப்பட்டால் புதுக்கட்சி தொடங்கவும் தயாராக இருப்பதாகவும்’ கூறினார்.
2001ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், அப்போது திமுகவுக்கு எதிரான மனநிலையில் இருந்தவர்களை ஒன்றிணைத்து தேர்தலில் போட்டியிட வைத்தார். அவர்கள் 2-3 சதவீத ஓட்டுக்களை பிரித்து, திமுக உறுப்பினர்களுக்கு பாதிப்பை உண்டாக்கினர். அதன்பிறகு கட்சியை விட்டு அழகிரி நீக்கப்பட்டார். அந்தக் கோபத்தை அழகிரி திமுகவுக்கு எதிரான போட்டியாளர்களுக்கு ஆதரவளித்துக் காட்டினார். இந்த பிரச்சனையை தீர்க்க கருணாநிதி அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து தென்மாவட்ட அமைப்பு செயலாளர் பதவி வழங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் எம்.பி சீட் கொடுத்து அதன் மூலம் மத்திய அமைச்சராக்கினார். அதன்பின்பும் ஸ்டாலினுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்த காரணத்தால் 2014-ல் கட்சியை விட்டு அழகிரியை, கருணாநிதி நீக்கினார்.
அழகிரியிடம் செய்தியாளர்கள், ஆகஸ்டு 14, 2018-ல் நடக்கவுள்ள திமுக செயற்குழு கூட்டம் குறித்து கருத்து கேட்டதற்கு, தான் கட்சியில் இல்லாத காரணத்தால் அதுகுறித்து கருத்து சொல்ல முடியாது என்று கூறினார்.
நமது இன்மதி.காம்-ல் கருணாநிதி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இடையே திமுகவில் உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்பதில் கொதிப்பான நிலை உருவாகியுள்ளது என்றும் அதற்கு சமரச ஃபார்முலாவை மு.க.செல்வி கணக்கிட்டு செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தோம். இருந்தபோதும், அழகிரி அந்த சமரச ஃபார்முலாவுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை போலும். மேலும் தன் குடும்பத்தாருக்கு இன்னும் உயர்வான இடத்தை அவர் விரும்புவது போலவும் தெரிகிறது.
அழகிரியின் இந்த கோபமான மனக்குமுறல், கருணாநிதிக்கு பிறகான திமுகவில் அவர் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் ஒரு பாதுகாப்பான இடத்தை பெறுவதற்காக செய்யப்படும் தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.
கருணாநிதியின் சமாதிக்கு வந்த அழகிரியுடன் அவரது மகன் தயாநிதி அழகிரி வந்தார். அவரது பெயர் திமுகவின் டிரஸ்ட்டில் அவருக்கு ஒரு பதவி என கருணாநிதியின் மகள் செல்வி உருவாக்கிய சமரச ஃபார்முலாவில் உள்ளது. அடுத்தடுத்த காட்சிகள் எப்படி அரங்கேறும்?
Forums › ஓபிஎஸ் ஸ்டைலில் ஸ்டாலினுக்கு எதிராக குமுறிய அழகிரி, புது திமுக அணியில் தன் குடும்பத்தாருக்கு பதவி கோருகிறாரா?
Tagged: M K Stalin, மு. கருணாநிதி