English தமிழ்

Share the Article

குமரி மாவட்டம் தோட்டியோடிலிருந்து கேரளா மாநிலத்தின் கடற்கரை கிராமமான விழிஞ்ஞம் சுமார் 50 கிலோமீட்டர்கள்  தொலைவே இருக்கும். அதானிக் குழுமம், கேரள அரசுடன் இணைந்து 7525 கோடி செலவில் துறைமுகத் திட்டத்தை இங்கு தான் செயல்படுகிறது. கேரளாவில் அதிகம் விவாதிக்கப்பட்டு பின்னர் ஓய்ந்து போன விவகாரமாக இது இருந்தாலும் குமரி மாவட்டத்தில் அதனைப் பற்றிய விவாதங்கள் பெரிய அளவில் இருந்து வந்தது. அதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக குமரி மாவட்டத்திலிருந்து கற்களை படகுகள் மூலம் ஏற்றி செல்லவிருந்த திட்டம் தான். மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து இத்திட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டு, கேரளாவின் பத்தனம் திட்டயிலிருந்து கற்கள் எடுப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

“ கடந்தமாதம் 6 ஆம் தியதி தேங்காப்பட்டினம் மீன் பிடித் துறைமுகத்தில் விழிஞ்ஞம் துறைமுகக் கட்டுமான பணிக்கு பொருட்கள் கொண்டு செல்வதற்கான கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்போவதாக மீன்வளத்துறை சார்பில் சொன்னார்கள். எங்களைப் பொறுத்தவரை இந்த கருத்துக் கேட்பு கூட்டமே உடன்பாடு இல்லாதது.

குமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலையை ஒருபுறம் கடலிலும், மறுபுறம் அதானிக்கும் கொடுக்கப் பார்த்தனர். இதனை எப்படி அனுமதிக்க முடியும் ?” என்ற கேள்வியுடன் பேசினார் வழக்கறிஞரும், இயற்கை ஆர்வலருமான ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர்.

விழிஞ்ஞம் துறைமுகக் கட்டுமானப் பணிக்கு மிகப் பெரிய அளவில் கருங்கற்கள் தேவை. அதனை திருவனந்தபுரத்தை அடுத்த காடவிளையிலிருந்தும்,  நாகர்கோயில் அருகே தோட்டியோடை அடுத்த தேவியோடிலிருந்தும் உள்ள குவாரிகளிலிருந்தும் எடுக்க திட்டமிட்டிருப்பதாக இத்திட்டத்தின் சுற்றுச்சூழல் அறிக்கை கூறுகிறது. கேரளப்பகுதியில் இருக்கும் குவாரியானது கேரள அரசுக்கு சொந்தமானது. குமரி மாவட்டப் பகுதியிலிருக்கும் தேவியோட்டில் இருக்கும் குவாரியானது தனியாருக்கு சொந்தமானது எனக் கூறுகிறது அந்த அறிக்கை. மேலும், 400 ஏக்கர் நிலப்பரப்பில் தென்னை மரங்களும், வேப்ப மரங்களும் நிறைந்து காணப்படும் அந்த மலைப் பகுதியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கற்களானது சாலை மார்க்கமாக 17 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் குளச்சல் துறைமுகத்திற்கு கொண்டு சென்று, அங்கிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிற்கு மிதவை வழியாக கொண்டு செல்வது தான் திட்டம் என அந்த அறிக்கை கூறுகிறது.

இப்படியிருக்க, போக்குவரத்து வசதியைக் கருத்தில் கொண்டு தான் அவர்கள் தேங்காய்ப்பட்டினம் மீன் பிடித் துறைமுகத்தை தேர்வு செய்திருக்கக் கூடும் என்கிறார் ஸ்டான்லி காஸ்மிக். “ தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் ஆழம் குறைந்த பகுதி. அங்கு அவர்களின் மிதவையானது கொண்டு செல்ல போதிய ஆழம் இல்லை தான். ஆனாலும், தாங்கள் அப்பகுதியை ஆழப்படுத்தி, போதிய வசதிகளை இன்னும் விரிவுபடுத்தித் தருகிறோம் என அதானித் தரப்பினர் உள்ளூர் மீனவர்களுக்கு உறுதி கூறியிருந்தனர். ஆனால், மீனவர்கள் அதனை ஏற்கவில்லை” எனக் கூறுகிறார்.

காஸ்மிக்கின் கருத்தையே  நெய்தல் மக்கள் இயக்கத்தின் தலைவர் குறும்பனை பெர்லினும் பிரதிபலித்தார். “ கிட்டதட்ட 40 லட்சம் டன் பாறைகள் குமரி மாவட்டத்திலிருந்து கொண்டு செல்லப்படும் என்கிறார்கள். இது சாதாரண தொகையல்ல. அடுத்த தலைமுறையினர் குமரி மாவட்டத்தில் உடைந்து உருக்குலைந்து போன மேற்கு தொடர்ச்சி மலையையே காணக் கூடிய அவல நிலை ஏற்படும்” எனக் கூறுகிறார்.

அத்துடன், “இவ்வளவு டன் பாறைகள் மிதவையில் கொண்டு செல்லப்படும் போது, அதற்குரிய மிதவைக் கப்பல்கள் தேங்காப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்தினுள் ஒரே நாளில் பலமுறை வர வேண்டியதிருக்கும். அதனால், ஏற்கனவே தொழில் இல்லாமல் அவதியுறும் மீனவர்கள் இப்படியொரு நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். சில நேரங்களில் படகுகள் மிதவைக் கப்பலுடன் மோதி உடைந்தால் எதுவும் செய்ய முடியாது” எனக் கூறுகிறார்.

ஏற்கனவே, தேங்காய்பட்டினம் முதல் உள்ள மேற்கு நோக்கிய கடற்பகுதிகள் மிகப் பெரிய அளவில் கடலரிப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில்,தேங்காய்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தை மேலும் ஆழப்படுவதன் மூலம் இந்த கடலரிப்பு இன்னும் தீவிரமாகக் கூடும் என்ற அச்சம் இப்பகுதி மீனவர்கள் மத்தியில் பீடித்திருந்தது.

இதனிடையே, பலதரப்புகளிலும் எதிர்ப்புகள் எழுவதை கவனித்த குமரி மாவட்ட நிர்வாகம், இதற்கான கருத்துக் கேட்புக் கூட்டத்தை நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து, விழிஞ்ஞம் துறைமுகத் திட்ட அதிகாரிகள் தரப்பில் தமிழக அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அதில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், “ குமரி மாவட்ட நிர்வாகத்துடனும், தமிழக அரசுடனும் கற்களை எடுத்து செல்ல அனுமதி கோரினோம். ஆனாலும் மறுத்துவிட்டார்கள். இதனால், பத்தனம் திட்டயில் உள்ள அரசு குவாரியிலிருந்து கற்களை எடுக்க முடிவு செய்துள்ளோம். அரசும் இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டுள்ளது. பத்தனம் திட்டயில் உள்ள ரானிப் பகுதியிலிருந்து கற்களை வாகனங்கள் மூலம் கொல்லம் கொண்டு வந்து, அங்கிருந்து படகில் விழிஞ்ஞம் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இதனால், எங்களுக்கு கொஞ்சம் கூடுதலாக செலவாகும்” என்றார்.


Share the Article