தமிழ்

Share the Article

ஆன்லைன் கவுன்சலிங் என்றதும் நவீனத் தொழில்நுட்பத்தால் ஏற்கெனவே இருந்ததைவிட அட்மிஷன் எளிதாக இருக்குமா என்று பார்த்தால் அது அப்படி இல்லை என்பது புரிந்து விடும்.

ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். அல்லது உதவி மையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பிறகு, விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். அந்தந்த மாவட்டங்களில் உள்ள உதவி மையங்களுக்கு மாணவர்கள் சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும்.

ரேங்க் பட்டியல் வெளியிட்ட பிறகு, கவுன்சலிங்கில் பங்கேற்பதற்கு மாணவர்கள் சென்னைக்கு வர வேண்டாம். கம்ப்யூட்டர் வாயிலாக விரும்பும் கல்லூரியையும் படிப்பையும் தேர்வு செய்துகொள்ளலாம். இதற்காக, மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகளை முன்னுரிமைப் படுத்தி விருப்பப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசை, மதிப்பெண் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி கவுன்சலிங்கிற்காக சென்னைக்கு ஒரு முறை மட்டும் வந்தால் போதும். ஆனால், ஆன்லைன் கவுன்சலிங்கிற்கு மூன்று முறை உதவி மையங்களுக்கு வர வேண்டியதுள்ளது. வீட்டிலிருந்தே கவுன்சலிங்கில் பங்கேற்பதாக இருந்தாலும்கூட, சான்றிதழ் சரிபார்ப்புக்கு மாவட்ட உதவி மையங்களுக்கு வந்தே ஆக வேண்டும்.

தங்களது வீட்டிலிருந்து கம்ப்யூட்டர் மூலம் தாங்கள் விரும்பும் கல்லூரிகளையும் படிப்புகளையும் பட்டியலிட்டு வைத்துக் கொண்டு ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும். அல்லது பொறியியல் மாணவர் சேர்க்கை உதவி மையங்களுக்கு நேரில் சென்றும் மாணவர்கள் தங்களது விருப்பங்களைப் பதிவு செய்யலாம்.
ஆன்லைன் கவுன்சலிங் நான்கு கட்டங்களைக் கொண்டது.
1. விருப்பப் பட்டியல் பதிவு (குறிப்பிட்ட 3 நாட்கள்)
2. தாற்காலிக ஒப்புதல் செய்தல் (அடுத்த 2 நாட்கள்)
3. முடிவான ஒதுக்கீட்டை உறுதி செய்தல்
4. ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்தல்.

மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் அறிவிக்கப்பட்ட பிறகு, உங்களது விருப்பப் பாடப்பிரிவுகளைப் பதிவு செய்வதற்கான நாட்கள் குறித்து தர வரிசைப்படி பல குழுக்களாக அறிவிக்கப்படும். உங்களுக்கென்று குறிப்பிடப்பட்ட நாட்களில் மாணவர் சேர்க்கைக்கான முன் வைப்புத் தொகையை இணைய தலம் மூலமாகவோ அல்லது டிமாண்ட் டிராப்ட் மூலமாகச் செலுத்த வேண்டும். டிமாண்ட் டிராப்ட்டை உதவி மையத்தின் மூலமாக மட்டுமே செலுத்த முடியும்.

முதலில், இணைய தளத்தில் உள்ளீடு செய்ததால், நீங்கள் விண்ணப்பிக்கும் போது ஏற்கெனவே பதிவு செய்த தகவல்களும் பதிவு எண், தர வரிசை எண் போன்ற தகவல்களும் கொடுக்கப்பட்டிருக்கும். இவற்றின் இடது புறத்தில் ஏற்கெனவே முடிந்த ஸ்டெப்புகள் பச்சை நிறத்திலும் இப்போது செய்து கொண்டிருக்கும் பதிவுகள் ஆரஞ்சு நிறத்திலும் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் சாம்பல் நிறத்திலும் காட்டப்படும். வலது புறத்தில் செய்ய வேண்டிய பணிகளுக்கான கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் இடது புறத்தில் உள்ள “Make payment’ என்ற லிங்கில் கிளிக் செய்தால், இணைய வழியில் பணம் செலுத்தலாம். செலுத்தியதும் அந்த இடம் பச்சை நிறமாக மாறி இருக்கும். Choice Entry, Lock Choice ஆகியவை ஆரஞ்சு நிறத்தில் மாறி இருக்கும். இப்போது நீங்கள் உங்களது விருப்ப வரிசையை உள்ளிடலாம்.

