English தமிழ்

Share the Article

உடல் உறுப்புகளில் அனைத்துமே பிரதானமானதுதான் என்றாலும் பார்வை இல்லையெனில் மனித இயக்கமே முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஒரு விஷயத்தை காதால் கேட்டுபுரிந்துகொள்வதற்கும் அதனை நொடிப்பொழுது கண்ணால் பார்த்து உணர்ந்துகொள்வதற்கும் வேறுபாடு உள்ளது.

பார்வையற்றவர்களின் வலியை, வாழ்க்கையை சில நிமிடங்களாவது உணர்ந்து பார்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்  நானும் எனது கண்களை மூடிக்கொண்டு கண்காட்சிக்குள்  நுழைந்தேன். கண்களின் முக்கியத்துவம் கண்களை கட்டிய பிறகே புரிந்தது. முதலில் இருக்கும் நபரிடம் சென்றேன். என்னை வரவேற்று அவர் வைத்திருக்கும்  மாதிரி பொருள்களை தொடவைத்து அது குறித்து விளக்கினார். நான் அதன் மீது கை வைத்தபின் தான் தெரிந்துதது அது முருங்கைக்காய் என்று.

சென்னையில் பார்வையற்ற மாணவர்களுக்காக கர்ண வித்யா அமைப்பு “தணல்” என்னும் அறிவியல் கண்காட்சியை ’காக்னிசண்ட் அவுட் ரீச்’ என்ற தன்னார்வல குழுவினரின் உதவியுடன் அண்ணா பல்கலைகழகத்திலுள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் கடந்த வெள்ளி,  சனிக்கிழமைகளில்  நடத்தியது.பொதுவாக பார்வையற்றவர்கள் ஆசிரியர்களாகவும், நிறுவனங்களில்வரவேற்பாளர்களாகவும் பணிபுரிகிறார்கள்.  அவர்கள் அறிவியலும் கணினியை பயன்படுத்தவும் கற்றுக்கொண்டு மற்ற துறைகளிலும் பணிபுரிய வேண்டும் என்பதற்காக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

முருங்கையை நான் ஏற்கனவே தொட்டுப்பார்த்து பழகியதால் எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது. முருங்கை விதைகள் வெடித்து காற்றில் பரவி எவ்வாறு விதைக்கப்படுகிறது என்று அவர்கள் கூறும் பொழுதே நான் இது எவ்வாறு நடக்கும் என்று காட்சிப்படுத்தி பார்த்தேன்.  ஒரு பொருள் எவ்வாறு இருக்கும் என்று தெரியாமல் அதை தொட்டுப் பார்த்து உணர்ந்து அதற்கு நானே ஒரு உருவம்கொடுத்து  பார்ப்பது சுவாரஸ்யமாய் இருந்தது. ஆனால் எனக்கு பார்வை தெரியும், இது என் கற்பனை சார்ந்த ஒரு விஷயம் என்பதை உணர்ந்ததும் அந்த சுவாரஸியம் நீடிக்கவில்லை.  அதனால் மூடின கண்களை திறந்து என் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினேன். அதுவரை நான் ஏற்படித்தியிருந்த இருட்டு வெளிச்சமானதும் மனதளவில்  மகிழ்ச்சி பரவியது. என் கணநேர சந்தோஷத்தில் தான் பார்வையற்றவர்களின் அன்றாடத் துன்பமும் துயரும் புரிந்தது.   பிறக்கும்போது  பார்வை இருந்து, பின்னால் விபத்தினாலோ நோயினலோ பார்வையிழந்தவர்களை சந்தித்தபோது அது  என்னை மிகவும் பாதித்தது.

