மத்திய அரசின் புதிய முடிவை ஏற்க முடியாது என்றும், யு.ஜி.சி. அமைப்பே தொடர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழகம் மானியக் குழுவுக்குப் பதிலாக, இந்திய உயர் கல்வி அமைப்பு என்று ஒரு புதிய அமைப்பை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சட்ட முன்வரைவை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதோடு அந்த சட்ட முன்வரைவு குறித்து கல்வியாளர்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கருத்துகளைக் கேட்டு பெற்றுள்ளது. அதோடு மாநில அரசுகளும் தங்களது கருத்துகளை ஜூலை 7-ந் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.
இந்த தகவல் வெளியானதும், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் பேசுகையில், யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பதிலாக, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய ஆணையத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கோரிக்கை வைத்தார். அப்போது, பதில் அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், ‘யு.ஜி.சி. பதிலாக இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க உள்ளதாகவும், அதற்கு மாநிலத்தின் கருத்தை தெரிவிக்க வேண்டும் என்று கருத்து கேட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை யு.ஜி.சி. அமைப்பின் மூலம் தமிழகத்துக்கு கிடைத்த அனைத்து நன்மைகளும் புதிய அமைப்பில் கிடைக்க வலியுறுத்துவோம். ஒருபோதும் தமிழகத்தின் உரிமையை விட்டுகொடுக்க மாட்டோம்’ என்று கூறினார்.
முதல்வர் ஆலோசனை இந்த நிலையில் மத்திய அரசு வித்த ஜீலை 7-ந் தேதி என்ற கெடு நீட்டிக்கப்பட்டு ஜீலை 20-ந் தேதிக்குள் மாநில அரசுகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காகவே இந்த திட்டம் என்றும் கல்வியாளர்கள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்தநிலையில், இந்த சட்ட முன்வரைவு குறித்து தமிழக அரசு சார்பில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டநர்.
இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறித்த பேட்டி வருமாறு:-யு.ஜி.சி. கடந்த 1956 -ல் நாடாளுமன்றத்தில் சட்டமாக இயற்றப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அன்று முதல் இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் இதை ரத்து செய்துவிட்டு, புதிய அமைப்பை உருவாக்குவது தேவையற்றது. மேலும், கல்வி சார்ந்த பணிகளை மட்டும் இந்த ஆணையம் கவனிக்கும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதி வழங்கும் அதிகாரம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் வழங்கப்படும் என்பதும் ஏற்கொள்ள முடியாது. முன்பு இருந்தது போன்று யு.ஜி.சி. அமைப்பே தொடர வேண்டும் என்பதே தமிழக அரசின் கருத்தாக முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு தமிழக அரசின் கருத்தாக உடனடியாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறினார்.
Forums › யு.ஜி.சி.: எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தியது தமிழ் நாடு அரசு