இப்போது பாட்பிரிவைத் தேர்வு செய்வதில் முடிவெடுக்க வேண்டும். மாணவர்கள் தங்களது பொது தர வரிசைப்படியும் உங்கள் சமூகத்தின் தரவரிசைப்படியும் சென்ற ஆண்டில் இந்த மதிப்பெண்ணுக்கு, தர வரிசை எண்ணுக்கு எந்தக் கல்லூரியில் எந்தப் பாடப்பிரிவில் இடம் கிடைத்தது என்பதை மனதில் வைத்துக் கொண்டு ஒரு விருப்பப் பட்டியல் தயாரிக்க வேண்டும். இப்படி விருப்ப வரிசைப் பட்டியலைத் தயாரித்து வைத்துக் கொண்டு பதிவு செய்ய ஆரம்பித்தால் உங்களது வேலை எளிதாக முடியும் என்கிறது அண்ணா பல்கலைக்கழகம். விருப்பப் பட்டியலை வீட்டிலிருந்தோ அல்லது வேறு எங்கிருதோ வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையத்திலிருந்தும் செய்யலாம்.
ADD CHOICE BY COLLEGE CODE என்பதற்குக் கீழே TYPE COLLEGE CODE என்ற இடத்தில் நீங்கள் ஏற்கெனவே தயாரித்து வைத்திருக்கும் விருப்ப வரிசையில் உள்ள முதல் கல்லூரியின் எண்ணை டைப் செய்யவும். டைப் செய்து கொண்டிருக்கும்போதே அந்த எண்ணில் ஆரம்பிக்கும் பல கல்லூரிகளின் பெயர்கள் வரும். சரியான கல்லூரி, அதன் முகவரி போன்றவற்றை சரிபார்த்து, அக்கல்லூரியின் மேல் கிளிக் செய்தால் அதில் உள்ள பாடப்பிரிவுகளும் அவற்றில் அப்போது உள்ள காலி இடங்களும் அப்பாடப்பிரிவு எப்போது ஆரம்பித்தார்கள் என்பதும் அது என்பிஏ சான்றிதழ் பெற்றதா என்பதும் கொடுக்கப்பட்டிருக்கும்.

தேவையான பாடப்பிரிவில் செலக்ட் செய்வதற்கான வட்டத்தில் கிளிக் செய்து ADD AS CHOICE என்பதில் கிளிக் செய்தால் இடது பக்கத்தில் உள்ள பகுதியில், வரிசைப்படி போய்ச் சேர்ந்துவிடும். அக்கல்லூரியில் காலி இடம் இல்லையென்றால் அந்தப் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்க கம்ப்யூட்டர் அனுமதிக்காது. பின்னர் அடுத்தடுத்து நீங்கள் விரும்பியவற்றை உங்கள் வரிசையில் சேர்க்கலாம். அதற்கு ஓர் எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும். புதிதாக ஏதாவது ஒரு பாடப்பிரிவைச் சேர்க்கும் போது அடுத்த எண்ணாக இணைக்காமல் நடுவில் சொருக வேண்டுமென்றால் வலது பக்கமுள்ள MAKE AS CHOICE என்பதில் நீங்கள் விரும்பிய வரிசை எண்ணை டைப் செய்தால் அது விரும்பிய இடத்தில் சொருகப்பட்டு, ஏற்கெனவே சேர்த்திருந்த வரிசை கீழே தள்ளப்படும். இடது பக்கப்பட்டியலில் தேர்ந்தெடுத்துச் சேர்த்த பிறகு ஏதோ ஒன்றை நீக்க நினைத்தால் அதன் எதிரே உள்ள வடத்தில் கிளிக் செய்தால் அந்த எண்ணில் உள்ள விருப்பம் போய்விடும்.

