English தமிழ்

Share the Article

கம்யூனிச தத்துவத்தை உலகிற்கு ஈந்த காரல்மார்க்ஸ் வர்க்கப்போரில் நடுத்தர வர்க்கம் அழிந்தே போகும் என்று கணித்தார். ஆனால் அவரது ஆரூடம் பொய்த்தது. நடுத்தரவர்க்கத்தினரின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியது.

ஒடுக்கப்படுவோரின் எழுச்சிகள் தொடர்ந்து தோல்வியுறுவதற்கு நடுத்தரவர்க்கத்தினரே காரணமாயிருந்து வந்திருக்கின்றனர். நடுத்தர வர்க்கத்தினர் என்போர் யார், வருமான வரையறைகள் என்ன, தோராயமாக நடுத்தர வர்க்கத்தினர் என்போர் எவ்வளவு பேர் இருக்கக்கூடும், அவர்கள் விருப்பங்கள், லட்சியங்கள் என்ன, இவற்றையெல்லாம் தெளிவாகக் கூறமுடியவில்லை. பல்வேறு சிக்கல்கள், குழப்பங்கள்.

சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்கும் ரஜினி காந்த்

ஆனால் ஒன்றுமட்டும் உறுதி. அவர்களுக்கு சமூக இயக்கத்தில் மிக முக்கிய பங்கு இருக்கிறது. ஒரு நாடு செல்லும் திசையினை தீர்மானிக்கும் வல்லமை படைத்தவர்களாகக்கூட இருக்கின்றனர் இந்த நடுத்தரவர்க்கத்தினர்.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்துத்துவா, மற்றும் தாராளமயமாக்கலுக்கு ஆதரவான மன நிலை உருவாக நடுத்தரவர்க்கமே முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்துத்துவா, மற்றும் தாராளமயமாக்கலுக்கு ஆதரவான மன நிலை உருவாக நடுத்தரவர்க்கமே முக்கிய காரணம் என்றால் அது மிகையாகாது.

இத்தகைய நடுத்தரவர்க்க சிந்தனைகளை நன்கு புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்கள் கொள்கை பிரகடனங்களையும் தேர்தல் உத்திகளையும் அமைத்துக்கொண்டதால் தான்  பாரதீய ஜனதா மத்தியிலும்,  பல மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்றமுடிந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

நடிகர் ரஜினிகாந்தும் அதே பாணியில் பயணித்து தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முனைகிறாரோ என்று எண்ணத்தோன்றுகிறது.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டிற்கு பலியானவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தியிருக்கிறார், உயிரிழந்தோருக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஈட்டுத்தொகை அறிவித்திருக்கிறார், ஸ்டெர்லைட் நிர்வாகத்தையும் கண்டித்திருக்கிறார், ஆனால் அதே நேரம் அவர் அனைத்திற்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள்தான் காரணம் என்றும் கூறியிருக்கிறார். கடமையைச் செய்யும் காவல்துறையினரையே  தாக்குவோர் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும், தொடரும்  போராட்டங்கள் மாநிலத்தை சுடுகாடாக்கிவிடும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

இந்தக் கருத்துக்கள் சமூக வலை தளங்களில் கடும் விமர்சனத்திற்குள்ளாயிருக்கிறது. மற்ற சில அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனர். அதனாலேயே ரஜினி ஏதோ பெரும் பிழை செய்துவிட்டார், பொது மக்களின் கோபத்திற்கு ஆளாகிவிட்டார், இந்நிலையில் தேர்தல்களில் அவருக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று கணிப்பது தவறாகவிருக்கலாம்.

மாறாக நடுத்தரவர்க்கத்தினரின் விருப்பங்களை, கோபங்களை உணர்ந்துதான் ரஜினி செயல்படுகிறார், எனவே திரைப்படங்கள் வழியே அவருக்கு உருவாகியிருக்கும் செல்வாக்கு, இப்போது மேலும் பரவ, உறுதிப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் வாதிடமுடியும்.

போராட்டமென்றால் பேரழிவு என்ற ரீதியில் முக்கிய அரசியல் தலைவர்கள் பேசியது கிடையாது.

