English தமிழ்

Share the Article

துப்பாக்கிச் சூடு நடந்த 5 தினங்களுக்குப் பின்னர், இன்மதி சார்பில் சென்ற பத்திரிக்கையாளர் குழுவிடம், ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி எழுத வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்திருந்தார் காட்வின். அவரது ஒரே சகோதரியான ஸ்னோலினின் மரணத்தை விட, அவர் எதற்காக இறந்தாரோ அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்பதில் உறுதியாக இருப்பதாக கூறினார் அவர்.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நபர்களில் 18 வயதேயான ஸ்னோலினும் ஒருவர். “ ஸ்டெர்லைட் ஆலை  நிரந்தரமாக மூடப்படும் வரை நாங்கள் எங்களது மகளின் உடலை வாங்கமாட்டோம்” என்று உறுதியுடன் கூறியிருந்தார், ஸ்னோலினின் தாயார் வனிதா.

சென்னை உயர்நீதிமன்றம் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் உடலை மறுபிரேத பரிசோதனைக்குட்படுத்திய பின்னரே அவற்றை குடும்பத்தினர் கையில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

ஜூன் 3 ஆம் தியதி ஞாயிறு காலை  10.30  மணிக்கெல்லாம், அதிகாரிகள் ஸ்னோலினின் உடலை அவரது தந்தை ஜெக்சனிடம் கொடுத்திருந்தனர். மீனவக் குடும்பத்தை சேர்ந்த அந்த இளம்பெண்ணின் உடல், மீன்பிடித் துறைமுகம் அருகில் இருக்கும் மினி சகாயபுரத்திலிருக்கும் அவரது வீட்டிற்கு கடைசியாக ஒருமுறை வந்தது. 10 நிமிடங்கள் தான். திரண்டிருந்த மக்களின் கண்ணீர் கேள்விகளுக்கு விடை தெரியாமல், இறுதி திருப்பலிக்காக கொண்டு செல்லப்பட்டது ஸ்னொலினின் உடல். 20 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் கலந்து கொண்டு சிறப்புப் பிராத்தனை நடத்த, ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் மல்க வழியனுப்ப, இறுதி யாத்திரையானாள் ஸ்னோலின்.

“ போலீஸை அஞ்சலி செலுத்து விடக் கூடாது என்று தான் இருந்தோம். ஆனாலும், சில நல்ல மனசுள்ள போலீஸ்காரர்கள் யூனிபார்மில்லாமல் வந்து, பாப்பாவின் உடலுக்கு மண் அள்ளி போடுவதை கவனித்தோம்” என நா தழுதழுக்க பேசினார் காட்வின்.

“சில நல்ல மனசுள்ள போலீஸ்காரர்கள் யூனிபார்மில்லாமல் வந்து, பாப்பாவின் உடலுக்கு மண் அள்ளி போடுவதை கவனித்தோம்”

10 ஆம் வகுப்பு படித்து,ஹோட்டல் மேனேஜ்மென்ட்முடித்த காட்வின், தனது படிப்புக்கு எவ்வித சம்பந்தமில்லாத, சவுதி அரேபியாவில் ஆயில் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். “வீட்டில் அப்பா கடல் தொழிலுக்கு போகிறார், தம்பியும் 12 ஆம் வகுப்பு முடித்த பின்னர் கடல் தொழிலுக்குத் தான் போகிறான்.” எனக் கூறும் அவர், ஸ்னோலின் தனது மனைவி மெரில்டாவுக்கு உதவியாக சில தையல் வேலைகளை செய்து வந்தார் எனக் குறிப்பிடுகிறார். மேலும், 10 ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்த அவர், சில தொழிற்கல்விகளை கற்ற பின்னர் 12 ஆம் வகுப்பை தனித் தேர்வாக இந்த ஆண்டு தான் எழுதி வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து சட்டம் படிக்க வேண்டுமென்பதே அவரது கனவாக இருந்தது.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர் ஸ்னோலின். 22 ஆம் தியதி அன்று காலை காட்வினை தவிர அவரது வீட்டிலிருந்த அனைவரும் அந்த போராட்டத்திற்கு சென்றுவிட்டனர். ஸ்னோலினின் தாய் வினிதா, கொஞ்சம் பேரணியில் கொஞ்சம் பின்தங்கி வர, ஸ்னோலின், அவரது அண்ணியான மெரில்டா மற்றும்  இரு குழந்தைகளும் முன் வரிசையில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக, ஸ்னோலின் ஓங்கி முழக்கங்களை எழுப்பியபடியே  வந்து கொண்டிருந்தார்.