நீங்கள் கல்லூரி பெயராலும் (ADD BY COLLEGE) தேடி உங்கள் விருப்ப வரிசையில் சேர்க்கலாம். அதில் கல்லூரியின் பெயர், ஊர், பின்கோடு ஆகியவற்றில் எதை டைப் செய்தாலும் அந்தப் பெயரில் அல்லது ஊரில் உள்ள பல கல்லூரிகளின் பெயர்கள் மற்றும் விவரங்கள் தோன்றும். பல கல்லூரிகள் ஒரே மாதிரி இருக்கலாம். அவற்றின் எண், ஊர் போன்றவற்றை சரிபார்த்து சரியானதை கிளிக் செய்யவும். உடனே அக்கல்லூரியில் உள்ள பாடப்பிரிவுகளையும் அதில் உள்ள சமூக அடிப்படையிலான காலி இடங்களையும் ஆரம்பித்த ஆண்டு மற்றும் என்பிஏ சான்று பெற்றதா போன்ற விவரங்களையும் காட்டும். இதில் தேவையானதை செலக்ட் என்பதில் கிளிக் செய்து முன்பு செய்தது போல ADD AS CHOICE என்பதில் கிளிக் செய்தோ MAKE AS CHOICE என்பதில் எத்தனையாவது விருப்பம் என்ற எண்ணை உள்ளீட்டால் உங்களது விருப்ப வரிசையில் அது சேர்ந்து விடும். பாடப்பிரிவை உள்ளீடு செய்தும் விரும்பிய கல்லூரியின் பாடப்பிரிவை முன்பு சொன்னது போல கிளிக் செய்து தேர்வு செய்யலாம். இதேபோல மாவட்டத்தின் பெயர் மூலமாகவும் நீங்கள் கல்லூரியைத் தேடலாம்.

இதேபோல, விருப்பத்தை நீக்குதல், ஒரு கல்லூரிக்குள்ளேயே பாடப்பிரிவை மாற்றுதல், ஒரு விருப்பத்தின் விருப்ப எண்ணை மாற்றுதல், இரண்டு விருப்பங்களின் எண்ணை ஒன்றோடு ஒன்று மாற்றிக் கொ ள்ளுதல் போன்ற மாற்றங்களையும் செய்ய முடியும்.

உங்களால் எத்தனை அதிகமான விருப்பங்கள் சேர்க்க முடியுமோ அத்தனையையும் சேர்த்துக் கொள்ளளலாம்.
I have completed adding my preferential choice and hence lock my choices என்பதில் கிளிக் செய்து பின் ` `LOCK MY CHOICES` என்பதில் கிளிக் செய்யவும். அதன் பிறகு DOWNLOAD என்பதை கிளிக் செய்தால் நீங்கள் உறுதி செய்த வரிசைப் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதுவே உங்களது இமெயில் முகவரிக்கும் அனுப்பப்படும். SEND OTP என்பதில் கிளிக் செய்து கடவு எண்ணை (OTP) உங்களது மொபைல் போனில் பெற்று அதை டைப் செய்து CONFIRM LOCK என்பதை கிளிக் செய்யவும். நீங்கள் உறுதி செய்த வரிசையை இனி மாற்ற முடியாது. மாற்றங்கள் செய்வதாக இருந்தால், அந்தப் பணிகளை குறிப்பிட்ட மூன்று நாட்களுக்குள் முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எந்த மாற்றமும் செய்ய முடியாது. கம்ப்யூட்டரே, மேற்கொண்டு எந்த மாற்றமும் செய்ய முடியாமல் செய்து விடும்.

இதையடுத்து, குறிப்பிட்ட நாளில் உங்கள் விருப்ப வரிசைப்படியும் உங்கள் தரவரிசைப்பட்டியல் தாற்காலிக இடஒதுக்கீடு வழங்கப்படும். இதற்கு மாணவர்கள் ஒப்புதல் தர வேண்டும். உங்களது முதல் விருப்பம் ஒதுக்கப்பட்டிருக்கலாம். முதலாவது அல்லாத வேறு விருப்பம் ஒதுக்கப்பட்டிருக்கலாம். ஓதுக்கீடு கிடைக்காமலும போகலாம். முதல் விருப்பம் கிடைத்திருந்தால் நன்று. அதை ஏற்கலாம். ஒருவேளை உங்களது வரிசைப் பட்டியலை மாற்றி அமைக்கலாம் என்று நினைத்தால் அடுத்த கட்ட கலந்தாய்வுக்கு வரலாம். ஆனால், பூர்த்தியானது போக உள்ள காலி இடங்களிலிருந்துதான் இடம் கிடைக்கும். எதுவும் வேண்டாம் என்றால் வெளியே வந்து விடலாம். மேற்கொண்டு கவுன்சலிங்கில் எந்த வரிசையிலும் கலந்து கொள்ள முடியாது.
உங்களது முதல் விருப்பம் அல்லது வேறு அடுத்த அல்லது அதற்குப் பின் உள்ள விருப்பம் ஒதுக்கப்பட்டால், ஐந்து வகைகளில் நீங்கள் ஒப்புதல் கொடுக்கலாம்.