போராட்டக்காரர்களை அடக்க வேண்டும், ஒடுக்கவேண்டும் என்றெல்லாம் காலஞ்சென்ற பத்திரிகையாளர் சோ ராமசாமிதான் சொல்லிவருவார். அவ்வபோது ஏதாவது ஆங்கில ஏடுகள் வேலை நிறுத்தம் தவிர்க்கப்படவேண்டும், போராட்டங்கள் பொருளாதாரத்தை சீர்குலைக்கின்றன என்று தலையங்கங்கள் எழுதும். மற்றபடி சமூக விரோத சக்திகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது, போராட்டமென்றால் பேரழிவு என்ற ரீதியில் முக்கிய அரசியல் தலைவர்கள் பேசியது கிடையாது.

ரஜினிகாந்த் இன்னமும் கட்சி துவங்கவில்லைதான். ஆனாலும் தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்திருக்கிறார். அடுத்த சட்டமன்றத்தேர்தல்களிலும் போட்டியிடப் போவதாகக் கூறுகிறார். கட்சி இயந்திரத்தை சீர்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்தப் பின்புலத்தில் தான் ரஜினிகாந்தின் கருத்துக்கள் அகில இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படுகின்றன, தொலைக்காட்சி சானல்களில் விவாதிக்கப்படுகின்றன. அதாவது சோ போன்றோரின் சிந்தனைகள், நடுத்தர வர்க்கத்தினரின் கவலைகள், இப்போது பேசுபொருளாகிவிட்டது, போராட்டங்களில் இறங்கத் துணியாத கோழைகளைப் பற்றி நமக்கென்ன என்ற இறுமாப்பு மறையத் தொடங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை.

அதே நேரம் இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். மனிதர்கள் பொதுவாக கலவரங்களை,  மோதல்களை  விரும்புவதில்லை. தத்தம் வாழ்வாதாரங்களை பெருக்கிக்கொள்ள அமைதியான சூழல் வேண்டும், நிலையான அரசு வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். சமூகத்தில் மிக மோசமாக சுரண்டப்படுவோர் கூட எப்படியாவது பிழைக்கவேண்டும் என்றுதான் விரும்புவார்களேயன்றி, இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கி போலீசாருடன் மோத துடிப்பதில்லை. (கொடுந்துயருக்கு அவர்கள் தள்ளப்படும்போது விபரீதங்கள் நிகழ்வது வேறு.)

அரசுகள் அத்துமீறி செயல்படும்போது மேடைகளில் குமுறுவோர் ஆட்சிக்கு வந்தால் போராட்டங்களை ஒடுக்கவே தலைப்படுகின்றனர். உலகெங்கும் அதே நிலைதான். தமிழ்நாடு ஒன்றும் விதிவிலக்கில்லை.

தலைவிரிகோலத்தில் ஒரு பெண்மணி, கூலி உயர்வு கேட்டான் அத்தான், குண்டடிபட்டு செத்தான் என்று கூறுவதாக வரையப்பட்ட சுவரொட்டி 1967 தேர்தல்களில் பட்டிதொட்டியெங்கும். அதற்குப் பின்னிருந்தவர்கள் திமுகவினர். ஒரு தொழிலாளர் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டினை சுட்டிக்காட்டி, ஆளும் காங்கிரசார் கொடுங்கோலர்கள் என்று பிரச்சாரம் செய்தது திமுக.

ஒடுக்கப்படும், ஓரங்கட்டப்படும், சுரண்டப்படும் மக்களின் பிரதிநிதியாக தங்களைக் காட்டிக்கொள்ள அத்தகைய சந்தர்ப்பங்களை பயன்படுத்தி அதில் வெற்றியும் கண்டது திமுக.

1967லிருந்து இன்றுவரை திமுகவும், அதிலிருந்து கிளைத்த அ இஅதிமுகவுமே மாறி மாறி ஆட்சி செய்துவந்திருக்கின்றன.

ஆனால் இந்த ”விளிம்புநிலை மாந்தர்களின்” அரசுகள் அனைத்துமே போராட்டமென்றால் துவக்கைத் தூக்கு என்றுதான் காவல்துறைக்கு உத்திரவிடுகின்றன. ஆஹா நம் மக்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் போராட்டங்களுக்கும் நியாயங்கள் இருக்கலாம், அதிரடியாக ஏதும் செய்துவிடவேண்டாம் என்று பின்வாங்குவதில்லை.

