English தமிழ்

Share the Article

மேகனா தன் கைகளைத் தட்டினார். “ஏன் இப்படி பண்றீங்க?” என்று கத்திச் சொன்னார். கூட்டத்தில் இருக்கும்பொழுது, அங்கிருப்பவர்களின் கவனத்தைத் தங்களின் பக்கம் திருப்புவதற்கும், பணம் கேட்பதற்கும் திருநங்கைகள் கைகளைத் தட்டுவார்கள். போராட்டத்திற்கு பிறகு ஆறு நாட்கள் கழித்து இன்மதிக்காக பேசியபோது, அவர் பிச்சையெடுப்பதற்காக அங்கு வரவில்லை என்று சொன்னார். ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை உடனடியாக மூடப்படவேண்டும் என்ற கோரிக்கையோடு, அவரும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்திருக்கிறார்.

மே 22ம் தேதி நடந்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரமாயிரம் பேர்களுள், மேகனா யாரோ ஒருவரல்ல. பெண்களும், குழந்தைகளும் சேர்ந்தே கலந்துகொண்ட அந்தப் போராட்டத்தில், திருநங்கைகளும் காவல்துறையினருக்கு  கண நேர தயக்கத்தை ஏற்படுத்தும்  விதத்தில் முதல் வரிசையில் நின்றார்கள்

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டங்களை முதன் முதலாக தொடங்கியவர்கள், மீனவர்கள்தான். ஆனால், வருடங்கள் செல்லச்செல்ல மற்ற சமூகத்தினரும் அவர்களுடன் கைகோர்த்துக் கொண்டனர். ஆலைக்கு அருகிலிருந்த குமாரெட்டியாபுர கிராமத்திலிந்து தொடங்கிய 100வது நாள் போராட்டத்தில், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த கிராமத்தினர் அனைவரும் இணைந்தனர். மொத்த பகுதியும் போராட்டத்திற்கு ஆதரவாக இருப்பதற்கு அறிகுறியாக, மாற்றுத்திறனாளிகளும், திருநங்கைகளும் கூட பங்கெடுத்தார்கள்.

“இங்கிருக்கும் எல்லோருக்கும், இந்த உலகத்திற்கும், நாங்களெல்லாம் இப்போராட்டத்தின் ஒரு பகுதியினர் என்பதைக் காட்ட விரும்பினோம்” என்றார் மேகனா. 

   “இங்கிருக்கும் எல்லோருக்கும், இந்த உலகத்திற்கும், நாங்களெல்லாம் இப்போராட்டத்தின் ஒரு பகுதியினர் என்பதைக் காட்ட விரும்பினோம்” என்றார் மேகனா.

மூன்றாவது நாள் போராட்டத்தன்று, குமார ரெட்டியாபுரத்துக்குச் சென்றதை நினைவுகூர்கிறார் மேகனா. கிராமத்தினர் எல்லோரும், அவர்களின் ஆதரவை வரவேற்றதாகவும், விரும்பியதாகவும் கூறுகிறார். அதிகாரிகளைச் சந்திப்பதற்கும், அழுத்தம் கொடுப்பதற்கும் அவரும், அவரது திருநங்கைகள் சமூகமும் பல இடங்களில் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.

மே மாதம் 22ம் தேதி, பனிமயமாதா தேவாலயத்தின் முன்பு மீனவ மக்கள் ஒன்றுகூடியதும், நித்யாவும், மேலும் ஏழு பேரும் காலை 4 மணிக்கே அங்கிருந்தார்கள். மக்கள் திரள் மெல்ல மெல்லக் கூடுவதை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். “முன்னணியில் இருப்பது என நாங்கள் முடிவு செய்தோம். எங்களுக்கும்  இதே தூத்துக்குடி தான் பிறந்த இடம்”, என்றார் நித்யா.

போராட்டத்தைக் கலைப்பதற்காக, போராட்டக்காரர்களை பலமுறை தடுத்து நிறுத்த முயற்சித்தனர் போலீசார். அப்போது, போலீஸார் ஏற்படுத்தியிருந்த தடுப்புகளை உடைத்தெறிந்துவிட்டு போராட்டக்காரர்கள் முன்னேறிக் கொண்டிருந்த போது, திருநங்கைகள் முதல் வரிசையிலேயே  தொடர்ந்து  இருந்து  போராட்டத்தை முன்னெடுத்தனர். போலீசாரின் தடியடி, கல்லெறிதல், கண்ணீர் புகைக் குண்டு தாக்குதல் என எல்லாவற்றையும் கடந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அடைந்தது மக்கள் திரள். 18 வயதான ஸ்னோலின், துப்பாக்கியால் சுடப்பட்டு அங்கு தான் ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்தார்.