உங்களது முதல் விருப்பம் ஒதுக்கப்பட்டால்
1. இபபோது எனக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறேன்.
2. இப்போது ஒதுக்கப்பட்டதை நான் ஏற்கவில்லை. அடுத்தகட்ட கலந்தாய்வுக்குச் சென்று அதில் உள்ள காலி இடங்களுக்குப் பங்கேற்க விரும்புகிறேன்.
3. இப்போது எனக்கு ஒதுக்கப்பட்டதை நிராகரிக்கிறேன். நான் கலந்தாய்விலிருந்து வெளியேறுகிறேன். நான் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்பதை அறிவேன்.

முதல் விருப்பம் அல்லாத வேறு விருப்பம் ஒதுக்கப்பட்டால்
1. இபபோது எனக்கு ஒதுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்கிறேன்.
2. இப்போது ஒதுக்கப்பட்டதை நான் ஏற்கிறேன். ஆனால் எனது முந்தைய விருப்பங்களுக்கு முன்னேற வாய்ப்பிருந்தால் அதை ஏற்று உறுதி செய்கிறேன்.
3. இப்போது எனக்கு ஒதுக்கப்பட்டதை நிராகரிக்கிறேன். ஆனால் எனது முந்தைய விருப்பங்களுக்கு முன்னேற வாய்ப்பிருந்தால் அதை ஏற்று உறுதி செய்கிறேன். முந்தைய விருப்பங்களுக்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்தகட்ட கலந்தாய்வுக்கு வருகிறேன்.
4. இப்போது எனக்கு ஒதுக்கப்பட்டதை நிராகரிக்கிறேன். நான் கலந்தாய்விலிருந்து வெளியேறுகிறேன். நான் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்பதை அறிவேன்.

எந்த விருப்பமும் ஒதுக்கப்படவில்லை என்றால்
1. எனது முந்தைய விருப்பங்களுக்கு முன்னேற வாய்ப்பிருந்தால் அதை ஏற்று உறுதி செய்கிறேன். முந்தைய விருப்பங்களுக்கு வாய்ப்பில்லை என்றால் அடுத்தகட்ட கலந்தாய்வுக்கு வருகிறேன்.
2. நான் அடுத்தகட்ட கலந்தாய்வுக்குச் சென்று அதில் உள்ள காலி இடங்களில் பங்கேற்க விரும்புகிறேன்.
3. நான் கலந்தாய்விலிருந்து வெளியேறுகிறேன். நான் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்பதை அறிவேன்.

நீங்கள் ஒப்புதல் கொடுத்த பிறகு, அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும். மறுநாள் குறிப்பிட்ட நேரம் முதல் உங்கள் ஒதுக்கீட்டுப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்களுக்கு ஒதுக்கீடு வந்தும், குறிப்பிட்ட கால வரையறைக்குள் அதற்கு ஆன்லைன் மூலம் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால் உங்களுக்கு அட்மிஷன் கிடைக்காது.
“மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியின் பாடப்பிரிவில் முந்தைய ஆண்டுகளில் கடைசி ஒதுக்கீட்டின் கட் ஆஃப் மதிப்பெண்களின் தரவரிசையை உங்கள் தர வரிசையோடு ஒப்பிட்டு அறிந்து கொள்ள வேண்டும். ஒரு கல்லூரியின் கடைசி ஒதுக்கீட்டின் தர வரிசை எண் உங்கள் தரவரிசை எண்ணைவிட மிக அதிகமாக இருந்தால் அதில் உங்களுக்கு ஒதுக்கீடு கிடைப்பது கடினம். அதைத் தவிர்த்து விட வேண்டும். ஒரு கல்லூரியின் கடைசி ஒதுக்கீட்டின் தர வரிசை எண் உங்கள் தரவரிசை எண்ணைவிட மிகக் குறைவாக இருந்தால் அதில் உங்களுக்கு ஒதுக்கீடு கிடைப்பது எளிது. எனினும், அதைத் தவிர்ப்பது நல்லது. காரணம், இதைவிட நல்ல கல்லூரிகள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம். கல்லூரி விருப்ப வரிசைப் பட்டியலைத் தயாரிப்பதிலும் அதனை இணைய தளத்தில் உள்ளீடு செய்வதிலும் கவனம் தேவை. சரியான விருப்ப வரிசைப் பட்டியல் சிறந்த, வேண்டிய முடிவைத் தரும்” என்கிறார்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைப் பிரிவு அதிகாரிகள்.