”விளிம்புநிலை மாந்தர்களின்” அரசுகள் அனைத்துமே போராட்டமென்றால் துவக்கைத் தூக்கு என்றுதான் காவல்துறைக்கு உத்திரவிடுகின்றன.

ஆட்சியிலிருந்தால் துப்பாக்கி சூடு, எதிர்க்கட்சி என்றால், ”துப்பாக்கி சூடு அக்கிரமம், அநியாயம்,” என முழங்குவதே வழமையாகிவிட்டது. மக்கள் இதை நன்கு புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை ரஜினியும் தெரிந்துவைத்திருக்கிறார்.

தூத்துக்குடி குறித்த செய்தியாளர் சந்திப்புக்களில் ரஜினிகாந்த் போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கியவர் ஜெயலலிதா என வாயாரப் புகழ்ந்தார்.

போலீசாருக்கு ”கட்டற்ற சுதந்திரத்தை” வழங்கும் மிகத் துணிச்சலான பெண்மணியாக பார்க்கப்பட்டார் ஜெயலலிதா. அது எந்த அளவிற்கு உண்மையானது,  அவர் எத்தனை சிறந்த நிர்வாகி என்பதெல்லாம் வேறு. ஆனால் மக்கள் மத்தியில் அவர் மிக உறுதிபடைத்த பெண்மணியாகப் பார்க்கப்பட்டார் என்பதைத்தான் நாம் இங்கே நோக்கவேண்டும்.

ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பிறகு நடைபெற்ற 1991 தேர்தல்களில்தான் பெரும் வெற்றி பெற்று, முதன் முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. ஸ்ரீபெரும்புதூர் பயங்கரத்திற்கு காரணமாகக் கருதப்பட்டவர்கள் விடுதலைப் புலிகள். அவர்களை சுதந்திரமாக நடமாடவிட்டு, இந்தியாவின் முன்னாள் பிரதமரே தமிழ்மண்ணில் கொலை செய்யப்பட காரணமாக இருந்தது திமுகவும் கருணாநிதியுமே என்ற ஒரு கருத்து மக்களிடையே பரவலாக இருந்ததால்தான், அ இஅதிமுக 1991 தேர்தல்களில் மிகப் பெரும் வெற்றி ஈட்டியது, வெறும் இரண்டு சட்ட மன்றத்தொகுதிகளில் மட்டுமே திமுக வெல்ல முடிந்தது.

அத்தகைய பின்னணியில் முதல்வரான ஜெயலலிதா, காவல்துறை வலிமைப் படுத்துவதிலும், அவர்களுக்கான வசதிகளைப் பெருக்குவதிலும் மேலதிக அக்கறை காட்டினார். மேடைதோறும் சட்டம் – ஒழுங்கைக் காப்பதே தன் முதற்கடமை என்று முழங்கிவந்தார்.

பிந்தைய ஆட்சிக்காலங்களில் அவரது பிரகடனங்களின் உக்கிரம் மெல்ல மெல்லத் தணிந்தது. அதிரடியாக நடந்துகொள்வார், அப்புறம் பின்வாங்குவார், ஆனாலும் அவர் இரும்புப் பெண்மணி, எதற்கும் அஞ்சாத முதல்வர், என்ற பிம்பம் நிலைத்துவிட்டது.

நேர் மாறாக கருணாநிதியோ சமூக விரோத சக்திகளை கட்டுக்குள் வைக்கவில்லை, இவரது உறுதியின்மையால் நாம் பேரிழப்புக்களுக்குள்ளாகிறோம் என மக்கள் நம்பத் தொடங்கினர். 1997 சாதிக்கலவரங்கள், அதற்கடுத்த ஆண்டில் கோவை குண்டுவெடிப்புக்கள் இவையெல்லாம் அத்தகைய புரிதல்கள் மக்கள் மனங்களில் வலுப்பெற வழி செய்தன.

