English தமிழ்

Share the Article

மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருணாநிதி உடல் அடக்கத்துக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அதிமுகவுக்கும் திமுகவுக்கும் பல ஆண்டுகளாக நடந்து வரும் மோதலில் திமுகவுக்குக் கிடைத்த வெற்றி. இந்தச் செய்தியைக் கேட்டதும் ராஜாஜி ஹாலில் கருணாநிதியின் உடல் அருகே இருந்த மு.க.ஸ்டாலின், கனிமொழி, ஆ.ராசா, துரைமுருகன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு கதறினர்.

திமுகவின் இந்தப் போராட்டம் என்பது வெறும் இடத்துக்கான போராட்டம் அல்ல; பல ஆண்டுகளாக திராவிடம்/அண்ணாவின் வாரிசுகள் யார் என்று நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதிதான் இது. 42 ஆண்டுகளுக்கு முன்பு திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர் அண்ணாவின் பெயரால் கட்சி அமைக்கிறார். தன் கட்சி கொடியில் அண்ணாவின் உருவப்படத்தை பொறிக்கிறார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, திராவிட முன்னேற்ற கழகத்தை நிறுவியவரே அண்ணாதான் என்றார். திமுக தங்களது போஸ்டர், பேனர் என எல்லா இடங்களிலும் பெரியார், அண்ணா, கருணாநிதி என மூன்று தலைவர்களை முன்னிறுத்தும். அதிமுகவின் தொடக்க காலத்தில் பெரியார், அண்ணா, எம்ஜிஆர்  என ஆகியோர் படங்களை போஸ்டர்களில் போட்டது. அதன்பின்பு, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று ஆனது. மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே எம்ஜிஆர் சமாதியும் அதன் அருகே ஜெயலலிதா நினைவிடத்தையும் ஏற்படுத்தி அந்த இடம் அதிமுக தலைவர்களுக்கான இடம் என நிரூபிக்க முயன்றது அதிமுக.

கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் கொடுப்பதன் மூலம், திராவிட இயக்கம் மற்றும் அண்ணாவின் வாரிசு அதிமுக தான் என்ற பிம்பம் தகர்க்கப்படும் என்று பயந்த  அதிமுக அரசு கருணாநிதியின் உடல் அடக்கத்துக்கு மெரினாவில் இடம் கொடுக்க மறுத்தது.

அண்ணா மற்றும் கருணாநிதி சமாதிகள் ஒரே இடத்தில் இருப்பது, திராவிட இயக்கத்தின், அண்ணாவின் வாரிசு திமுகதான் என்பதை நிலைநிறுத்துவதாக அமைந்து விடும். அத்துடன், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் புகழை அது மறைத்துவிடக்கூடும் என்பதால் அந்த இடத்தை ஒதுக்குவதில் சட்ட சிக்கல் என அதிமுக அரசு கூறியது.

கருணாநிதிக்கு இரண்டு ஆசைகள் இருந்தன. ஒன்று தமிழ் ஈழம் அமைய வேண்டும். மற்றொன்று தன்னை அண்ணாவின் அருகில் தனது சமாதி அமைய வேண்டும் என்பதுதான். அவரின் ஈழ கனவு தகர்ந்தது. அவருடைய இரண்டாவது ஆசையையாவது நிறைவேற்ற வேண்டும் என திமுக விரும்பியது.

அதனால்தான், அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திமுக தரப்பில் முதலமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு செவி சாய்க்க மறுத்த தமிழக அரசு,  சர்தார் வல்லபாய் பட்டேல் சாலையில் கிண்டி காந்தி மண்டபம் அருகே கருணாநிதியின் உடல் அடக்கத்துக்கு இரண்டு ஏக்கர் நிலம் தருவதாக கூறியது. இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டியது திமுக.

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி ரமேஷ்  நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் ஆகியரோடங்கிய பெஞ்ச், திமுகவின் மனுவை அவசர வழக்காக எடுத்து செவ்வாய்க்கிழமை இரவில் விசாரித்தது. அதன்பிறகு வழக்கு புதன்கிழமை காலைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதற்கு தடைகோரி ஏற்கெனவே வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர் துரைசாமி, பாமக பாலு மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தாங்கள் தொடர்ந்திருந்த வழக்கை செவ்வாய்க்கிழமை இரவே வாபஸ் பெற்றனர். புதன்கிழமைக் காலை சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு ஆரம்பித்த போது, அவர்களது வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தநிலையிலும், தமிழக அரசு தனது நிலையில் இருந்து மாறாமல் கிண்டி காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் தருவதாக மீண்டும் கூறியது. முதலமைச்சர்களாக இருக்கும்போது இறந்தவர்களுக்குத்தான் மெரினாவில் இடம் கொடுக்கப்பட்டது. முன்னாள் முதல்வர்களுக்கு கிண்டியில் இடம் கொடுக்கப்பட்டது என்றும் அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், இது அரசின் கொள்கை முடிவு என்றும் வாதிட்டது. தமிழக அரசின் முடிவை எதிர்த்த திமுக, தமிழ்நாட்டில் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் உடல் மரியாதையுடனும் மாண்புடனும் அண்ணா சமாதி அருகே உள்ள இடத்தில் அடக்கம் செய்யப்பட வேண்டும்; இதில் எந்த சட்ட சிக்க¬லையும் ஏற்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தியது.

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்க சென்னை மாநகராட்சி உரிமம் வழங்கியுள்ளது. ஜெயலலிதாவுக்கு சமாதி அமைப்பதால் பொதுமக்களின் நலனுக்கு எந்த ஊறும் ஏற்படாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார். அதனால் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று வாதிட்ட திமுக, அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியது.

திமுகவின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கருணாநிதியின் உடல் அடக்கம் செய்ய மெரினாவில் அண்ணா சமாதி அருகே இடம் கொடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.


Share the Article