இந்த ஆன்லைன் கவுன்சலிங் நடைமுறைகளை விளக்கி அண்ணா பல்கலைக்கழகக் காணொலி காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

ஆனால், கிராமப்புறங்கள் மற்றும் சிறு நகரங்களைச் சேர்ந்த சாமானிய மாணவர்கள் இந்த நடைமுறைகளை எல்லாம் எப்படி இம்மி பிசகாமல் செயல்படுத்த முடியும்?

இதுவரை நமது விருப்பத்தின் அடிப்படையில் கல்லூரிகளையும் பாடப்பிரிவையும் தேர்வு செய்து வந்திருக்கிறோம். ஆன்லைன் கவுன்சலிங் முறையின் மூலம் நமது விருப்பங்களைச் சொல்லலாம். அந்தப் பட்டியலிருந்து ரேங்க் பட்டியல் வரிசைப்படி என்று சொன்னாலும்கூட, மாணவர்களின் விருப்பப் பட்டியலிருந்து இறுதி முடிவை கம்ப்யூட்டர் எடுக்கும் என்பதுதான் யதார்த்தம். எத்தனை பேரால் தங்களது தகுதி மதிப்பெண்களுக்கு ஏற்ப விருப்பப்பட்டியலை சரிவர தயாரிக்க முடியும்?

முதல் முறை கவுன்சலிங்கில் விரும்பிய இடம் கிடைக்காதவர்களும் அடுத்த முறை நடைமுறை கவுன்சலிங்கில் பங்கேற்கும்போது, ஏற்கெனவே உள்ள இடங்கள் பூர்த்தியான இடங்கள் போக மீதமுள்ள இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட கல்லூரிகளில்தான் இடம் கிடைக்கும்.

பொறியியல் படிப்பில் அனைவருக்கும் ஆன்லைன் அட்மிஷனா என்று பார்த்தால் அதுவும் இல்லை. விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள், வொகேஷனல் பிரிவு மாணவர்களுக்கு கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டும் சென்னையில் ஒற்றைச்சாளர முறையில் நேரடி கவுன்சலிங் நடைபெறுகிறது. முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான இடங்களுக்கும் நேரடி கவுன்சலிங் நடத்தப்படும்.

பி.ஆர்க். மாணவர்களுக்கான கவுன்சலிங்கும் நேரடியாக நடைபெறும். பொதுக் கவுன்சலிங் முடிந்த பிறகு, இருக்கின்ற காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் துணை கவுன்சலிங்கில் பங்கேற்க விரும்புபவர்களுக்கும் நேரடி கவுன்சலிங் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறியியல் படிப்புக்கு ஆன்லைன் கவுன்சலிங் என்றாலும்கூட, அனைத்து நிலைகளுக்கும் ஆன்லைன் கவுன்சலிங் நடைமுறைப்படுத்தப்படவில்லையே ஏன் என்ற கேள்வி எழுகிறது. எளிமையான ஒற்றைச்சாளர மாணவர் சேர்க்கை முறையைக் கைவிட்டு விட்டு ஆன்லைன் கவுன்சலிங் யாருக்காக கொண்டு வரப்பட்டுள்ளது? இன்னும் பலருக்கும் புரியாத விஷயமாக இருக்கிறது.


Share the Article