“பாப்பா, குண்டடிப்பட்டு இறந்துவிட்டாள் என்பதை அறிந்த பின்னர் தான் வீட்டிலிருந்த நான் ஓடோடி போனேன். பின்னர் தாசில்தாரும், வில்லேஜ் ஆபீஸரும் மருத்துவமனையில் இருக்கும் உடல் உங்கள் மகளுடையது தானா ? என உறுதி செய்ய வரும்படி எனது தந்தையை அழைத்தனர். அங்கு போனபிறகு தான் ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னார்கள். ஆனால், அதை வாசித்து பார்த்துவிட்டு, அதில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடலை பெற்றுக் கொள்கிறோம் என சம்மதிப்பதைப் போல் எழுதியிருந்ததால் கையெழுத்து போட முடியாது என மறுத்துவிட்டோம். பின்னர் நாங்களாகவே, ஒரு மனு எழுதி ஒப்படைத்தோம்.” எனக் கூறினார்.

“மருத்துவமனைக்கு போன போது  ஒரு பேப்பரில் கையெழுத்து போட சொன்னார்கள். ஆனால், அதை வாசித்து பார்த்துவிட்டு, அதில் பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உடலை பெற்றுக் கொள்கிறோம் என சம்மதிப்பதைப் போல் எழுதியிருந்ததால் கையெழுத்து போட முடியாது என மறுத்துவிட்டோம்.”

ஸ்னோலின் கல்லால் எறிந்து கொல்லப்பட்டார், என வாட்ஸ் அப்பில் பரவலாக ஒரு தகவல் பரப்பப்பட்டது. ஆனால், முதலில் நடந்த பிரேத பரிசோதனையில் காலில் சில காயங்களும் (அது ஓடும் போது கீழே விழுந்ததாக இருக்கலாம் எனக் கூறுகிறார்) நெற்றியில் ரப்பர் தோட்டா பட்டதும், தொடர்ந்து பின் தலையில் பட்ட துப்பாக்கி தோட்டா, வாய் வழியாக வெளியேறியதையும் முதலில் பரிசோதனை செய்தவர்கள் தங்களிடம் கூறியதாக சொல்லும் காட்வின், இரண்டாவது பரிசோதனையிலும் அதே முடிவுகள் தான் இருக்கும் என தாங்கள் நம்புவதாகக் கூறுகிறார்.

துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அனைத்தையும் ஒன்றாக அடக்கம் செய்து நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும் என்பது தான் ஸ்னோலின் குடும்பத்தாரின் விருப்பமாக இருந்தது. அதனாலேயே உடலை உடனடியாக பெற்றுக் கொள்ளத் தயங்கியதாக கூறுகிறார் காட்வின். ஆனால், மேலும் 6 பேரின் உடல்கள் ஏற்கனவே அடக்கம் பண்ணப்பட்ட நிலையில், இனி வைத்து கொண்டிருப்பது நல்லதல்ல என முடிவு செய்த பின்னர் தான் உடலை பெற்றுக் கொண்டதாகக் கூறும் காட்வின், அரசு தரப்பிலிருந்தோ, போலீஸ் தரப்பிலிருந்தோ உடலை உடனடியாக பெற வேண்டும் என எந்த நெருக்கடியும் தங்களுக்கு தரவில்லை எனக் கூறுகிறார்.

“ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட வேண்டும். தூத்துக்குடியை சுற்றியுள்ள  இந்த ஆலைக் கழிவுகள் கடலில் கலப்பதால், கடந்த காலங்களில் 10 நாட்டிகல் மைல் தொலைவில் கிடைக்கும் மீன்களைப் பிடிக்க தற்போது 50 நாட்டிகல் மைல்கள் கடக்க வேண்டியிருக்கிறது. இனியொரு முறை மீண்டும் ஆலை திறக்கப்படுமாயின், நாங்கள் மீண்டும் களத்தில் இறங்கி போராடுவோம்” என்றார் தீர்க்கமாக.

ஆனால்,  துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களில் இன்னும் 6 பேரின் உடல் அரசு மருத்துவமனையில்  இன்னும் பிரேத பரிசோதனை செய்யப்படாமலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது குறித்து இறந்து போனவர்களில் ஒருவரான கிளாஸ்டனின் சகோதரியிடம் கேட்ட போது  “கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு ஒன்று இருப்பதாகவும்  ஜூன் 6 ஆம் தியதி விசாரணைக்கு வந்து அதில் ஏதேனும் தீர்ப்பு வந்தால் மட்டுமே பரிசோதனை செய்ய முடியும் என அதிகாரிகள் எங்களுக்கு சொன்னார்கள் ” எனக் கூறினார்.


Share the Article