இப்போது ஜெயலலிதா இல்லை, கருணாநிதியே உடல்நலக் குறைவு காரணமாக முடங்கிவிட்டார், இந்த நிலையில் அமைதி, வளம், நிலையான நிர்வாகம் இவற்றை விரும்பும் நடுத்தரவர்க்கத்தினரை ஈர்க்கும் வகையில்தான் நடிகர் ரஜினிகாந்த் துப்பாக்கிச் சூட்டிற்கு ஆர்ப்பாட்டக்காரர்களை பொறுப்பாக்கியிருக்கிறார், மக்கள் அதிகாரம் போன்ற தீவிரவாதக் குழுக்கள் குறித்து பொதுவாக நிலவும் அச்சங்களை நாடறியச் செய்திருக்கிறார், தொடர்ந்து போராட்டங்கள் நடந்துகொண்டேயிருக்குமானால் யார் இங்கே முதலீடு செய்ய முன்வருவார்கள் என்று கவலைப்பட்டிருக்கிறார், போலீசாருக்கும் பரிந்து பேசியிருக்கிறார், சுருக்கமாக தன்னை இன்னொரு ஜெயலலிதாவாக காட்டிக்கொள்ள முயன்றிருக்கிறார் ரஜினி.

இதெல்லாம் தமிழகத்தில் எடுபடுமா? ஜல்லிக்கட்டில் தொடங்கி மாநிலமெங்கும் தொடர்போராட்டங்கள் என்றாகிவிட்ட நிலையில் அமைதி, சட்டம், ஒழுங்கு என பிரசங்கித்தால் யார் கவலைப்படப்போகிறார்கள் என கேலி செய்கின்றனர் ரஜினியை விமர்சிப்போர்.

மக்கள் நீதி மய்யம் என கட்சியையே துவக்கிவிட்ட நடிகர் கமல்ஹாசன் இப்படியெல்லாம் மக்கள் போராட்டங்களுக்கெதிரான கருத்துக்களைத் தெரிவித்து அதிருப்திக்குள்ளாவதில்லை, ரஜினிக்கு அந்தத் தெளிவு இல்லை எனவும் கூறப்படுகிறது.

இன்னொருபுறம் ரஜினிகாந்தை பாரதீய ஜனதாதான் முன்னிறுத்துகிறது. அவர்கள் கால் பதிக்கமுடியாத சூழலில், ஆன்மிக அரசியல் பேசும், அதே நேரம்  சினிமாக் கவர்ச்சி படைத்த ரஜினிகாந்த் மூலமாக தங்கள் இந்துத்துவ நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள முயல்கின்றனர் சங்க பரிவாரத்தினர் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

ஆனால் பாஜக தன் அரசியல் வளர்ச்சிக்கு உதவப்போவதில்லை, மாறாக பலரை அந்நியப்படுத்தக்கூடும் என்றறிந்துதான் ரஜினி சற்று தள்ளியே நிற்கிறார், பாஜக தங்கள் செல்லப்பிள்ளை அவர் என்பதுபோல காட்டிக்கொண்டாலும் ரஜினி மசிவதில்லை.

பிராமணர்கள், மற்றும் இந்துத்துவ சிந்தனைகளில் சிக்கிய சில பிராமணரல்லாதார் இவர்கள் மட்டுமே ரஜினிகாந்திற்கு பின்னால் அணிதிரள்கின்றனர் என்பது போன்ற ஒரு பிரமையும் உண்டு.

இத்தகைய கணிப்புக்களின் தொடர்பில் நாம். பத்திரிகையாளர் சோ ராமசாமியின் வெற்றிகளைப் பார்ப்போம். அவரது துக்ளக் பத்திரிகை வாசகர்கள் எண்ணிக்கையில் ஒன்றும் மிக அதிகமில்லை. அவர் சார்ந்த பிராமணர்களும் மிகச் சிறுபான்மையினரே. ஆனால் கருணாநிதி குறித்தும், பொதுவாக திராவிடக் கட்சிகள் குறித்தும் அவர் கூறிவந்த மிக மோசமான எதிர்மறை கருத்துக்கள் மக்கள் மனங்களில் நிலை பெற்றனவா இல்லையா?.

சோவுக்கே அத்தகைய வெற்றி என்றால் ரஜினிக்கு? அமைதி, வளம், நிலையான நிர்வாகம் இவற்றை நாடும் நடுத்தரவர்க்கத்தின குறிவைக்கிறார். அவர்கள் மத்தியில் உருவாகும் நல்லெண்ணம், மதிப்பு, சமூகம் முழுமைக்கும் பரவ அதிக காலம் பிடிக்காது எனவும் அவர் நம்பக்கூடும்.

அவரது நம்பிக்கைகள் சரிதானா என்ற கேள்விக்கு காலம்தான் பதில்கூறவேண்டும்.


Share the Article