இதற்கிடையே, தனது திருநங்கை மகளான (திருநங்கைகள், தங்களுக்குள்ளாக மகள், சகோதரி, பேத்தி என தத்தெடுத்துக்கொண்டு, தங்களுக்குள் நெருக்கமான உறவை உருவாக்கிக் கொள்பவர்கள்) ரதியும், அங்கு வந்ததாகச் சொல்கிறார் மேகனா. இருவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பைக்கில் சென்றுள்ளனர். அங்கு ரதி, போராட்டக்காரர்களுடன் இணைய, மேகனா கரும்புச்சாறு விற்பவர் அருகில் நின்று கொண்டிருந்தார்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு மக்கள் சிதறி ஓடத் தொடங்கியவுடன், போலீஸ் வாகனத்தை போராடியவர்கள் கவிழ்த்ததாகக் கூறுகிறார் மேகனா. அவரது ஸ்கூட்டரையும், போராடியவர்கள் எடுக்க முற்பட்ட  பொழுது  அதில் ஒருவர் தன்னைப் பார்த்து “அக்கா, உங்க ஸ்கூட்டரை எடுத்ததற்கு மன்னிச்சிருங்க” என்று தனது தவறை உணர்ந்து கூறியதாகச் சொல்கிறார் மேகனா.

மேகனா, ரதி மற்றும் நித்யா மூவரும் ஸ்கூட்டரில் ஏறி, அந்த இடத்தை விட்டுச் சென்றதாகக் கூறுகிறார் அவர். அவர்களின் வீட்டினருகே ஒரு இடத்தில் நின்று கொஞ்சம் தண்ணீர் குடித்திருக்கிறார்கள். “அப்போதான் நான் உடைஞ்சுபோய் அழுதேன்” என்கிறார் மேகனா.

அன்று மதியம் அரசு மருத்துவமனைக்குச் சென்று, காயமடைந்தவர்களுக்கு உதவியும், மருந்துகளுக்கு ஏற்பாடு செய்ததையும் நினைவு கூர்கிறார் அவர். சமீபகாலத்தில், திருநங்கைகளை நோக்கிய பார்வைகள் மாறியிருப்பதாகக் கூறுகிறார். “தூத்துக்குடியில் நாங்க மதிக்கப்படுறோம்” என்கிறார் அவர். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் திருநங்கைகளின் பங்களிப்பினால், தங்களை நோக்கிய பொது சமூகத்தின் பார்வை மாறியிருக்கிறது எனக் கூறினார்.

அழுத்தமாக, பிணைந்து வாழும் இந்த பிணைக்கப்பட்ட சமூகத்தில், மற்றவருக்கு தேவையிருக்கும்பொழுது ஆதரவு தரத் தயாராக இருப்பது தான், அவர்களின் வாழ்வியல் வழியாக இருக்கிறது என்கிறார் மேகனா.

“எங்களுடைய (அசலான ரத்த உறவுகள்) குடும்பத்தைச் சேர்ந்தவங்க டிவியில எங்களைப் பார்த்தா, எங்களை ஏத்துக்கிற மனநிலைக்கு அவங்க வருவாங்க” என்கிறார் அவர். 

 “எங்களுடைய (அசலான ரத்த உறவுகள்) குடும்பத்தைச் சேர்ந்தவங்க டிவியில எங்களைப் பார்த்தா, எங்களை ஏத்துக்கிற மனநிலைக்கு அவங்க வருவாங்க” என்கிறார் அவர்.

(இக்கட்டுரைக்காக நம்மிடம் பேசிய பின்னர், இப்போராட்டத்தில் திருநங்கைகளின்  குரலும் இருந்ததாக கூறி அவர்களுக்கு மிரட்டும் தொனியில் அழைப்புகள் வந்ததால், அவர்களுடைய பெயர்களை மாற்றிக் குறிப்பிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்கள். நாங்கள் எடுத்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டனர்).


Share the Article