அங்கிருந்த கண்காட்சி  அறையில் இரண்டே இடத்தில் கூட்டம் அதிகமிருந்தது.  அதில் ஓரிடத்துக்குச்  சென்று பார்த்தால் 5ஆம் வகுப்பு படிக்கும் அஷ்வின் அழகாக மனித செரிமான அமைப்பை விவரித்துக்கொண்டிருந்தான். இதில் என்ன இருக்கிறது என்று பார்த்தால், அவன் பார்வை குறைபாடு உள்ள மாணவன். மிகவும் அழகாக வருவோரை வரவேற்று, அவர்களிடம் விரல்களைகொடுக்கச் சொல்லி, விரல்களை அந்த செரிமான மாதிரி உருவத்தில் வைத்து அவர்களை உணரச் சொல்லி,  அது எவ்வாறு செயல்படும் என்று மிக தெளிவாக விளக்கமளித்தான். அவனிடம் உரையாடிய பொழுது, அஷ்வின் சென்னை ஆழ்வார்பேட்டை விருக்க்ஷா மாண்டஸோரி  பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த சிறுவயதில் பார்வை தெரியவில்லை என்று துவண்டுபோய்விடாமல், வாழ்வில் சாதிக்க வேண்டுமென்று செயல்படுகிறான். தினமும் பள்ளிக்கு சென்றுவிட்டு, ஞாயிற்றுகிழமைகளில் கணினி மற்றும் அறிவியலை  கர்ண வித்யா அமைப்பில்  கற்றுக்கொள்கிறான். மிகவும் ஆர்வமுடன் செயல்படும் அஷ்வின், தான் சொந்தமாக ஒரு கணினி சார் நிறுவனம் அமைத்து பெரிய தொழிலதிபராகி மற்றவர்களுக்கு வேலை வழங்கவேண்டும் என்பதே தன் லட்சியம் என  கூறுகிறான். அவரின் பொழுதுபோக்கு யோகா மற்றும் தபலா வாசிப்பது என கூறினான்.  கர்நாடக சங்கீதமும் அருமையாகப்  பாடினார். இச்சிறுவன் கணினியில்தான் தேர்வு எழுதுகிறான் என்பது கூடுதல் வியப்பு.

கர்ண வித்யா அமைப்பின் நிறுவனர் ரகுராம்

அடுத்து கூட்டமாக  இருந்த  மற்றொரு பிரிவிற்கு சென்றேன். பார்வை குறைபாடுள்ள பாலு கணினியில் அனைத்து விவரங்களும் தெரிந்தவர். பள்ளிப்படிப்பை பர்கூரில் முடித்துவிட்டு, சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பு முடிந்துவிட்டு கர்ண வித்யா அமைப்பில் 6 மாத கால கணினி செயல்முறை படிப்பு பயின்றுவருகிறார். பாலுவிடம்  பேசும்பொழுது, ‘’உலகளவில் ஒரு விதிமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.  உலகில் எந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் உருவாக்கினாலும் அது மாற்றுத்திறனாளிகளுக்கு பயன்படுமாறு இருக்கவேண்டும். அவ்வாறு இருப்பதற்கு சிலரிடம் அணுகி சோதனை மேற்கொள்வர், அவர்கள் அதை பயன்படுத்தி பார்த்துவிட்டு, கருத்துக்களை தெரிவிப்பர். தற்சமயம் இந்தியாவில் பாப்படியான அணுகுமுறை இல்லை.  ஆனால் வருங்காலத்தில் அதனை நாமும் பின்பற்ற வேண்டும்.  அது தான் எனது லட்சியம்’’ என்று மிகவும் கர்வமுடன் கூறுகிறார்.

Non Visual Access Desktop (NVDA) என்ற ஒரு சாப்ட்வேர் மூலம், தட்டச்சடிப்பது எல்லாம் ஒலியாக கேட்டு, அதை பின்பற்றி கணினி செயல்பாட்டை மேற்கொள்கிறார். இதே மென்பொருள் மூலம், செல்போனையும் அவர் எளிதாக கையாள்கிறார். இக்காலத்தின் தொழில்நுட்பம் அவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் இகூறும் அவர்,  இந்த விஷயத்தில் இந்தியா மற்ற நாடுகளை விட பின்தங்கி உள்ளது வருத்தமாக உள்ளது என தெரிவித்தார்.


Share the Article